சிறுகதை

செண்டை மேளம் – ராஜா செல்லமுத்து

அந்தத் தெரு வாழைமரம் மாவிலை குருத்தோலை தோரணங்களால் நிரம்பி வழிந்தது. திருமணம் என்று சொல்வதை விட திருவிழாவென்று சொல்லும் அளவிற்கு அந்த திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

உறவினர்கள், விருந்தினர்களை வரவேற்பதற்காக தமிழ்நாட்டில் வாத்திய கருவிகள் ஆயிரம் இருந்தாலும் அதையும் தாண்டி இசைக்கு மொழி ஏது ? என்று கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செண்டை மேளத்தின் சத்தங்கள் விண்ணை பிளந்து கொண்டிருந்தன .

பட்டுப்புடவை கட்டிய பெண்கள் பட்டு சட்டை, பட்டு வேட்டி கட்டிய ஆண்கள் என்று அந்தத் திருமண வீட்டின் வரத்து அதிகமாகி கொண்டே இருந்தது .

செண்டை மேளத்தின் அருகே அவர்களின் வாத்திய இசையை கேட்பதற்காக சிலர் திருமண வரவேற்பையும் மீறி செண்டை மேளச் சத்தத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

பட்டுச் சேலை கட்டி நின்றிருந்த மலர்க்கொடி செண்டை மேளத்தை ரசித்தபடியே நின்று கொண்டிருந்தாள். அங்கு சென்று கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் மலர்க்கொடி ஏன் இந்த செண்டை மேளத்தை இவ்வளவு கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறாள்? என்ற ஒரு ஐயம் ஏற்பட்டது.

செண்டை மேளத்திற்கு தகுந்தது போல தலையை ஆட்டிய படியே இருந்தாள் மலர்க்கொடி

இந்தப் பெண் பெரிய ரசனைக்காரி போல ? என்று அந்தத் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் பேசிக்கொண்டு சென்றார்கள்.

அதில் மலர்க்கொடியை மல்லிகா நிமிர்ந்து பார்த்தார்.

என்ன இந்த பெண் கல்யாணத்துக்கு வந்துச்சா? இல்ல செண்டை மேளத்த பாக்க வந்திச்சா ? என்று மலர்க்கொடியை வியப்பாக பார்த்து ,அந்த இடத்தை விட்டு நகர்வதற்குள், மலர்க்கொடியின் சத்தம் கேட்டது

என்ன இப்படியா அடிக்கிறது? இங்க குடுங்க என்று பட்டு சேலை கட்டிய மாெட்டுத் தாமரையாய் அதுவரையில் நின்று மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த மலர்க்கொடி செண்டை மேளத்தை வாங்கி தன் தோளில் கயிற்றைச் சுற்றி இடுப்பில் செண்டை மேளத்தைகட்டி நிறுத்திக் கொண்டு இரு கைகளிலும் குச்சியை எடுத்து அடித்தாள்.

இதுவரை கேட்ட சத்தத்தை விட செண்டை மேளத்தின் சத்தம் இப்பாேது சிறப்பாக இருந்தது.

திருமண வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் மணமக்களைப் பார்ப்பதை விட செண்டை மேளத்தைப் பார்ப்பதில் தான் குழுமி இருந்தார்கள்.

அதுவும் ஒரு பெண் செண்டை மேளம் அடித்தால் எப்படி இருக்கும்? சண்டை போடுபவர்கள் கூட செண்டை மேளத்தை சிறப்பு என்று உச்சி முகர்ந்து வாழ்த்தி நின்றார்கள்.

எப்பா நம்ம கல்யாணத்துக்கு வந்தமா? இல்ல செண்டை மேளம் பாக்க வந்தமா? இந்த பொண்ணு அடிக்கிறது வேற மாதிரி இருக்கு; வாங்க என்று பெரியவர்கள் கூப்பிட இரு மனதாக திருமண வீட்டுக்குள் சென்றார்கள் சிலர்

மல்லிகாவிற்கு தான் ஆச்சரியம் மேலிட்டது.

என்ன இது? திருமணத்திற்கு வந்தவங்க தான் நின்னுட்டு இருக்காங்கன்னு பார்த்தா, இந்தப் பெண் இந்த அடி அடிக்கிறாளே? இவருக்கு இந்த செண்டை மேளத்தை கற்றுக் கொடுத்தது யார் ? நமக்கெல்லாம் கரண்டி பிடிச்சு சோறு அள்ளுறதுக்கே சிரமமாக இருக்கு. இவருக்கு இந்த இசையை யார் கற்றுக் கொடுத்தது? பெண்களுக்கு இவ்வளவு திறமை இருக்குன்னு வெளியில வந்து பாத்தபோது தான் தெரிகிறது என்று மல்லிகா சட்டென்று தன் கையில் இருந்த 500 ரூபாயை எடுத்து மலர்கொடியின் சேலையில் குத்திவிட்டார்.

அருமையா செண்டை மேளத்த வாசிக்கிறீங்க? நீங்க ஒரு சாதாரண பெண் இல்ல. இசையில் சாதனைப் பெண் என்று கைதட்டினார் மல்லிகா.

அவரின் அன்பைப் பெற்றுக் கொண்ட மலர்க்கொடி தொடர்ந்து செண்டை மேளத்தை வாசித்துக் கொண்டே இருந்தாள்.

அப்போது மல்லிகாவைத் தொட்ட ஒரு பெண்.

அம்மா, இந்த பெண்ணோட வாழ்க்கை உனக்கு தெரியுமா ? இப்ப ஏன் அந்த பொண்ணு செண்டை மேல அடிச்சுட்டு இருக்கான்னு தெரியுமா? என்று கேட்க

தெரியாது என்று தலையாட்டினார் மல்லிகா

அந்த பொண்ணோட வாழ்க்கையே வித்தியாசமானதும்மா. அந்த பொண்ணு சராசரியா படிச்ச பொண்ணு தான் . காதலிச்சு ஒருத்தன கல்யாணம் பண்ணுனா. ஆனா அவன் அவளை ஏமாத்திட்டு ஒரு பெண் குழந்தையோட விட்டுட்டு போயிட்டான்.

ஏன் என்னன்னு கேட்டதுக்கு இந்த பூமியில் வாழ முடியலன்னா, செத்துப் போயிரு; அப்படின்னு சொல்லிட்டு பாேயிட்டான்.

இப்பிடி சொன்னவன் முன்னாடி இந்த பொண்ணு வாழ்ந்து காட்டி இப்ப நிமிந்து நிக்கிறா . செத்துப் போன்னு வீட்டுக்காரன் சொல்லிட்டு போனாலும் அதுக்கு எதிரா எல்லா கல்யாண வீட்டிலும் இவளுடைய செண்டை மேளம் தான் இப்ப ஒலிச்சிக்கிட்டு இருக்கு.

இந்த மொத்த செண்டை மேளத்தையும் அவ தான் விலைக்கு வாங்கி மத்தவங்களுக்கு சம்பளம் கொடுத்துட்டு இருக்கா. புருஷன் விட்டுட்டு போயிட்டான். இனி நம்ம வாழ்க்கை அவ்வளவுதான். நாம சாக வேண்டியது தான் அப்படின்னு நினைக்காம லட்சியத்தோடு வாழ்ந்து இன்னைக்கு. இந்த இடத்துல நின்னுகிட்டு இருக்கா. இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கிற வரைக்கும் இந்த பூமியில எந்த பெண்ணும் தற்கொலையோ? தப்பாவாே போக மாட்டாங்க .அதுக்கு முதல் உதாரணம் இந்த மலர்க்கொடிதான் என்று அந்தப் பெண்மணி சொன்னபோது

அதுவரையில் சாதாரணமாக மலர்க்கொடியை பார்த்துக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு அவளைப் பார்த்ததும் ஒரு மலைப்பு ஏற்பட்டது.

திரும்பி பார்த்தார்,

அவள் அடித்த செண்டை மேளத்தின் ஓசை, இப்பாேது, விண்ணைத்தாண்டி வெடித்து மேலே கிளம்புவது போல் இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *