விழுப்புரம், ஏப்.13-
செண்டூர் கிராமத்தில் பல்லவர் கால சண்டிகேஸ்வரர் சிற்பம், சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டது.
மயிலம் அருகே அமைந்துள்ளது செண்டூர் கிராமத்தை சேர்ந்த பிரபாவதி வீரமுத்து என்பவர் அளித்த தகவலின்பேரில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், செண்டூர் கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிற்பம் மற்றும் சுடுமண் பொம்மை ஆகியவை கண்டறியப்பட்டன.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
செண்டூரில் பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிற்பத்தை அப்பகுதி மக்கள் அய்யனார் என்று வழிபட்டு வருகின்றனர். தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற பல்வேறு பொம்மை உருவங்களையும் கடந்த காலங்களில் நேர்த்திக்கடனாக செய்து வைத்திருக்கின்றனர். இந்த சிற்பம் சண்டிகேஸ்வரர் சிற்பமாகும்.அழகான தலை அலங்காரத்துடனும் காதுகள் மற்றும் கைகளில் அணிகலன்களுடனும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரருக்கு இடதுபுறம் மரம் ஒன்று காட்டப்பட்டுள்ளது.
சண்டிகேஸ்வரர் சிற்பம் பல்லவர் காலத்தை (கி.பி. 8-9-ம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும். 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் சிற்பம் அமைந்துள்ள அதே பகுதியில் மிகவும் சிறிய அளவிலான சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கழுத்து வரை மட்டுமே காணப்படும் இந்த உருவம் குழந்தையின் உருவமாக இருக்கலாம். இந்த பொம்மையும் சண்டிகேஸ்வரர் சிற்பத்தின் காலத்தைச் சேர்ந்தது என மூத்த தொல்லியளாளர்கள் ஸ்ரீதரன், துளசிராமன் ஆகியோர் தெரிவித்து இருக்கின்றனர். செண்டூர் கிராமத்தில் கிராம தெய்வமான அய்யனாராக சண்டிகேஸ்வரர் வழிபடப்பட்டு வந்திருக்கிறார். அந்த வழிபாடு இன்றும் தொடர்கிறது. இந்த வழிபாட்டில் சுடுமண் உருவங்களும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.