செய்திகள்

செட்டிப்பட்டடை, அய்யன், கண்ணாடி ஏரிகளில் குடிமராமத்து பணிகள்: கலெக்டர் அன்புச்செல்வன் நேரில் ஆய்வு

Spread the love

கடலூர், ஜூலை 19–

கடலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிப்பட்டடை, அய்யன், கண்ணாடி ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் செட்டிப்பட்டடை ஏரி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டத்திலுள்ள அய்யன் ஏரி மற்றும் கண்ணாடி ஏரி மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணி மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணி போன்ற பணிகளை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரியினை தூர்வாருவதற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்றிடும் வகையில் 36 ஏரிகளில் குடிமராமத்து பணிகளும், 792 ஏரிகளில் வண்டல் மண் எடுக்கும் பணிகளும், நிலத்தடி நீரை உயர்த்திடும் வகையிலும், ஆற்று நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்றைய தினம் பண்ருட்டி வட்டத்தில் 274 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்படக்கூடிய திருவதிகை கிராமத்தில் உள்ள செட்டிபட்டடை ஏரி, கால்வாய், கரைகளை ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளையும், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 64.36 ஹெக்டரும் விவசாய நிலங்கள் பயன்படக்கூடிய சேராக்குப்பம் அய்யனேரியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைக்கும் பணிகளையும், 41.73 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன்படக்கூடிய கண்ணாடி கிராமம் கண்ணாடி ஏரியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வரும் புனரமைக்கும் பணிகளையும் கலெக்டர் வெ.அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) சிங்காரவேலு, உதவி பொறியாளர் கபிலன், பண்ருட்டி வட்டாட்சியர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *