செய்திகள்

செஞ்சியில் 1½ மணி நேரத்தில் 11 செ.மீ. மழை

விழுப்புரம், ஜூன்.29-

செஞ்சியில் நேற்று மாலை 1½ மணி நேரத்தில் 11 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், கடந்த சில நாட்களாக வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக விழுப்புரம் உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் செஞ்சி பகுதியில் மாலை நேரத்தில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 4.30 மணியளவில் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. பின்னர் வேகமெடுத்து, இடி- மின்னலுடன் கனமழையாக கொட்டி தீர்த்தது. இந்த மழை 1½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. செஞ்சி பஸ் நிலையத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அங்குள்ள கடைகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது. செஞ்சியில் மட்டும் நேற்று மாலை 1½ மணி நேரத்தில் 11.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் மேல்மலையனூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. உளுந்தூர்பேட்டையில் மாலை 4 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. கெடிலம், பெரும்பாக்கம், ஆசனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *