செய்திகள்

மகாபலிபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் ‘மாண்டஸ்’ புயல்

85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

2 நாள் மழை நீடிக்கும்

செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரத்திற்கு ரெட் அலர்ட்

சென்னை, டிச. 9-

மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் பகுதியில் இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் மாமல்லபுரம் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக வீசுகின்றன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், தூத்துக்குடி ஆகிய 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை: சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம், மழை அளவை பொறுத்து மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *