செய்திகள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடியில் நரம்பியல் நவீன அறுவை சிகிச்சைக் கூடம்: கலெக்டர் ஜான்லூயிஸ் திறந்தார்

செங்கல்பட்டு, செப்.20

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1 கோடி மதிப்பில் நவீன நரம்பியல் அறுவை சிகிச்சை கூடத்தினை மாவட்ட கலெக்டர் அ.ஜான்லூயிஸ் திறந்து வைத்தார். இதனால் மூளை நரம்பியல் நோய் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகள் பலனடைவார்கள். மேலும் நவீன தரத்துடன் கூடிய இக்கூடமானது தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 10 கே.எல். திறன் கொண்ட திரவ ஆக்ஸிஜன் கலனை மருத்துவமனை பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே 13 கே.எல். ஆக்ஸிஜன் கலன் பயன்பாட்டில் உள்ள நிலையில் கூடுதலாக 10 கே.எல். சேர்த்து 23 கே.எல். ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக தங்கு தடையின்றி 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் வழங்க முடியும். மேலும் கோவிட் நோய்க்கு பயன்படுத்தப்படும். அதிவேக பிராணவாயு கருவி போன்ற சிறப்பு கருவிகளை பயன்படுத்த உதவிகரமாக இருக்கும்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு தளர்வு களை அறிவித்துள்ள நிலையில் பொது மக்கள் தங்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முககவசம், சமூக இடைவெளி மற்றும் கைளை சோப்பு போட்டு நன்கு கை கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரி முதல்வர் சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *