தடுக்க முயன்ற 2 ஆசிரியர்கள் மீது தாக்குதல்
செங்கல்பட்டு, ஜூலை 6–
செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறுவர்கள் தப்பியோடினர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த கூர்நோக்கு இல்லத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கூர்நோக்கு இல்லத்தில் சுமார் 43 சிறுவர்கள் நேற்று வரை இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். அச்சமயம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆசிரியர்கள், 5 சிறுவர்களை தடுக்க முயன்றனர். இதில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆசிரியர்கள் குணசேகரன், பாபுவை செங்கல்லால் தாக்கிவிட்டு சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
படுகாயமடைந்த ஆசிரியர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய 5 சிறுவர்களை தேடும் பணியில் செங்கல்பட்டு நகர போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.