சிறுகதை

சூழ்நிலை | தாரை செ.ஆசைத்தம்பி

சாணியை உருண்டையாக உருட்டி குடிசை வீட்டின் பக்கசுவரில் ஓங்கி அடித்து ஐந்து விரல்களும் பதிந்துள்ளதை ஆசையுடன் பார்த்துக்கொண்டே அடுத்த வராட்டி தயாரிக்க சாணியை உருண்டையாக்கிக் கொண்டிருந்தாள் அல்லி!

“ஏலே அல்லி இன்னுமா புள்ளே வராட்டி தட்டி முடியலே! பாரு குட்டிப்பையன் அழுவுறான்… வந்து எடுத்து வச்சிரு!”

“தா ஆச்சிமா… இன்னும் ரெண்டு உருண்டைதான் தட்டிட்டு வந்திடறே!” அல்லி அங்கிருந்தே குரலை அனுப்பினாள்!

“வா வா… இந்த சுள்ளி வேற மழையில நனைஞ்சி பொகைய கிளப்பிக் கண்ணைக் கெடுக்குது!”. குடிசைக்கு வெளிப்புறம் மண்ணைக் குழைத்து பூசியிருந்த அடுப்பில் வைத்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு ஈர விறகை எரிக்க மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள் அல்லியின் அம்மா சின்னத்தாயி!

கையில் ஒட்டியிருந்த சாணியை குடிசையின் அருகே வளர்ந்திருந்த வேப்பமரத்தடியில் மண்பானையில் இருந்த தண்ணீரில் கழுவிக்கொண்டு ஓடி வந்த அல்லி, அம்மாவின் புடவையில் கட்டியிருந்த தூளியில் கை கால்களை ஆட்டி சிணுங்கி கொண்டிருந்த தம்பியை நிதானமாக தூளியின் இடையில் வைத்திருந்த மரக் கட்டை இடித்து விடாமல் எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு வெளியே வந்தாள்!

“அம்மா…” ஏதோ சொல்ல வந்தவளை நிமிர்ந்து பார்த்த சின்னத்தாயி… அடுப்பு புகையில் கலங்கியிருந்த கண்களை சேலை தலைப்பால் துடைத்தபடி ‘என்ன?’ என்பது போல பார்த்தாள்!

“அம்மா சோறாக்க நேராகும்தானே! நா தம்பிய எடுத்திட்டுப்போயி பழனிம்மா அக்காவோட கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வரட்டுமா?”

“சோத்தத் தின்னுப்புட்டு போயி வெளையாடு புள்ளே!”

“இல்லம்மா இன்னைக்கு ஞாயித்துக்கெழமை பள்ளீடம் லீவுதானே! கொஞ்சம் நேரம் வெளையாட்டிட்டு வந்து அப்புறமா சோறு திங்கறேனே!” மல்லி கண்களில் தெரிந்த விளையாட்டு ஆசை சின்னத்தாயி மனதை இளக்கியது!

“செரி தம்பிய பத்ரமா கீழ எறக்கிவிடாம பாத்துக்க! அங்க பழனியம்மா ஒங்க பெரிப்பா புள்ளதான்… அதுக்காக விருட்டுன்னு வூட்டுக்குள்ளே போயிடாதே! பெரியம்மா பத்தி ஒனக்கு தெரியும். ஆமா சொல்லிப்புட்டேன்! தம்பி பசிக்கு அழுதான்னா ஒடனே ஓடியாந்திடணும் ஆமா!”

“சரிம்மா….! நாங்க பெரியப்பா வீட்டு பக்கத்தல புளியமரத்தடியிலதானே வெளையாடுவோம்!” என்றபடி தம்பியை இடுப்பில் சுமந்து கொண்டு பெரியப்பா வீட்டுக்கு போகும் வாய்கால் வரம்பு மேலே நடக்க ஆரம்பித்தாள்!

#பெரியப்பா வீட்டை நெருங்கும் போது அவள் மனதில்…’பெரியப்பாவும் அப்பாவும் அண்ணன் தம்பிதான்! ஆனா அப்பா வச்சிருக்கிற ஒரு காணி நெலத்தல விவசாயம் பண்ணி வயித்துக்கு கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு வரோம்! ஒரு குடிசை வீடும் ஏரோட்ட ரெண்டு காளை மாடும் பால் கறக்க ரெண்டு பசுமாடும்தான் அப்பாவோட சொத்து!பெரியப்பா மட்டும் எப்படி ஓடு போட்ட வீடு கட்டி நாலுகாணி நெலம் வச்சிக்கிட்டு, பத்து சீமை பசுமாடு வச்சி பால கறந்து வித்து வசதியா இருக்காங்க! நானும் படிச்சி வேலைக்கு போயி அப்பா அம்மாவ காப்பாத்தணும்’ என இந்தப் பத்து வயதிலேயே அடிக்கடி நினைத்து பார்ப்பாள்!

தம்பியை இடுப்பில் வைத்து வேடிக்கை காட்டியபடி பெரியப்பா வீட்டருகில் வந்த போது உள்ளேயிருந்து கறிக்குழம்பு வாசம் மல்லியின் மூக்கை துளைத்தது!

வாசலருகே வந்து ‘பழனியம்மாக்கா’ என கத்தி கூப்பிட்டாள்! உள்ளிருந்து தட்டு டம்ளர் சத்தம் மட்டும் கேட்டது

மறுபடியும் ‘பழனியம்மாக்கா’ என்றாள்!

அடுத்த இரண்டு நிமிட இடைவெளியில் கதவை திறந்து தாத்தா வெளியே வரும் போது கொஞ்சம் திறந்த கதவின் வழியாக பெரியப்பா சட்டை அணியாமல் உட்கார்ந்திருக்க, அவருக்கு பக்கத்திலேயே அவர்களின் பிள்ளைகள் பழனியம்மா, மாரியாயி, கந்தன் உட்கார்ந்திருந்தனர்!

சுவரை ஒட்டி பாட்டி காலை நீட்டி உட்கார்ந்திருக்க பெரியம்மா எல்லோரின் முன்னாடியும் இருந்த தட்டில் கறியை கரண்டியில் அள்ளி போட்டுக்கொண்டிருந்தது அல்லி கண்ணில் பட்ட அடுத்த நொடி வெளியே வந்த தாத்தா கதவை சாத்தி விட்டு அவளருகே வந்தார்!

“கண்ணு அல்லி என்னம்மா காலங்காத்தால வந்திருக்கே?” என்றார்.

“தாத்தா இன்னிக்கு ஞாயித்துக்கெழமை… பழனியம்மாக்கா’ கூட வெளையாட தம்பிய தூக்கிட்டு வந்தேன்! கூப்பிடு தாத்தா…!”தாத்தா முகம் மாறியதை கவனித்து விட்டாள் அல்லி!

” அடடா… இப்பதான் பழனிம்மா தண்ணி ஊத்திக்கப் போனா…! மாரியாயும் கந்தனும் இன்னும் தூங்கறாங்க! நீ போயி சோறு தின்னுட்டு அப்புறமா வா…! தம்பிய பாத்து தூக்கிட்டுப்போ…!” என்றவரை வினோதமாக பார்த்தாள்!

திறந்திருந்த கதவு வழியாக உள்ளே எல்லாவற்றையும் பார்த்து விட்டதை அறியாமல் தாத்தா பொய் சொல்வதை அவளால் ஜீரணிக்க முடியாமல் திரும்பி நடந்தவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வெளிப்பட்டது!

#ஏண்டி அல்லி வெளையாட போறேன்னு போனவ வெரசா திரும்பிட்டே?” என்ற அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பக்கத்தில் இருந்த பலகைக் கல் மீது உட்கார்ந்தாள். அவளை நோக்கி வந்தான் – அப்போதுதான் களையெடுக்கும் வேலை முடித்து வந்த அவளோட அப்பா சின்னான்!

“ஏம்மா அல்லி அம்மா ஏதோ கேக்கறா நீ கம்முன்னு ஒக்காந்திருக்கே?” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் உதட்டை பிதுக்கி அழுது கொண்டே நடந்த தை சொல்ல….

“என்னா மனுஷங்க…? சோத்துக்கா நம்ம புள்ள அங்க போனா? உங்க அப்பன் பணக்கார பையன்கூட இருக்கிற திமிர்ல எம்புள்ளைய எப்படி வாசலோட அனுப்பிருக்காரு பாத்தீங்களா?” சின்னத்தாயி சொல்லச் சொல்ல சின்னான் முகம் கோபமானது!

*

மேற்கே சூரியன் இறங்க முயற்சித்துக் கொண்டிருந்த போது, கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த சின்னானை யாரோ கூப்பிட சட்டென விழித்தான்.

அருகே கம்பை கீழே ஊன்றி நின்றிருந்தார் செவத்தான் சின்னானின் அப்பா!

சத்தம் கேட்டு உள்ளேயிருந்து வந்த சின்னத்தாயி பிலு பிலுவென பிடித்துக்கொண்டாள்!

“ஒங்க பெரிய மவன் பெரிய பணக்காரனா இருக்கட்டும்! அங்க ஒங்களுக்கு ராஜ உபச்சாரம் பண்ணட்டும்! அதுக்கு சோத்துக்கு இல்லாம என் புள்ள வந்த மாதிரி கதவ சாத்தி தொரத்தியிருக்கீங்க! எம்பொண்ணு பையனும் ஒங்களுக்கு பேத்தி பேரன்கிறது கூடவா மறந்து போயிடும்!” அவள் பேசப்பேச அதை ஆதரிப்பது போல சின்னான் அமைதியாக நின்றிருந்தான்! பெரியவர் நிற்க முடியாமல் கட்டிலில் தடுமாறி உட்கார்ந்தவர் நிமிர்ந்து சின்னத்தாயி பக்கம் திரும்பி…!

“சின்னத்தாயி என் பேத்தி, பேரன தொரத்திபுடணும்ன்னு எனக்கென்ன ஆசையா! ஒன்னொட மச்சாண்டார் பொஞ்சாதிய பத்தி ஒனக்கு தெரியாதா? எனக்கும் உன் மாமியாவுக்கும் தெனமும் கரிச்சிக்கொட்டிக்கிட்டுதான் சோறு போடறா! நாங்களும் வேற வழியில்லாம அத சகிச்சிக்கிட்டு அங்க இருக்கோம் ! என் பேத்தியும் பேரனும் வந்ததும் உள்ள கூட்டிப்போயிருந்தேன்னா எங்க ரெண்டு பேருக்கும் மூணு நாளைக்கு சோறு போட மாட்டா! நா கூட பசிய பொறுத்துக்குவேன்! என் பொஞ்சாதி – ஒடம்பு முடியாத கெடக்கற உன்னோட மாமியாவ நெனச்சிப்பாரு! மீறிப் பேசினா வூட்ட விட்டு போங்கன்னு கூசாம சொல்லுவா! அப்ப நாங்க இங்கதான் வரணும்! ஏற்கனவே எம்புள்ள சின்னான் ஒரு காணி நெலத்தல வெளையறத வச்சி வாயிக்கும் வவுத்துக்கும் பத்தாம உங்கள் காப்பாத்திட்டு வரான்! இதல நாங்களும் இங்க வந்திட்டா உங்க நெலம என்னாவும்! அதான் அப்படி நடந்துக்கிட்டேன்! தப்புன்னா என்னை மன்னிச்சிடு தாயி!” கையெடுத்து கும்பிட்ட செவத்தான் காலில் விழுந்த சின்னத்தாயி….

“அய்யோ மாமா ஒங்க நெலம தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க மாமா!” என்றவள் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்….

கூழோ கஞ்சியோ கடைசி காலத்தல மாமாவும் அத்தையும் சந்தோஷமா இருக்க நம்பளோட கூட்டியாந்து வச்சிக்கலாம் என்றாள் சின்னத்தாயி .

இதுவரை இவர்கள் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்த மல்லி திடீரென்று எழுந்து வேகமாக ஓடினாள்.

மல்லி எங்கே ஓடுறே? என்றார் தாத்தா.

பாட்டியைக் கூட்டிட்டு வாறேன்’’ என்றபடி ஓடினாள்.

தாத்தா மகன் மருமகள் மூவரும் தலையசைத்தார்கள் மகிழ்ச்சிப் புன்னகையுடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *