செய்திகள்

சூலூர் தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வெற்றி உறுதி; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு

கோவை, ஏப். 29–

கொங்கு மண்டலம் என்றும் அம்மாவின் கோட்டை. எனவே சூலூர் வேட்பாளர் அமோக வெற்றிபெறுவார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம், அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஓ.எஸ். மணியன், பாண்டியராஜன், பா.பென்ஜமின், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர். ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி. ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தோப்பு அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வேட்பாளர் வி.பி.கந்தசாமியை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:–

அம்மாவின் வழியில் அண்ணா தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டம் 50 ஆண்டு காலத்தில் காணாத வளர்ச்சியை பெற்று சிறந்து விளங்குகிறது.

கிராமங்கள் தோறும் தார்சாலைகள், அனைத்து சாலைகளும் விரிவாக்கம், மேம்பாலம், கூட்டு குடிநீர் திட்டம், மெட்ரோ ரெயில் ஆய்வு, காந்திபுரம் 2ம் அடுக்கு மேம்பாலம், உக்கடம் மேம்பாலம், விமான நிலையம் விரிவாக்கம், அத்திக்கடவு – அவினாசி திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டம் என எண்ணற்ற பணிகள் அண்ணா தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது. ஆனைமலை நல்லாறு திட்டத்தில் சூலூர் தொகுதி பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தி.மு.க.வை விரட்டி அடியுங்கள்

மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோதும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்காகாகவும் எந்தவொரு வளர்ச்சி திட்டங்களையும் தி.மு.க. செயல்படுத்தவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினை, காவேரி பிரச்சினைகளில் தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் துரோகம் மட்டுமே செய்த தி.மு.க.வை சூலூர் தொகுதியில் படுதோல்வி அடைய செய்து விரட்டி அடியுங்கள்.

தமிழகத்தில் நடந்து முடிந்த அனைத்து நாடாளுமன்ற தேர்தல்களிலும், இடைத்தேர்தல் நடந்த அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. அதிலும் அண்ணா தி.மு.க. மாபெரும் வெற்றி பெறப்போகிறது. ஆகவே சூலூர் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளிலும் சுழன்று பணியாற்றுங்கள். சூலூர் தொகுதிக்கு கந்தசாமி வேட்பாளர் அல்ல. கட்சியின் தொண்டர்கள் அனைவரும் வேட்பாளர் தான். ஆகவே அம்மாவின் ஆட்சி தொடர சிறப்பாக பணியாற்றுங்கள்.

அற்புத ஆட்சி

அம்மா காட்டிய வழியில் தமிழகத்தில் அற்புத ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

எந்தவொரு மக்கள் நலத்திட்டம் கொண்டு வந்தாலும் அதை உடனே சூலூர் சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்த வேண்டும் என்று மறைந்த கனகராஜ் விடாப்பிடியாக திட்டங்களை பெற்று தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

தற்போது சூலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமி எளிமையான வேட்பாளர். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் குடும்பத்தை சேர்ந்தவர். கட்சிப் பணியில் சிறப்பாக செயலாற்றியவர். ஆகவே அண்ணா தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேட்பாளர் பி.கந்தசாமிக்கு இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டுகிறோம்.

அம்மாவின் கோட்டை

அம்மா கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ளோம். ஆகவே ஓட்டு கேட்க நமக்கு மட்டுமே உரிமையுள்ளது. கொங்கு மண்டலம் என்றும் அம்மாவின் கோட்டை. இத்தொகுதியில் நமது வெற்றி உறுதி. அதற்கு இங்கு திரண்டுள்ள மக்களே சாட்சி. அண்ணா தி.மு.க.வின் கோட்டையாக திகழும் சூலூர் தொகுதியில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள் செ.தாமோதரன், பா.வே. தாமோதரன், திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், நீலகிரி மாவட்ட செயலாளர் புத்திசந்திரன், கே.ஆர்.அர்ஜுணன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை எ.சண்முகம், ஓ.கே. சின்னராஜ், கஸ்தூரி வாசு, தோப்பு வெங்கடாசலம், தி.நகர் பி.சத்யா, சாந்தி ராமு, குமரகுரு, குணசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏ.வெங்கடாசலம், மணிமேகலை, என்.கே. செல்வதுரை, என்.ஆர்.ராதாமணி, என்.எஸ். கருப்புசாமி, யு.ஆர். கிருஷ்ணன், அமுல் கந்தசாமி, விஷ்ணுபிரபு, துரைமுருகன், ஏ.எஸ். மகேஸ்வரி, கோவை செல்வராஜ், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சி.பி.ராதாகிருஷ்ணன், பெஸ்ட் ராமசாமி, பனப்பட்டி தினகரன், குனியமுத்தூர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *