செய்திகள்

சூறை காற்று, பலத்த மழை காரணமாக மகாராஷ்டிராவில் கோவில் மீது மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

மும்பை, ஏப்.10–

சூறை காற்றும் மற்றும் பலத்த மழை காரணமாக மகாராஷ்டிராவில் கோவில் மீது வேப்ப மரம் விழுந்து 7 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாலபூர் தேசில் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபுஜி மகராஜ் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வழிபாடுக்கு வருவது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நேற்று வழக்கம்போல் நடைபெற்ற வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோவிலின் முன்பு தகர கொட்டகை ஒன்று போடப்பட்டு உள்ளது. அதன் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டு நேரத்தில் தகர கொட்டகையில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம்.

நேற்று வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் கோவிலுக்கு முன்பு நின்ற வேப்ப மரம் பயங்கரமாக ஆடியது. இதை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் தகர கொட்டகையில் ஒதுங்கினர்.

100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தகர கொட்டகைக்குள் நெருக்கியடித்த படி நின்றனர். அப்போது வீசிய சூறைக்காற்றில் அந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

இதில் தகர கொட்டகை இடிந்து விழுந்தது. அதனுள் நின்ற மக்கள் அனைவரும் தகர கொட்டகைக்குள்ளும், மரத்தின் அடியிலும் சிக்கி கொண்டனர். இதனை கண்டு கோவிலுக்கு உள்ளே இருந்த பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட பக்தர்களை மீட்க முயன்றனர்.

துணை முதல்வர் இரங்கல்

மேலும் இதுபற்றி தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். விடிய, விடிய இந்த மீட்பு பணி நடந்தது.

இந்த விபத்தில் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அகோலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் பற்றி தெரியவந்ததும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அகோலா மாவட்ட நிர்வாகத்தை அழைத்து விபரம் கேட்டார்.

பின்னர் மீட்பு பணிகளை முடுக்கி விடும்படி அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், பக்தர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க முதல்வர் ஏக்நாத் ஷின்டே நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *