புதுடெல்லி, பிப். 11–
உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று இந்திய எரிசக்தி வார விழா நடைபெற்றது. இதில் 70 ஆயிரம் எரிசக்திதுறை வல்லுநர்கள், 6 ஆயிரம் மாநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 700 கண்காட்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரதமர் மோடி இந்த துவக்க விழாவில் காணொலி வாயிலாக பேசியதாவது:–
21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என நிபுணர்கள் சொல்கின்றனர். இந்தியா தனது வளர்ச்சியை மட்டும் அல்லாமல், உலகத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது. இதில் நமது எரிசக்திக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்தியாவின் எரிசக்தி லட்சியங்களுக்கு 5 தூண்கள் துணை நிற்கின்றன. நம்மிடம் இயற்கை வளங்கள், பொருளாதார பலம், அரசியல் ஸ்திரத்தன்மை, புத்திசாலித்தனமான சிந்தனைகள், மூலோபாய புவியியல் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை ஆகியன உள்ளன.
வளர்ந்த பாரதத்திற்கு அடுத்த இரண்டு தசாப்தங்கள் முக்கியமானவை. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைய சாதனை படைக்கப் போகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி உள்ளது.
நமது சூரிய மின் உற்பத்தி இருமடங்காக அதிகரித்து உள்ளது. இன்று சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை பிடித்து உள்ளது. பாரிஸ் ஜி20 ஒப்பந்தங்களின் இலக்குகளை எட்டிய முதல் நாடு இந்தியா. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.