வாழ்வியல்

சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டி கண்டுபிடித்த தமிழக மாணவி

சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டின் ‘மாணவர் பருவநிலை விருது’ கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதானது சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்த்த உமாசங்கர்– சங்கீதா என்ற தம்பதியின் மகள் வினிஷா உமாசங்கர். இவர் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்குச் சிறு வயது முதலே அறிவியலின் மீது அதிக ஈடுபாடு இருந்து வருகிறது.

“சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அனைத்தையும் படித்துத் தெரிந்து கொண்டதன் மூலம் எனது 12 வயதில், சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரிப் பெட்டி தயாரிப்பதற்கான யோசனை வந்தது. குறிப்பாக, இந்த யோசனையானது ஒரு நாள் பள்ளி முடிவடைந்து, வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, சாலையோரங்களில் சலவை தொழிலாளர்களைக் கண்டேன். அவர்கள் இஸ்திரி செய்வதற்கான கரியைச் சாலையில் காய வைத்துக் கொண்டிருந்தனர்.

காய வைத்த அந்த கரித் துண்டுகளை இஸ்திரி செய்வதற்குப் பயன்படுத்திய பிறகு, அதனை குப்பையில் போடுவதைக் கவனித்தேன். இதை அவர்கள் தினமும் செய்வதைக் கண்டேன். இதுபோன்று கரி பயன்படுத்துவதால் நிறையப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, இதனால் சுற்றுச் சூழலுக்கும், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சுவாச பிரச்னைகள் வருகின்றன என்பதை அறிந்தேன்.

மரத்தை வெட்டி எரித்துத் தான் இந்த கரியைத் தயாரிக்கின்றனர். இதனால் காடுகளில் இருக்கும் மரங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் காற்று, நிலம், நீர் அனைத்துமே மாசுபடுகிறது. இதன் எதிரொலியாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. ஆகவே இந்த கரி உற்பத்தி செய்வதை எப்படியாவது நிறுத்தவேண்டும் என்பதற்காகவே சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி வண்டி(Solar Ironing Cart) என்ற திட்டத்தை உருவாக்கினேன்,” என்கிறார் வினிஷா உமாசங்கர்.

சூரிய ஒளி இஸ்திரி வண்டியை கண்டுபிடித்ததற்காக ஸ்வீடன் நாட்டில் துணை பிரதமர் இசபெல்லா லோவின் பங்கு பெற்ற காணொளி நிகழ்வில் ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இந்த விருது மாணவி வினிஷா உமாசங்கருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதில் பட்டம், பதக்கம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 8.5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *