செய்திகள்

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக இலக்கை அடைந்தது

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி பாராட்டு

சென்னை, ஜன.7-–

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், திட்டமிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை மூலம் ‘இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது.

அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 2–-ந் தேதி பி.எஸ்.எல்.வி. – சி-57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளி -1 என்னும் எல்-1 புள்ளியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்புவிசை சமமாக இருக்கும் பகுதியில் நிலைநிறுத்துவதற்காக அனுப்பப்பட்டது.

விண்வெளியில் பல கட்டமாக பயணித்து வந்த இந்த விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆதித்யா எல்.1 விண்கலம், புவிவட்ட சுற்றுப்பாதையில் இருந்து சூரிய வட்ட சுற்றுப்பாதைக்கு படிப்படியாக உயர்த்தப்பட்டது. இந்தப்பணிகள் அனைத்தும் திறம்பட முடிக்கப்பட்ட நிலையில், ஏறக்குறைய 127 நாட்கள் பயணித்த ஆதித்யா எல்.1 விண்கலம், திட்டமிட்டப்படி எல்-1 புள்ளி இலக்கில் சரியாக நேற்று மாலை 4 மணி அளவில் நிலை நிறுத்தப்பட்டது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் முறைப்படி வெற்றி செய்தியை அறிவித்தனர். இதன் மூலம் இந்தியா, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து 4-–வது இந்தியாவும், சூரியனை ஆராய்வதற்காக விண்கலத்தை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பாராட்டு

ஆதித்யா எல்.1 விண்கலம், எல்.1 புள்ளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இஸ்ரோவால் நிகழ்த்தப்பட்ட மற்றொரு பெரிய சாதனை. இதற்காக ஒட்டுமொத்த இந்திய விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள். இந்த பணி சூரிய-பூமி அமைப்பைப் பற்றிய நமது அறிவை மேம்படுத்துவதுடன், முழு மனிதகுலத்திற்கும் பயனளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூகவளைத்தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

‘இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது. சூரிய குடும்பத்தை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளது.

மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். நாட்டு மக்களுடன் இணைந்து நானும் இந்த மகத்தான சாதனையை பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளை தொடர்வோம்’ என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சாதனைக்காக அனைத்து விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியதாவது:–-

ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான புவி ஈர்ப்பு விசையில்லா புள்ளியில் ஆதித்யா எல்-1 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சூரியனின் மேற்பரப்பை ஆராய உள்ளோம்.

ஆதித்யா எல்-1 விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது. எல்-1 புள்ளியில் இருந்தபடி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு ஆதித்யா எல்-1 பூமிக்கு தரவுகளை அனுப்பும். ஒவ்வொரு கணமும் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யவும் சூரியப் புயலை முன்கூட்டியே கண்டறியவும் எல்-1 புள்ளி வசதியானது. இந்தப்பணியை சிறப்பாக செய்து முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். பெருமிதமாக உள்ளது.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *