நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்
இரண்டு நாட்களுக்கு முன்பு மதிய வெயிலின் வெப்பத்தை பற்றி கவலைப்படாமல் சரியாக 11.50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவியுள்ளனர்.
சந்திரனில் தரையிறங்கியது இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாகும். அதை தொடர்ந்து 15 நாட்களில் சூரியனுக்கு விசேஷ ஆய்வுகள் நடத்த விண்கலத்தை அனுப்பியிருப்பது நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை தேனீக்களின் சுறுசுறுப்பை நினைவுபடுத்துகிறது.
ஆதித்யா என்றால் எழு ஞாயிறு அதாவது காலையில் எழும் சூரியன் விடியலின் எழுச்சியை குறிக்கிறது போல் இஸ்ரோவும் செவ்வாய் கிரகத்தில் நுழைந்தது, சந்திரனில் தரையிறங்கியது வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவங்கள் என்றாலும் உலக வளர்ச்சிக்கு தயார்படுத்தும் முயற்சியில் முதல் அடி எடுத்து வைப்பது போன்றது தான்!
சூரியனை ஆய்வு செய்வது என்பது பூமியில் இருந்து சாத்தியமே கிடையாது. அதை நேரில் சில நொடிகள் கூட பார்க்க முடியாது. பெரிய சக்தி வாய்ந்த டெலஸ்கோப்புகளில் பார்க்க நேர்ந்தாலும் தெளிவு பெற முடியாமல் தவித்தோம்.
நமது பூமியின் வெளிவட்டப் பாதையில் பல தனிமங்கள் கொண்ட வாயு மண்டலம் இருப்பதால் நாம் எதை கொண்டு பார்த்தாலும் அது ஏதோ ஒரு ‘பில்டர்’ கொண்டு பார்ப்பதற்கு இணையாகாது அல்லவா?
ஆகவே விண்வெளியில் அதாவது பூமியின் வெளிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் செயற்கை கோள்களில் தொலைநோக்கிகள் கொண்டு பார்க்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப், ஹப்பில் டெலஸ்கோப் செய்து வரும் சாதனைகள் அபாரமானது.
1990ல் ஹாப்பில் என்ற 43.5 அடி விட்டம் கொண்ட லென்சை கொண்டு இயங்கும் டெலஸ்கோப் கடந்த 30 ஆண்டுகளாக பல தகவல் திரட்டுகளை நமக்கு தந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் 2021 டிசம்பர் மாதத்தில் 30 நாட்கள் பயணித்த ராக்கெட்டில் கிட்டத்தட்ட 15 லட்சம் கிலோ மீட்டர் பயணித்து ‘லாக்ரேன்ஜ்–2’ (Lagrange 2) பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது. இதுவே சூரியனுக்கு மிக அருகாமையில் நிலை நிறுத்தப்பட்ட பூமியில் தயாரான ஓரு கருவியாகும்.
எல்1, எல்2, எல்3, எல்4 போன்ற புள்ளிகளில் பூமி, சூரியனின் புவி ஈர்ப்பு உன்னதமானதாக இருப்பதால் அங்கு நிலை நிறுத்தப்படும் கருவிகள் செயற்கைகோள் போல் தனக்கென ஒரு சுற்று வட்டப்பாதையை உருவாக்கி கொண்டு அதில் சுழன்று கொண்டே இருக்கும்.
இந்த வரிசையில் நாமும் நமது ‘ஆதித்யா எல்1’ விண்கலத்தை எல்1 அதாவது ‘லாக்ரேன்ஜ் 1’ என்ற இலக்கை தேர்வு செய்து 40 நாட்கள் பூமியில் இருந்து பயணித்து நிலைநிறுத்தப்படும்.
இதுவரை நாசாவும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் இதே பகுதிக்கு விண்கலத்தை அனுப்பி இருக்கிறது.
நமது விண்கலம் இதுவரை கொடைக்கானல், நைனிடால், ஆரியபட்டா மையங்களில் இருந்து மட்டுமே சூரியனை பற்றி தொலைநோக்கி உதவியுடன் ஆய்வுகள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் 16 நாட்களில் பூமியின் ஈர்ப்பை விட்டு வெளியேறி சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணித்து சூரியனுக்கு ஓரளவு அருகாமைக்கு சென்று விடும்!
உண்மையில் இது சூரியனின் நெருக்கத்தில் ஒரு சதவிகிதம் தூரம் மட்டுமே!
பூமியின் ஈர்ப்பில் 16 நாட்களில் ஐந்து மிக கடினமான செயல்பாடுகளை கடந்து வெளிவட்டப் பாதையை கடக்கும். இந்த சவால்களை சமாளித்த பிறகு தான் சூரியனின் நேரடி பார்வையை அதாவது பூமியின் வெளிவட்டப்பாதை வாயு மண்டலத்தை தாண்டி செல்வோம். பிறகு கிட்டதட்ட 24 நாட்களுக்கு பயணிக்கும் இந்த விண்கலத்தை தொலைதொடர்பு நவீனங்களை கொண்டு அந்த கருவியை லாவகமாக கட்டுப்படுத்தி உரிய சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தி விடுவோம்.
நமது கணிதம் சூரியனின் புவி ஈர்ப்பையும் வான் மண்டல பிற கிரகங்களின் ஈர்ப்பு சக்திகளையும் கணித்து எடுக்கப்படும் முயற்சியாகும்.
இதுவரை நாம் மேற்கொண்ட முயற்சிகளின் வெற்றிகளாலும் தோல்விகளாலும் பெற்ற அனுபவ பாடங்களின் பட்வார்த்தமான உண்மைகளால் உந்தப்பட்டு எடுக்கும் முயற்சியாகும்.
நிலவுக்கு சென்றால் அங்கு என்றேனும் குடியேறலாம் . ஆனால் சூரியனைப் பற்றிய படிப்பு எதற்கு?
நமது புவியில் ஏற்படும் எல்லா மாற்றங்களின் பின்னணியில் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டு இருப்பது சூரியன்தான்! அதன் தட்பவெப்பத்தை போன்றே அதில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் நம்மை சுற்றி ஏற்படுத்திய மாயாஜாலம் தான் நமது வாழ்விற்கு உயிர் தந்த முழுமுதல் இயற்கை ஆற்றல் ஆகும்.
சூரியன் சுமார் 250 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன்பே உருவான ஓர் இயற்கை அற்புதம்! அதில் இருந்து கடந்ததை வெளியேற்றப்படும் பல இயற்கை அற்புதங்களே சூரிய மண்டல விந்தை வினோதங்கள்.
20–ம் நூற்றாண்டில் நாம் சாதித்து விட்டோம் ; 21–ம் நூற்றாண்டில் அதை கொண்டு சாதனை செய்வதாக நினைப்பது தவறு ; பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்னோடி தோன்றிய சூரியன் பேராற்றலை பார்க்கவே அறியவே நாம் தற்போது புறப்பட்டு இருக்கிறோம்!
ஆக நாம் முதல் உதயத்தை பார்ப்பது போல் புறப்பட்டு சென்று இருக்கும் ‘ஆதித்யா எல்–1’ நமது சூரியனின் படைப்பின் ரகசதியத்தை ஆராயச் செல்கிறது, வாழ்வு மலர உதவிய கதிர் இயக்கத்தை அந்த கதிர்களின் உருவாக்கப் பகுதியின் அருகாமைக்கே சென்று பார்க்க போகிறோம்!
தொட்டால் சுடும் என்று சிறு வயதில் எரியும் மெழுகுவர்த்தியின் தீப ஒளியை தொடாமல் இருந்ததில்லை. தொட்டு சூட்டின் தன்மையை உணர்ந்த பிறகே அந்த உஷ்ணத்தையும் வசப்படுத்தி உபயோகித்துக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொண்டோம் ; அதுபோன்ற புது யுக புரட்சியில் மனித குலம் பயணிக்க அழைத்துச் செல்லும் பணியில் இஸ்ரோ அடிஎடுத்து வைக்கும் இத்தருவாயில் இந்தியர்கள் பூரித்து தங்களுக்கு தாங்களே முதுகில் தட்டிக் கொண்டு சபாஷ்! சொல்லிக் கொள்வதில் நியாயம் நிரம்பவே இருக்கிறது.