…
லட்சுமணனைத் திட்டிக் கொண்டிருந்தாள் தேவகி.
” இதெல்லாம் தேவையா உங்களுக்கு ? இதப் போய் எடுத்துட்டு வந்து இருக்கீங்க ? அறிவுங்கிறது கொஞ்சம் கூட இல்லையா ?”
என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடிக் கொண்டிருந்தாள் தேவகி
” என்ன பண்ணச் சொல்ற?”
“அதுக்காக இதையா கொண்டுவர்றது ?
” ஏன் நான் பணம் கொடுத்து இருக்கேன். நான் பண்ணது தப்பு தான். ஆனா, அதுக்கு பணம் கொடுத்து இருக்கேனே ? இத விட்டுட்டு வர சொல்றியா? முடியாது”
“இத வச்சு என்ன செய்றது? சமையல் பண்ண முடியுமா? சாம்பார் வைக்க முடியுமா? கூட்டுப் பொரியல் வைக்க முடியுமா? இல்ல வேற எதுக்கும் இத பயன்படுத்த முடியுமா ?எதுக்குமே பயன்படுத்தாத இத எடுத்திட்டு வந்து இருக்கீங்களே ? இது எதுக்காவது அவசியப்படுமா?”
என்று மறுபடியும் திட்டிக் கொண்டிருந்தாள் தேவகி
“அதுக்காக அவ்வளவு காசு கொடுத்து வாங்குனத தூரப் போடச் சொல்றியா? அது என்னால முடியாது”
” நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். முதல்ல இத எடுத்துட்டு வெளிய போங்க .இல்ல உங்களுக்கும் எனக்கும் ரணகளமே நடக்கும் “
என்று கணவன் லட்சுமணனைக் கடுமையாக திட்டிக் கொண்டிருந்தாள் தேவகி
“என்ன சண்டை போட்டுட்டு இருக்கீங்க?
என்று மகள் லாவண்யாவும் வந்து கேட்க
” உங்க அப்பா என்ன பண்ணிட்டு வந்திருக்காரு பாரு”
என்று தேவகி சொல்ல
” என்னம்மா பண்ணிட்டு வந்து இருக்காரு ” என்று பார்த்த லாவண்யாவுக்கும் கோபம் வந்தது.
” உனக்கு ஏதாவது இருக்காப்பா? இத போய் தூக்கிட்டு வந்திருக்க? இது எதுக்காக கொண்டு வந்த? தூர போட வேண்டியதுதானே? இதை எடுத்துட்டு வர்றதுனால என்ன பிரயோஜனம்? “
என்று லாவண்யாவும் திட்டிக் கொண்டிருந்தாள் .
“நான் பணம் கொடுத்திருக்கேன்மா. தப்பு பண்ணிட்டேன். பணம் கொடுத்த பொருளை கீழே போட்டுட்டு வர முடியுமா ? அது தான் எடுத்திட்டு வந்துட்டேன் “
” அப்படியா? இத இப்ப என்ன பண்ண போறீங்கப்பா “
என்று மகளும் கோபமாகக் கேட்க,
” இப்ப என்ன செய்றேன்னு பாருங்க”
என்று சொன்ன லட்சுமணன் வீட்டிற்கு மேலே ஏறினார் .
“வீட்டில சிமெண்ட் இருக்கா?
” இருக்கு . அதுக்கு என்ன இப்போ ?”
என்றாள் தேவகி.
” அந்த சிமெண்ட் எடுத்துட்டு வா”
” இந்த மனுஷனுக்கு கிறுக்கு ஏதும் பிடிச்சுக்கிருக்கா? என்ன செய்றாருன்னு பாக்கலாம்?”
என்று வீட்டில் இருந்த சிமெண்ட்டை எடுத்துக் கொண்டு வெளியே வைத்தாள் தேவகி .தண்ணீர் ஊற்றிக் குழைத்து ஒரு சட்டியில் சிமென்ட்டை அள்ளி மாடிக்குப் போனார் லட்சுமணன். வீட்டிற்கு மேலே மொட்டை மாடியைச் சுற்றியுள்ள சுவர்களில் சிமெண்டை அப்பினார். தான் கொண்டு வந்த மூட்டைக்குள்ளிருந்த உடைந்த கண்ணாடிச் சில்லுகளை எல்லாம் அதற்கு மேலே குத்திக் குத்தி வைத்தார்.
” இப்ப பாத்தீங்களா?”
என்று சிரித்தார் லட்சுமணன்.
இதைப் பார்த்த லாவண்யாவிற்கும் தேவகிக்கும் என்னவோ போலானது.
” இப்ப பாத்தீங்களா? ஒரு கடைக்கு போனேன் .தெரியாம கை பட்டு கண்ணாடி உடைஞ்சு போச்சு .உடைஞ்ச கண்ணாடிக்கு காசு கொடுன்னு சொல்லி என் கூட சண்ட போட்டான் கடைக்காரன். வேற வழியில்ல. உடைஞ்ச கண்ணாடிக்கு பணம் குடுத்தேன். பணம் கொடுத்த பொருள் நம்மோடது தானே? இத என்ன பண்றதுன்னு யோசிச்சேன். ஒடஞ்ச கண்ணாடிய அங்க இருந்த ஒரு பையில் கட்டி எடுத்திட்டு வந்திட்டேன். இத குழம்பு வைக்க முடியுமா? சாம்பார் வைக்க முடியுமா? கூட்டுப் பொரியல் வைக்க முடியுமான்னு கேள்வி மேல கேள்வி கேட்டீங்களே ? இப்பப் பாருங்க.மாடிப் பக்கம் திருடனுக பயம் இருந்துச்சுல்ல . இப்ப ஒரு பயலும் ஏற முடியாதில்ல “
என்று பெருமிதத்தோடு சொன்னார் லட்சுமணன்.
” இந்தாளு எது பண்ணாலும் சரியா தான் பண்றார்”
என்று சந்தோஷப்பட்டாள் தேவகி
” அப்பா சூப்பர்மா. என்னமோ நெனச்சேம்மா”
என்றாள் மகள் லாவண்யா
சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன ,சுவரில் குத்தப்பட்ட உடைந்த கண்ணாடிச் சில்லுகள்.
ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கு சார். வித்தியாசமான கதை வாழ்க வளர்க