சிறுகதை

சூப்பரோ….சூப்பர் ! | மகேஷ் அப்பாசுவாமி

குமரேசனுக்கு ‘பேஸ்புக்’ நண்பர்கள் நூரு பேர் இருக்கிறார்கள்…

யாரிடம் இருந்து முதலில்’ லைக்’ ‘கமெண்ட்ஸ்’ வரும் என்றால், அது குமரேசனிடம் இருந்துதான் ,என ‘பேஸ்புக்’ நண்பர்கள் கூறிக்கொள்வார்கள்.

அப்படி ‘பேஸ்புக்’ நண்டர்களில், குமரேசன் ஊர், பக்கத்து ஊர் நண்பர்களில் ஒருவர்தான் கபிலன்.

கபிலனும் குமரேசனும் அடிக்கடி டீக்கடையில் சந்தித்துக் கொள்வார்கள்.

அன்று….

“என்ன குமரேசா…’பேஸ்புக்’குலதான் எப்பவும் இருப்பே போல…?” கேட்டான் கபிலன்.

சிரித்தப்படியே…”அது எப்படி உனக்கு தெரியும் ?” என்றான் குமரேசன் .

“இல்லே… எந்த படம், எந்த செய்தி போட்டாலும் , உடனே ‘லைக்’ மற்றும் ‘மெசேஜ்’ அனுப்பிடுறியே…. அதான் கேட்டேன்”என்றான்.

“ஒ… அத வெச்சு சொல்றீயா… என கேட்டவன், நாம படிக்காமலேயே ‘லைக்’ போடுறது, எவனுக்கு தெரியும்…ஏதோ படிச்சிட்டு ‘லைக்’ போடுறதா நினைச்சுக்கிறானுக, பைத்தியக்கார பயலுக…. மனதுக்குள், நினைத்தான், குமரேசன்.

“என்ன குமரேசா.. ஏதோ யோசிக்கிறே…?”

“ஒண்ணும் இல்ல… நேரில் பார்க்காத நபர்களை கூட, ‘பேஸ்புக்கு’ல நண்பர்களாக வைத்திருக்கிறோமேனு’தான் நினைக்கிறேன்” என்றான்.

“நீதான் நேரில் பார்த்திருக்க மாட்டே… ஆனால், நான் நிறைய பேரை நேரில் பார்த்திருக்கிறேன்.”

“நீ ‘மார்க்கெட்டிங் பீல்டு’ என்பதால், பார்க்க வாய்ப்பு இருக்கு; நான் வீடு ,கடை ,அரசமரத்தடினு இருக்கிறேன்.

“எது எப்படியோ , ‘பேஸ்புக்’ நண்பர்கள் ,மனதில் நீதான் ஆணி வேராய் பதிந்து இருக்கிறாய்.”என்றான்.

“எப்படி?”

“யாரை பார்த்தாலும் ,குமரேசன் எப்படி இருக்கிறான்… என கேட்கிறார்கள்…நீ , போடும் ‘லைக்’ ‘கமெண்ட்ஸால்’ எல்லோரது மனதிலும் இடம் பிடித்து விட்டாய்.”

அட பாவிகளா… போனா போகுதேனு , ‘லைக்’ பட்டனை ஒரு தட்டு தட்டி விட்டதுக்கு போய் , நம்மள ரெப்பவே புகழ்கிறான்களே…அது என்ன செய்தினு கூட படிப்பது இல்லை, எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம் என ,மனதுக்குள், நக்கலாக நினைக்கையில்…,

“குமரேசா… எனக்கு ‘டைம்’ ஆச்சு, இப்ப பஸ் பிடித்தால்தான், வடசேரில இறங்கி, தென்காசிக்கு பஸ் பிடிக்கமுடியும் ;என கூறி விட்டு புறப்பட்டு சென்றான் கபிலன்.

வழக்கம் போல், அந்ந அரச மரத்தடியில் போய் அமர்ந்தான் குமரேசன்.

இந்த ‘ஆன்ராய்டு’ போன் வந்ததில், பொழுது எப்படி போகுதுனே… தெரியலை, என மனதுக்குள் நினைக்கையில், செல் போனில் ,தொடர்ந்து ‘மெசேஜ்’ வந்தது.

என்ன இது… தொடர்ந்து ‘மெஜேச் ‘வருகிறதே… என நினைத்தவன், ‘பேஸ்புக்’கை ‘ஓப்பன்’ செய்தான்.

தான் வழக்கமாக அனுப்பும் அருமை , ‘சூப்பரோ சூப்பர்’ மெசேஜை, அந்த படங்கள் மற்றும் செய்திகளை பார்காமலேயே.. அனுப்பினான் .

மறு நாள்….

விடிந்ததும், செல்போனை எடுத்து பார்த்தான்…குமரேசன்.

உறவினர் ஒருவரிடம் இருந்து, ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என ‘மெசேஜ்’ வந்திருந்ததை கண்டு, ஓ…இன்னிக்கு நமக்கு பிறந்தநாளா…நாம மறந்தாலும், இந்த ‘பேஸ்புக்’காரங்க தகவல் அனுப்பிடுவாங்க… போல பலே…பலே…சூப்பர்! இன்னிக்கு ‘பேஸ்புக்’ நண்பர்கள், வாழ்த்து மழையில், நனைய வைக்க போறாங்க…என மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான் குமரேசன்.

மணி பத்து கடந்த நிலையில் ,எந்த நண்பர்களிடம் இருந்தும்,’ மெசேஜ்’ வராததை கண்டு, அதிர்ந்து போனான் குமரேசன்.

“என்னடா இது …ஒரு பயல் கூட நல் வாழ்த்து கூறலையே…ஏதோ ‘பேஸ்புக்’ நண்பர்கள் வட்டாரத்தில், ஆணி வேர் ,அடி வேர்னு கபிலன் வாய்கிழிய ‘டயலாக்’ விட்டானே…மனதுக்குள் ஆதங்கப்பட்டான்.

இந்த கபிலன் பயல்கிட்ட இருந்து கூட, வாழ்த்து வரைலயே…அவன் வரட்டும், நாலு கேள்வி ‘நச்’சுனு கேட்டு விடணும் , கோபம் கொண்டான் குமரேசன்.

வழக்கம் போல் ,டீக்கடைக்கு வந்தான் கபிலன்.

குமரேசன் அவனைக் கண்டதும் ஆவேசமாய் நடக்க ஆரம்பித்தான்…

“ஏன்டா கபிலா… நீ ஒரு மனுஷனா…ஏதோ ஆணி வேர், அடி வேர்னு ‘டயலாக்’ விட்டே…குமரேஷனைதான் கேட்பாங்கனு வாய் கிழிய வேற சொன்னே….ஒரு பயல்…, சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட கபிலன்.

“உனக்கு இப்ப என்ன பிரச்சனைனு இந்த குதி குதிக்குறே…?” கேட்டான்.

“என் பிறந்தநாளுக்கு…ஒரு பயல் கூட வாழ்த்து தெரிவிக்கலையே..” ஆதங்கப்பட்டான்.

” ஓ .. உனக்கு பிறந்த நாளா…தகவலை யாரும் படிக்கலையா இருக்கும்…படித்திருந்தால் வாழ்த்து சொல்லாமலா இருந்திருப்பாங்க…பார்காமலே ‘லைக்” பண்ற, உன்னை போல, மற்றவங்களும் இருப்பாங்களா என்ன ?” கேட்டான்.

குமரேசனுக்கு பொறி தட்டியது. இது இவனுக்கு எப்படி தெரியும் ? மனதுக்குள் நினைத்தான்…

“என்ன பாலா… ஏதேதோ சொல்றே…ஒண்ணும் புரியலை.”சொன்னான்.

“எப்படி புரியும் ?”

“உன் சுய ரூபம்தான் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சே…”

“யோவ்… எதா இருந்தாலும் உடைச்சு பேசு , அதை விட்டுட்டு பொம்பளைங்க மாதிரி, ‘பொடி’ வெச்சு பேசுற வேலையை வெச்சுக்காத…”கோபப்பட்டான்.

“சரி சொல்றேன் கேளு, உனக்கு ‘பேஸ்புக்’ நண்பர் ,தனபாலை தெரியும்லே..ஒரு தடவை, மூவரும் மீனாட்சிபுரம் ஜங்ஷனில் , அவித்த கடலை வாங்கி சாப்பிட்டோம்’ நினைவு இருக்கா…என்ன?”கேட்டான்.

“ஆமாம் அவனுக்கு என்ன?”

“அவனுக்கு ஒண்ணும் இல்லை; அவன் அப்பாதான், இதுக்கு மேல நான் சொல்ல விரும்பலை.”

“அது என்னணு சொன்னாதானே.. எனக்கு தெரியும்?”

“அதுக்குண்டான பதிலை, நீயே அவன் ‘பேஸ்புக் ‘ ஓபன் செய்து, நீ போட்ட மெசேஜை படித்து விட்டு, அவன் போட்ட மெசேஜையும் படித்து பார்த்து தெரிந்து கொள் …”என்றான்.

அவசர அவசரமாய் ‘பேஸ்புக்’கை ஓப்பன் செய்தவன், நேற்று போட்ட ‘கமெண்ட்ஸ்’களை படிக்க ஆரம்பித்தான். ‘சூப்பரோ சூப்பர்’ என கமெண்ட்ஸ் இருந்ததை படித்து விட்டு ,மேலே உள்ள தகவலை படித்தான் , ‘எனது தந்தை வைகுண்டபதவி அடைந்தார், என்பதை , மிக மன வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ இப்படிக்கு ,தனபால் என, இருந்ததை, படித்தவன், கூனிக் குறுகிப் போனான்…

‘பேஸ்புக்’ நண்பர்கள், ஒவ்வெருவராக வெளியேற ஆரம்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *