செய்திகள்

சூடு பிடிக்கும் தேர்தல்களம்: திருச்சியில் 24ந்தேதி அ.தி.மு.க. பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

Makkal Kural Official

ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம்

எடப்பாடி பிரச்சாரத்தை துவக்குகிறார்

சென்னை, மார்ச் 21–

திருச்சியில் 24–ந்தேதி நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 22 பேர் மனுவை தாக்கல் செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த யாரும் முதல் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்த தேர்தலில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அண்ணா தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும், எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்து, மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது.

இந்த நிலையில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை 2 கட்டமாக நேற்றும், இன்றும் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கிடையே அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூறாவளி பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்க உள்ளார். அன்று மாலை 4 மணிக்கு திருச்சி வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக 26ந் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், 27ந் தேதி நாகர்கோவில், சங்கரன்கோவில் பகுதியிலும், 28ந் தேதி சிவகாசி மற்றும் ராமநாதபுரம் பகுதியிலும், 29ந் தேதி சென்னை மதுராந்தகம், பல்லாவரம் ஆகிய இடங்களிலும், 30ந்தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும் 31ந் தேதி மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.

நாளை திருச்சி சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் வருகிற 24ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய இருப்பதால் திருச்சி விழா கோலம் பூண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *