செய்திகள்

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் இடையே முழுபோர் வெடிக்கும் அபாயம்

ராஜினாமா செய்த ஐநா சிறப்பு தூதர் எச்சரிக்கை

சூடான், செப். 15–

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதல் முழு போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ள வோல்கர் பொதீஸ் எச்சரித்துள்ளார்.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அல்-புர்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக, கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சிறப்பு தூதர் வோல்கா் பொதீஸ், ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி, அவரை நிராகரிப்பதாக சூடான் ராணுவம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அவர் தனது பொறுப்பிலிருந்து விலகினார்.

முழு போர் வெடிக்கும்

இந்நிலையில், ஐ.நா. சிறப்புத் தூதர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ள வோல்கர் பொதீஸ் ஐ.நா.வில் கூறியதாவது:–

சூடானில் ராணுவம், ஆர்எஸ்எஃப் துணை ராணுவம் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இரு படைகளில் ஏதாவது ஒன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை. முக்கியமாக, மேற்கே உள்ள டார்ஃபர் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. அங்கு இனத்தின் அடிப்படையில் பொதுமக்கள் இரு படையினராலும் குறிவைக்கப்படுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அங்கு முழு போர் வெடிக்கும் அபாயம் உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *