கார்டூம், ஏப். 28–
சூடானில் மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஆயுதப் படைகள் மற்றும் விரைவு ஆதரவுப் படைகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே காணப்பட்ட மோதல் போக்கு, தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் 72 மணி நேரம்
மோதலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலில் தற்காலிகமாக 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
மேலும், சூடான் தலைநகர் பகுதியில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை பாதுகாப்பாக வெளியேற்ற 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு வெளிநாடுகள் வலியுறுத்தியதை அடுத்து கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு முதல் மீண்டும் போர் நிறுத்தப்பட்டது. நேற்று நள்ளிரவு போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், வெளிநாடுகள் மேற்கொண்ட சமரச முயற்சியால் மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தப்படும் என சூடான் ராணுவமும், துணை ராணுவம் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.