சுவிஸ், ஏப். 10–
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நகரில் 11 மணி நேர கடிகாரம் பயன்படுத்துவது உலகில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலோதர்ன் நகரம், 12 மணிநேரம் கொண்ட கடிகாரத்தை தவிர்த்து, 11 மணிநேரம் கொண்ட கடிகாரத்தை பயன்படுத்துவதால் உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. நகரின் மையத்தில் உள்ள டவுன் சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த கடிகாரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த கடிகாரத்தில் 11 எண்கள் மட்டுமே காணப்படும்; 12 மணி நேரம் என்பதே இல்லை.
அனைத்தும் 11 மயம்
சோலோதர்ன் நகரம் எண் 11 உடன் தனித்துவமான உறவை கொண்டுள்ளது. நகரத்தில் 11 அருங்காட்சியகங்கள், 11 தேவாலயங்கள், 11 நீரூற்றுகள் போன்றவை உள்ளன. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித அர்சஸ் தேவாலயத்தில் கூட 11 கதவுகள், 11 ஜன்னல்கள், 11 வரிசைகள் மற்றும் 11 மணிகள் உள்ளன. இந்த தேவாலயத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கற்களும் 11 வகைகளாகும்.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள் இந்த நகரத்தை நிறுவினர். 1481ஆம் ஆண்டு சோலோதர்ன் சுவிஸ் கூட்டமைப்பின் 11வது மாகாணமாக இணைந்தது. 1215ஆம் ஆண்டு கவுன்சிலர்கள் தேர்வில் 11 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 12 மணிநேரம் இல்லாததற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. ஆனால் இது நகரத்தின் தனித்துவத்தை மேலும் உயர்த்துகிறது.