வீட்டின் சுவர் முழுவதும் அழுக்காகவும் பெயிண்ட் அடித்து வருடங்கள் சில ஆனதாகவும் நினைத்த தியாகராஜன் இந்த மாதம் எப்படியாவது வீட்டிற்கு பெயிண்ட் அடித்து விட வேண்டும் என்று நினைத்தார். அது போலவே இந்த மாதம் வீட்டைச் சுத்தப்படுத்தி பெயிண்ட் அடித்து விட வேண்டும் என்று ஒரு ஒப்பந்ததாரிடம் ஒப்படைத்தார்.
“என்ன கலர நீங்க தேர்ந்தெடுக்குறீங்க?” என்று ஒப்பந்ததாரர் கேட்டபோது
” கண்ணi உறுத்தாத எந்த கலரா இருந்தாலும் பரவாயில்லங்க. மின்சார விளக்கோட ஒளி அந்த வண்ணத்தில பட்டு பிரதிபலிக்கணும். அப்படி ஒரு கலர் எதுவாக இருந்தாலும் நீங்க அடிக்கலாம்” என்று ஒப்புதல் கொடுத்தார் தியாகராஜன்
” சரி சார் இந்தாங்க சாம்பிளுக்கு இந்த கலர்களப் பாருங்க ” என்று சில பல நிறங்களின் அடையாளங்களை தியாகராஜனிடம் காண்பித்தார் ஒப்பந்ததாரர். நிதானமாக ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்த தியாகராஜன் உறுத்தாத ஒரு கலரைத் தேர்வு செய்தார்.
” இந்தக் கலர் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். இத நீங்க அடிக்கலாம்”
என்று ஒரு கலரை தேர்வு செய்து கொடுத்தபோது
” சிறப்பு சார் உங்களுடைய ரசனையே ரொம்ப நல்லா இருக்கு. இந்த கலரை யாரும் விரும்ப மாட்டாங்க. அப்படி விரும்புறவங்க ஒரு ரசனைக்காரரா இருப்பாங்க. நீங்க உண்மையிலேயே ரொம்ப ரசனக்காரர் தான் “
என்று ஒப்பந்ததாரர் தியாகராஜனிடம் கை கொடுத்து விட்டு “சார் அடுத்த வாரம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கலாமா? என்று கேட்க
“சரி அப்படியே ஆகட்டும். அதுக்குள்ள வீட்ல இருக்கிற பொருள்கள எல்லாம் நான் வேற இடத்துக்கு செட் பண்ணுறேன். நீங்க பெயிண்ட் அடிச்சு முடிக்கவும் அதுக்கப்புறம் நான் திரும்ப எடுத்து வச்சுக்கிறேன்”
என்று ஒப்புதல் அளித்தார் தியாகராஜன். சொன்னது படியே சொன்ன தேதியில் ஒப்பந்ததாரர் பெயிண்ட் அடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஒரு வியப்பு ஏற்பட்டது.
“என்ன இது? இந்த சுவர்ல நிறைய இடங்கள்ள பேப்பர் ஒட்டி இருக்கே ? இந்த பேப்பர்கள கிழிக்கலாமா? வேண்டாமா? இல்லை எதுக்காக சில இடங்களில் பேப்பர் ஒட்டி வச்சிருக்காங்க?
என்று கவனித்த ஒப்பந்ததாரர் தியாகராஜனிடம் கேட்டார்.
” சார் எதுக்காக இந்த சுவர்ல சில இடங்கள்ள பேப்பர ஒட்டி வச்சிருக்கிங்க ? என்று கேள்வி கேட்க
“மறந்துட்டேன் ஸாரி .இந்த பேப்பர் ஒட்டுன இடத்த மட்டும் நீங்க பெயிண்ட் அடிக்க வேண்டாம். அதை விட்டுட்டு மற்ற இடத்தில எல்லாம் பெயிண்ட் அடிங்க ” என்று ஒப்புதல் தந்தார் .
“சரி ஏதோ வீட்டுக்காரர் சொல்றார் சரி எதுவாயிருந்தா நமக்கென்ன? பெயிண்ட் அடிச்சதுக்கு அப்புறம் பாக்கலாம்”
என்று நினைத்துக் கொண்டவர் சிறிது நாட்களுக்கு எல்லாம் மொத்த வீட்டையும் அழகான கலரால் பெயிண்ட் அடித்து முடித்தார்கள். ஆங்காங்கே பேப்பர் ஒட்டியதற்கான அடையாளம் இருந்தது.
“சார் இத இப்ப கிழிக்கலாமா? என்று ஒப்பந்ததாரர் கேட்க,
சரி கிழிங்க ” என்று தியாகராஜன் ஒப்புதல் அளித்த போது அங்கங்கே ஒட்டியிருந்த பேப்பர்களைக் கிழித்தார்கள் .அந்த சுவர்களில் சின்ன சின்ன கிறுக்கல்கள் ஏதோ சில எழுத்துகள் எழுதியிருந்தன.
” என்ன சார். இது வித்தியாசமா இருக்கு ? நான் கூட ஏதோ பெருசா இருக்குன்னு நினைச்சேன். ஆனா இங்க ஏதோ சின்ன சின்ன கிறுக்கல்களும் சின்னச்சின்ன எழுத்துக்களும் தான் இருக்குது. மத்தபடி எதுவும் இல்லையே? என்ன இது?
என்று கேட்டபோது கண் கலங்கிய தியாகராஜன்
” இது என்னுடைய பையன் சுவர்ல வரைஞ்ச ஓவியம். அவன் ஸ்கூல்ல படிக்கும் போது எதையாவது எடுத்து கிறுக்கிக்கிட்டு இருப்பான். இப்போ அவன் இல்ல எங்களை விட்டு வெகு தூரம் போயிட்டான். அவனுடைய நினைவா தான், நாங்க இத வச்சுட்டு இருக்கோம்.
என்று தியாகராஜன் சொல்லும் போது கண்கள் கலங்கி இருந்தன.
” சார் மன்னிச்சுக்கோங்க. இந்த கிறுக்கலுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்குன்னு தெரியாது? அதனாலதான் நீங்க இதை பாதுகாத்துட்டு வர்றீங்க அப்படிங்கற விஷயத்த புரிஞ்சுகிட்டேன். இப்போ அந்த பையன் எங்க இருக்கான் சார் என்று ஒப்பந்ததாரர் கேட்டபோது கண்களில் நீர் ஒழுக தியாகராஜன் மேலே பார்த்தார் .அவரின் மனைவியும் ஆறுதலாக வந்து தியாகராஜனின் தோள் சாய்ந்தார்.
அதை எப்படி எங்க வாயால சொல்றது. பிறந்தது ஒரே ஒரு பையன். சின்ன வயசுலயே எங்கள விட்டுட்டு போயிட்டான். அவன நினைக்காத நாளில்ல. அவனுடைய நினைவா தான் அவன் வரைஞ்ச இந்த கிறுக்கல் ஓவியங்கள் நாங்கள் பாதுகாப்பாக வச்சிருக்கோம். எத்தன தடவ வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சாலும் நாங்க இத அழிக்கிறது இல்ல. என் பையன் இந்த ஓவியத்தில் வாழ்ந்துகிட்டு இருக்கான்னு நினைக்கிறோம்” என்று தியாகராஜனின் மனைவியும் அழுது கொண்டு சொன்ன போது அந்த ஒப்பந்ததாரருக்கு என்னவோ போலானது.
“சார் உங்களைப் பற்றி பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க இவ்ளோ பெரிய வலிய சுமந்துட்டு நீங்க வாழ்ந்து கொண்டு இருக்கிறதே பெரிய விஷயம். சார் எங்களை மன்னிச்சிடுங்க. அந்த பக்கம் கொஞ்சம் திரும்பிப் பாருங்க ” என்று அவர் சொன்ன போது, அந்தச் சுவரைப் பார்த்தவருக்கு எதுவும் புரியவில்லை.
உங்களுக்கு தெரியாம ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் நீங்க ஓட்டுனது மாதிரியே ஒரு பேப்பர ஒட்டி வச்சோம். அதக் கிழிச்சு பாருங்க “என்ற போது, அந்தப் பேப்பரைக் கிழித்தார் தியாகராஜன். அதில் சிறு வயதில் இறந்து போன தியாகராஜன் மகனின் படம் இருந்தது.அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டபடியே நின்றனர், தியாகராஜனும் அவர் மனைவியும் அந்தக் கிறுக்கல் ஓவியங்களுக்கு மத்தியில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான் தியாகராஜனின் மகன்.