செய்திகள்

சுற்றுலா துறையைத் தட்டி எழுப்பும் மாலத்தீவின் சர்ச்சை


நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்


பொறுப்புள்ள பதவியில் அமர்ந்தவுடன் பணிவும் பொறுப்பாக செயல்படும் தன்மையும் மிக அவசியமாகும். அதுவே அவர்கள் ஏற்று இருக்கும் பதவிக்கும் அழகு.

சமீபத்தில் மாலத்தீவின் அமைச்சர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட லட்சத்தீவை பிரதமர் மோடி மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற நினைக்கிறார். இது மாலத்தீவை குறிபார்த்து எடுக்கப்படும் நடவடிக்கை என்ற தோரணையில் விமர்சனைங்களை வெளியிட அவை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவ பெரும் சர்ச்சை ஏற்பட ஆரம்பித்தது.

நமது பிரதமர் மோடியை விமர்சித்த மாலத்தீவின் மூன்று அமைச்சர்களும் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்தப் பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நார்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது.

பிரதமர் மோடியின் பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார்.மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மாலத்தீவின் இளைஞர் நலன், தகவல், கலை துறை இணை அமைச்சர் மரியம் சியுனா, பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவு செய்தார். பிரதமர் மோடியை மோசமாகவும் இஸ்ரேலின் ஊதுகுழல் என்றும் அநாகரிகமாக அவர் விமர்சனம் செய்தார். மாலத்தீவு இளைஞர் நலத் துறை இணையமைச்சர் மால்ஷா ஷெரீப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மோடி முர்தாபாத்’ என்று மோசமாக விமர்சித்து இருந்தார்.

மாலத்தீவின் ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ், இந்தியர்களை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துகளை தெரிவித்தார். “சுற்றுலாத் துறையில் எங்களுடன் இந்தியா போட்டி போடுவது ஒரு மாயை. நாங்கள் வழங்கும் சேவையைப் போன்று இந்தியாவால் வழங்க முடியுமா? இந்தியர்களால் சுத்தத்தை பேண முடியுமா? இந்திய சுற்றுலா நகர அறைகளின் தூர்நாற்றம் ஒன்றே, சுற்றுலாத் துறையை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும்” என்று ஜாகித் ரமீஸ் விமர்சித்தார்.

மாலத்தீவின் ரம்மியமான எழிலையும் கடற்கரை சுற்றுலா அம்சங்களும் பணக்கார இந்தியர்களுக்கும் பல பிரபலங்களுக்கும் பிடித்தமான சுற்றுலா பகுதியாகும். ஆனால் இப்படி இந்தியாவையும் நமது பிரதமரையும் நேரடியாக கேலி செய்ததை பொறுத்துக் கொண்டு இருக்காமல் பதிலடியாய் இனி மாலத்தீவுக்கு போக மாட்டோம் என்று குரல் கொடுத்ததுடன், பலர் தாங்கள் மேற்கொள்ள இருந்த மாலத்தீவுக்கான பிரயாணத்தையும் ரத்து செய்துள்ளனர்.இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய போராக வெடித்துள்ளது. மாலத்தீவைப் புறக்கணித்துவிட்டு இந்திய சுற்றுலா தலங்களுக்கு செல்லுங்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக பிரபல நடிகர்கள் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

மாலத்தீவின் சுற்றுலா துறை சங்கங்கள் தங்களது அமைச்சர்கள் கூறியது தவறு என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் வருகிறார்கள்.

அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கும் ஓர் முக்கியமான கருத்து ‘நமது அண்டை நாடான இந்தியா மிக நெருக்கமான நட்பு நாடாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த உறவு மாலத்தீவிற்கு பல நன்மைகளைப் பெற்றுள்ளது.

நமக்கு ஏற்படும் இடர் காலங்களில் தீர்வு தர உடனடியாக முன்வந்துள்ள நாடு இந்தியாவாகும்.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் நமக்கு உதவியதுடன் ஊரடங்கு விலக்கப்பட்ட நாட்கள் முதல் நமது சுற்றுலா பொருளாதாரம் வலுப்பெற வைத்தது இந்தியர்கள்’ என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அப்படி மிக நெருக்கமான நட்பு நாட்டின் சுற்றுலா சின்னத்தையோ, வளர்ச்சியையோ குறை சொல்லக்கூடாது, மேலும் மிகப் பிரபலமான உலகத் தலைவராக இருக்கும் பிரதமர் மோடியை குறை கூறும் அருகதை நமது அமைச்சர்களுக்கு கிடையாது என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மாலத்தீவின் ஜனாதிபதி சமீபமாக சீனாவின் உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதுடன் நம் நாட்டிற்கு வர இருந்த அரசு முறை பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.

நமது கடற்கரையின் எழில் உலக சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் உயர்ந்தால் நல்லது என்பதை உணர்த்தும் சம்பவமாகவும் இதை நாம் எடுத்துக்கொண்டு வருங்கால சுற்றுலா திட்டங்களை உருவாக்குவோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *