செய்திகள்

சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி மரணம்: போர்ச்சுகல் நாட்டு அமைச்சர் ராஜினாமா

லிஸ்பன், செப். 2–

சுற்றுலா வந்த இடத்தில் இந்திய கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, போர்ச்சுக்கல் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் உலக அளவில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் போர்ச்சுக்கல் நாட்டுக்கு அண்மையில் சுற்றுலா சென்றுள்ளார். கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு சுற்றுலா போன இடத்தில், திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே லிஸ்பனில் உள்ள பிரபல சான்டா மரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து தாயும், சேயும் மேல்சிகிச்சைக்காக சாவ் பிரான்சிஸ்கோவில் உள்ள சேவியர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர். ஆம்புலன்சில் பயணிக்கும்போதே, அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடையவே அவரை மயக்கத்தில் இருந்து மீட்க உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்ததும் அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.

அமைச்சர் பதவி விலகல்

லிஸ்பனில் உள்ள பிரபல சான்டா மரியா மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதிகள் இருந்து, அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இந்திய பெண் உயிரிழந்திருக்கமாட்டார்; மருத்துவ சேவையை முறையாக வழங்காமல் அலட்சியமாக இருந்ததே கர்ப்பிணி மரணத்திற்கு முக்கிய காரணம் என பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து நிர்வாகி ரீதியாக நிகழ்ந்த தவறுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக போர்ச்சுக்கல் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்ட்டா டெமிடோ அதிரடியாக அறிவித்தார். அத்துடன் அவர் தமது ராஜினாமா கடிதத்தையும் பிரதமரிடம் அளித்துள்ளதாகவும், அதனை அவர் ஏற்றுகொண்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சருடன் சேர்ந்து இரண்டு சுகாதாரத் துறை செயலாளர்களும் தங்களது பதவியை துறந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.