நாடும் நடப்பும்

சுற்றுலாவுக்கு ஏற்ற தமிழகம்


நாடும் நடப்பும் –ஆர்.முத்துக்குமார்


தமிழகம் பன்முனை வளர்ச்சிக்கு தயாராகுகிறது. கணினித் துறை, ரசாயனத் துறை, தொழில் துறை சாதனைகளுடன் சுற்றுலா துறையிலும் சாதனை படைக்க அடித்தளம் போடப்பட்டு வருகிறது.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகம் நோக்கி சுற்றுலா மேற்கொள்ள மலைப்பிரதேசம், கடற்கரை மற்றும் கோயில் திருத்தலங்கள் ஈர்ப்பு சக்தியாய் உள்ளன.

மலைகளின் ராணி என வர்ணிக்கப்படும் ஊட்டி, அதற்கு இணையான கொடைக்கானல் தினமும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை கவரத் தான் செய்கிறது. விடுமுறை நாட்களில் தங்க இடவசதியின்றி தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது அதற்கு சாட்சி.

பரபரப்பான வாழ்க்கை முறை வேலை அழுத்தங்களுக்கு இடையே பணியாற்றிக்கொண்டிருக்கும் ஐடி துறையினர், தொழிற்சாலை ஊழியர்கள் எல்லோருமே வார விடுமுறைக்கு நகரத்தின் வேகத்தில் இருந்து சற்றே விலகி ஓய்வுக்காக பலதரப்பட்ட சுற்றுலா இடங்களில் தஞ்சம் புகுவது வாடிக்கையாகிவிட்டது.

இதை தமிழக அரசும் உணர்ந்து எல்லா சுற்றுலா பகுதிகளிலும் வசதிகளை மேம்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அருகாமையில் உள்ள மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இந்தியர்கள் சுற்றுலாப் பயணமாக செல்லும் போது அங்கு ரசிப்பது தூய்மையை எங்கும் எதிலும் சுத்தம் இருப்பதைப் பார்க்கிறோம்.

சாப்பிங் வளாகங்கள், சாலைகள் மற்றும் தங்கும் ஓட்டல்களில் எல்லாம் ஆடம்பரத்தனம் இருப்பதுடன் எல்லோரையும் வசீகரப்படுத்துவது அங்கெல்லாம் உள்ள ஒழுக்கமும் சுத்தமும் தான்.

நாமும் நமது சுற்றுலா பகுதிகளை சுத்தமாகவும் நவீனமாகவும் வைத்து இருக்க வேண்டும். மதுரையை எடுத்துக்கொண்டால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வட இந்தியர்கள், வெளிநாட்டவர் வருகை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதை காண்கிறோம்.

அந்தக் காலத்தில் காசி முதல் ராமேஸ்வரம் வரை நடந்தால் புண்ணியம் என்று கருதப்பட்டது. அந்த வழித்தடத்தில் தமிழகத்தில் மதுரைக்கு ஒரு சிறப்பு இடம் யாத்ரீகர்களிடம் இருந்தது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுடன் அறுபடை வீடுகளில் இரண்டு அதாவது திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலையும் உண்டு.

இப்படி யாத்திரிகர்கள் உலகெங்கும் இருந்து வரும் புண்ணியத்தலம் மதுரை ஆகும்.

அவர்களின் வருகைக்கு ஏதுவாக வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக மதுரை சர்வதேச விமான தளமாக மாறி வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். அத்துடன் தேஜஸ் அதிவேக ரயிலில் சுற்றுலா விரும்புபவர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது.

சுமார் 700 வெளிநாட்டு பயணிகளும் அன்றாடம் சென்னை, மும்பை, திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இருந்து எல்லாம் மதுரை வந்து செல்கின்றனராம்.

இத்தனை வசதி வாய்ப்புகளுடன் கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு அருகாமையில் இருப்பதாலும் மதுரை மிக முக்கிய சுற்றுலா பொருளாதாரமாக உருவாகிவிட்டது.

சங்ககால சிறப்புகளைப் போற்றிப் பாதுகாத்து வரும் மதுரை பற்றி நூல்களில் படித்து மட்டுமே தெரிந்து கொண்ட பலருக்கு இனி நேரில் கண்டு ரசிக்க வசதி வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. கீழடி தொல்லியல் களம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும் சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும் ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிக தொடா்பையும் வணிகச் சிறப்பையும் நமக்கு உணா்த்துகிறது.

அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இயற்கைச் செல்வம், தொன்மை சிறப்பு, பண்பாட்டு முதிர்ச்சி, கலைவளம், மொழிவளம், மலைநகர்கள், வனங்கள், காடுகள், வனவிலங்குகள், பறவைகள், பசுமை நிறைந்த சமவெளிகள், வளம் பெருக்கும் ஆறுகள், அருவிகள், நீண்ட வெண்மணற்கடற்கரைகள், உப்பங்கழிகள், கால்வாய்கள், வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட கோயில்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அற்புதக் கைவினைப் பொருள்கள், பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் பரதம், கேட்கக் கேட்கத் தெவிட்டாத இசை, கிராமியக்கலைகள் போன்ற பல்வேறு வளங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. இச்சிறப்பினைச்“செல்வம் எத்தனை உண்டு புவி மீதே அவையாவும் படைத்த தமிழ்நாடு”

என்று பாரதியும் பாடியுள்ளார்.இதையெல்லாம் உணர்ந்து பொதுமக்களும் சுற்றுலா பயணிகள் விரும்பும் தூய்மைக்கும் ஒழுக்கங்களுக்கும் உறுதி தந்தாக வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *