கோடைகால விடுமுறை என்றால் பணக்காரர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் மாதிரி . கோடை கால உறைவிடங்கள் என்று கோடிகளைக் கொட்டிச் செலவழித்து கோடையை – கோடை விடுமுறையை கழித்துவிட்டு குதூகலத்தோடு வருவார்கள்.
அது அவரவர்களின் கையில் இருக்கும் பொருளாதாரத்தைப் பொறுத்தது.
கோடை விடுமுறை,அது கண்களுக்கும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அறிவுக்கு அடுத்து அந்த சுற்றுலாத்தலம், சுற்றுப்பயணம் இட்டுச்செல்லுமா என்றால் சில விஷயங்கள் இட்டுச் செல்லும். சில விஷயங்கள் பொழுதுபோக்காக அமையும் . அது அவரவரின் பார்வையைப் பொறுத்தது.
ஆனால் இதற்கெல்லாம் மாறாக தன் குடும்பத்தை கோடை விடுமுறைக்காக சுற்றுலாப் பயணம் எங்கு கூட்டிச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் பாலி.
பணம் இல்லை என்றாலும் மனது நிறைய ஆசைகளோடு இருக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவுக்கும் அவர்கள் படிக்கும் படிப்பிற்கும் இந்த கோடை விடுமுறை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும் என்று நினைத்தார்
ஆடம்பரமாக வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் அழைத்துச் செல்வதும் கோடை கால உறைவிடங்களுக்கு அழைத்துச் செல்வதும் அவ்வளவு விருப்பமாக பாலிக்கு தெரியவில்லை.
மாறாக சென்னையில் உள்ள உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா நூலகத்திற்கு அழைத்துச் சென்றார் .
நான்கு தளங்களைக் கொண்ட அந்த நூலகத்தை லட்சக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை இந்தக் குழந்தைகளுக்கு காட்ட வேண்டும். அதுதான் அவர்களின் சுற்றுலாப் பயணம் என்று தன் மனதிற்குள்ளே அடிக்கோடிட்டு இருந்தார்.
அது போலவே ஒரு நாள் விரிந்து பரந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் வளாகத்தில் இருந்த கன்னிமாரா நூலகத்திற்கு கூட்டிசென்று முதல் தளத்தில் ஆரம்பித்த அவர் பயணம் இரண்டாம் தளத்திற்கு வந்தது.
அப்போது அங்கே முத்து அமர்ந்திருந்தான் .
முத்து கூட பாலியை கவனிக்கவில்லை .
முத்துவின் தோளைத் தொட்டார் பாலி, திரும்பிப் பார்த்த முத்து திடுக்கிட்டான் .
பாலி அங்கே நின்று கொண்டிருந்தார் .
அண்ணே இங்கே எங்கே? என்று கேட்க
இந்தா மனைவி மக்களுடன் வந்து இருக்கேன் . இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் லைப்ரரி, புத்தகம் அப்படிங்கறது எல்லாம் எதுவும் தெரியாது.
அதுதான் இந்தச் சுற்றுலாப் பயணம். இந்தக் கோடை விடுமுறை அவங்களுக்கு ஒரு சிறப்பாகத் தான் இருக்கணும் அப்படிங்கிற அதுக்காகத்தான் இந்த கன்னிமாரா நூலகத்திற்கு கூட்டிட்டு வந்திருக்கேன் .
எத்தனை எத்தனை அறிவாளிகள் உருவான இடம் ; எத்தனை எத்தனை புத்தகங்கள்; எத்தனை எத்தனை அறிவு சுரங்கங்கள்; இவங்கள பார்க்கட்டும்; இந்த லைப்ரரியைச் சுத்தி காட்டணும். அதான் என் ஆசையா இருந்தது என்று சொல்லி மனைவி மக்களை முத்துவிடம் அறிமுகப்படுத்தினார்.
சரியாச் சொன்னீங்க . இந்தத் தலைமுறை ஆளுகளுக்கெல்லாம் செல்போனும் லேப்டாப்பும் சமூக வலைதளங்கள் தான் பெருசா தெரியுது.
புத்தகங்களை யாரும் கண்டுக்கறதில்ல. நீங்க போங்க எல்லாத்தை சுத்தி காட்டுங்க. என்றபோது ,
அந்தக் குழந்தைகள் நன்றி சொல்லிவிட்டு ஒவ்வொரு தளமாக மேலே ஏறினார்கள்.
அவர்கள் சென்ற பிறகு முத்துவுக்கு ஒரு மகிழ்ச்சி முளைத்தது .
சபாஷ் பொழுது போக்குவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்க அறிவுப் பூர்வமான விஷயத்திற்கு அண்ணன் அழைத்து வந்திருக்கிறார்.
இவர் போல மற்றவர்களும் தங்கள் குழந்தைகளின் அறிவு சார்ந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றால் சிறப்பாக இருக்குமே என்று தோன்றியது.
அப்போது பாலியின் குழந்தைகளிடம்
அறிஞர் அண்ணா படித்தது இந்த நூலகத்தில் தான்; பெரிய பெரிய அறிஞர்கள் படித்தது இந்த நூலகத்தில் தான். லட்சக்கணக்கான புத்தகங்கள் இங்கு இருக்கு.
நீங்க எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு நூலகர் அந்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது முத்துவின் காதில் விழுந்தது.