சிறுகதை

சுற்றுச் சூழல் மாசு – மு.வெ.சம்பத்

சுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று வயது நூறு ஆரம்பம். ஊர் மக்கள் மட்டுமின்றி நிறைய வெளியூர் மக்கள் அவரிடம் ஆசி பெற வந்திருந்தனர். பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி துறையினர் என நிறைய பேர்கள் குவிந்திருந்தார்கள். அப்படி என்ன சுப்பிரமணியம் அவர்கள் சாதித்து விட்டார் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது அல்லவா.

சுப்பிரமணியம் அவர்கள் சிவசாமி – காமாட்சி தம்பதிக்கு பிறந்தவர். சின்னக் கிராமத்தில் பிறந்த அவரை அவரது தந்தை நன்கு படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் சுப்ரமணியர் வேளாண்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். வேளாண்மையில் நிறைய யுக்திகள் புகுத்தி உற்பத்தியைப் பெருக்கச் செய்தார். விவசாயிகளுக்கு எண்ணற்ற உதவிகள் செய்தார்; பல பதவி உயர்வுகள் பெற்றார். நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். தாய்நாடு மற்றும் வெளி நாடுகளில் வேளாண் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிறைய விருதுகள் பெற்று நாட்டுக்குப் புகழ் சேர்த்தார்.

என்னதான் பதவி பெற்று உச்சநிலைக்குச் சென்றாலும் தனது கிராம முன்னேற்றமே அவருக்கு முக்கியமாகத் தோன்றியது. விடுமுறை நாட்களில் தவறாமல் கிராமத்திற்கு வந்து விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வகை செய்தார். இவரது உழைப்புக்குப் பலனாக இவரது கிராமம் மாதிரிக் கிராமமாகத் தேர்வு செய்யப்பட்டு அரசாங்கம் விருதுகள் வழங்கின. தனது வேளாண் அனுபவத்தை தனது கிராமத்தோடு நிறுத்திக் கொல்லாமல், பக்கத்துக் கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்து சுற்றியுள்ள கிராமங்களிலும் வேளாண் மகசூலை கொழிக்கச் செய்தார். நல்ல விதைகள், இயற்கை உரங்கள், பயிர் முதிர்ச்சியடையும்போது பாதுகாப்பு முறைகள், அறுவடை ஆனதும் நிலத்தைப் பண்படுத்தும் முறை என பலவிதமான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை தந்தார். பின் ஒரு விவசாய ஆலோசனை மையம் துவங்கி விவசாயிகளுக்கு விவசாயம் பற்றி புரிதல் ஏற்படுத்தினார். நிறைய மக்கள் விவசாயம் பக்கம் திரும்பினார்கள். விவசாய கடன் வங்கி ஒன்று தானாகவே முன் வந்து கிளை ஒன்றை இவரது கிராமத்தில் துவங்கியது. இவர் வங்கியில் எப்படி கடன் பெறுவது, அதை எப்படி முறையாக செலுத்துவது, அந்தத் தொகையை எப்படி விவசாயப் பொருள் வாங்க உபயோகப்படுத்துவது என எல்லா ஆலோசனைகளையும் வழங்கினார்.

தனது பணிக்காலம் முடிந்ததும் நிறைய நிறுவனங்கள் நல்ல சம்பளத்துடன் இவரை அழைக்க இவர் முடியாதென மறுத்ததோடு மட்டுமல்லாமல் தாய் தந்தையருடன் கிராமத்தில் விவசாயப் பணியை மேற்கொள்வதே எனது லட்சியம் என்றும் கூறி விட்டார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவிதமான வெகுமதிகள் இவருக்கு தர முன் வந்த போது இவர் கிராமத்தில் மகசூல் பெற பாடுபட்டவர்கள் பெயரையே பரிந்துரை செய்தார். இவர் கிராமத்தில் யாரும் நிலத்தை விற்காத வண்ணம் பார்த்துக் கொண்டதோடு கிராமங்கள் இடையே பரஸ்பர நல்லுணர்வு மேலோங்கச் செய்தார்.

பெரிய பிரம்மாண்ட பந்தல் கிராமத்தின் நடுவே போட்டு சுப்ரமணியம் அவர்கள் நூற்றாண்டு துவக்க விழா என்ற வாசகம் அடங்கிய ஒரு பேனர் மற்றும் நிறைய பதாதைகள் கிராமம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. கிராம மக்கள் முகத்தில் மகிழ்வு அலைகள் தாண்டவமாடின. அரசு அதிகாரிகள், அரசியல் சார்ந்த நபர்கள், உள் நாடு மற்றும் வெளி நாட்டு வேளாண் அறிஞர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம முக்கியஸ்தர்கள் என பலர் வந்திருந்தனர். விழா மேடையில் எல்லோரையும் அழைத்து ஊர்த்தலைவர் தனது உரையை மொழிந்தார். வந்திருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக பேசினார்கள். அதில் ஒருவர் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிடுவதில் முனைந்தார். அதன் தலைப்பு தரிசு நிலத்தை தங்கமாக்கலாம்” என்பது தான். சுப்ரமணியம் அவர்கள் கூறிய கருத்துக்களை தொகுத்து அந்த புத்தக ஆசிரியர் அந்த புத்தகத்தில் எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் அங்கு வந்தவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

அடுத்ததாக சுப்பரமணியம் அவர்கள் கூறியவற்றை எழுதி வைத்து மேடையில் ஒருவர் படித்தார். முதலில் வேளாண்மை பற்றி அவர் கூறியதைப் படித்தார்.

வேளாண் நிலங்களை நம் பூமித்தாயாகக் கருத வேண்டும். விவசாயம் ஒரு தடவை பொய்த்து விட்டால் நிலத்தை விற்று பணம் பண்ணலாம் என்ற எண்ணத்தை கை விட வேண்டும்.

மேலும் விவசாய நிலங்கள் வீடுகள் ஆவதை தடுப்பது நமது தலையாய கடமையாகும். நல்ல மகசூல் பெற, விவசாய நில மேம்பாடு, தரமான விதைகள், வயலுக்கு நீர் வழிப்பாதை, இயற்கை உரங்கள் போன்ற இன்னும் பல விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் ஏற்படும் செலவினங்களை முன் கூட்டியே ஓரளவு கணித்து சேமிப்பின் மூலம் சரி செய்ய வேண்டும்.

விவசாயம் சீரடைந்தால் தான் நாட்டின் வளம் பெருகுவதோடு இருக்கும் மக்களும் விவசாயம் செய்ய முனைவர். தற்போது வேளாண் துறையில் அரசியல் புகுந்து நிலைமை மோசமாகி உள்ளதை யாவரும் அறிவர். மக்கள் பெருக்கம், நாடுகளிடையே நிலவும் பனிப்போர், நீர்ப் பற்றாக்குறை, இயற்கை வளம் அழிப்பு, உயிரினங்கள் அழிவு, நில நடுக்கம், வெள்ளம் போன்ற பல காரணிகளால் பூமி பாழ்பட்டுள்ளது.

தற்போது நாடுகளிடையே நிலவும் வான்வெளிப் பயணம் கோள்களையும் மாசு படுத்தி வருகிறது. நிலவு, சூரியன், வியாழன், செவ்வாய் போன்ற கோள்கனில் உள்ள கனிம வளம் இவர்கள் கள்ணில் உலாவி வருகின்றன. நாடுகள் ஏவும் விண்கலன்கள் சரியாக வேலை செய்யவில்லையோ, காலாவதியாகி விட்டதோ என்றால் அதை பூமிக்கு கொண்டு வரும் சிந்தனையின்றி அப்படியே விட்டு விடுவதால் சுற்றுச் சூழல் கோள்கள் வானவெளி மாசு அடைகின்றன. நிலவின் தென் பகுதி, வட பகுதி என பிரித்து ஏவுகணைகள் விண்ணில் பாய்கின்றன. நீர்வளம் கண்டால் மனிதன் அங்கும் சென்று வாழலாமென்ற அறை கூவல் வேறு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சர்வதேச வான்வெளி ஒப்பந்தம் கோள்கள் எல்லாம் எல்லா மனித குலங்களுக்கும் சொந்தம். யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது என்பதாகும். தற்போது தனியார் நிறுவனங்கள் கூட கோள்களுக்குச் செல்லலாம் என்றால் அவை மாசுபடும் காலம் வெகு பக்கத்தில் தான் உள்ளது.

வருங்கால சந்ததியினரை மனதில் கொள்ள வேண்டும். எங்கள் தாத்தா அனுபவித்ததை எங்கள் அப்பா முழுதும் அனுபவிக்கவில்லை, எங்கள் அப்பா அனுபவித்ததை நான் அனுபவிக்கவில்லை, நான் அனுபவித்ததை என் பையன் அனுபவிக்கவில்லை என்பதே நிதர்சனம். யோசியுங்கள். நான் கண்ட இந்தியா வேறு. நான் காணும் இந்தியா வேறு. காப்பாற்றுவோம் கோள்களை மற்றுமின்றி நமது மனித குலத்தையுமே என்று படித்து முடித்தார்.

விழா மேடையில் சுப்ரமணியம் அவர்கள் அனுபவம் மற்றும் அறிவின் திறமையைப் பாராட்டி எழுந்த கரவொலி கிராமத்தையே அதிர வைத்தது. இந்த வயதில் இப்படியொரு சிந்தனை சிற்பியா என பலர் பேசினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *