சிறுகதை

சுரேந்தர்கள் தேவை | தருமபுரி சி.சுரேஷ்

அப்பா முனுசாமி கேஸ் சிலிண்டர் போடும் வேலை. அம்மா கட்டிட வேலையில் தினக்கூலி. ஒரே மகன் வயது பத்து. இருக்கும் அரசாங்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவன் பெயர் ராஜேஷ்.

ராஜேஷ் குறித்து பெற்றோர்களுக்கு அதிகம் தெரிகிறதோ இல்லையோ…. அவன் ஆசிரியர் ஆகிய எனக்கு அதிகம் தெரியும்.

அவனின் பெற்றோர்கள் அன்றாட வாழ்வின் தேவைகளை குறித்தே சிந்திக்கிறவர்களாக செயல்படுகிறவர்களாக காணப்படுகிறார்கள்.

அதனால்தான் அவனை குறித்தும் அவனுக்குள் இருக்கும் திறமைகளை குறித்து அறிய ஊக்கப்படுத்தவும் முயற்சிக்கவில்லை என்று சுரேந்தர் யோசித்தான். இப்படித்தான். அனேக ஏழைப் பிள்ளைகள் திறமைகள் இருந்தும் அவர்களை முன்னோக்கி நடத்த அவர்களுக்குள் என்ன இருக்கிறது. அதற்கான வாய்ப்புகள் எங்கே என்பதை எல்லாம் அறியாமலே வாழ்ந்து வாழ்வை முடித்து விடுகிறார்கள்

என்னால் இந்த ராஜேஷுக்கு உதவி செய்ய முடியாது. இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் பாட்டுத் திறமையை அடையாளப்படுத்தி ஊக்கப்படுத்த முடியும்.

வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும் என நம்பிக்கை மட்டும் இருந்தது.

ராஜேஷுக்கு அருமையான குரல் வளம் . அவன் பாடும் பாடல்களை நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

ஆனால் அந்த பாடலை சுற்றி இருக்கும் ஆட்கள் யாரும் கேட்கத்தான் தயாராக இல்லை. காரணம் அவர்கள் வேலை ; அவரவர்கள் தேவைகள் என அன்றாட வாழ்வை நடத்துவதிலே அவர்களின் நேரங்கள் செலவழிந்து கொண்டிருப்பதுதான்.

நான் மட்டும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனை அழைத்து பாட சொல்லுவேன்; மெய்மறந்து கேட்பேன்; அவனின் தேனொழுகும் அந்தக் குரலை என்னுடைய மொபைலில் ரெக்கார்டிங்கில் பதிவு செய்து வைத்துக்கொண்டேன்.

அவன் பாடிய சில பாடல்கள் தனிமையில் இருக்கும் பொழுது எல்லாம் போட்டு கேட்பேன்.

இந்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் ஆகிய அவனை இந்த பூமியில் அடையாளப்படுத்தி விட வேண்டும் என எனக்குள் ஒரு சத்தம் அவ்வப்பொழுது எழும்பிக் கொண்டிருந்தது.

போன மாதம் எங்க ஊரில் நடைபெற்ற ஊர் திருவிழாவில் அவனை உற்சாகப் படுத்தி மைக் முன்பாக நிற்க வைத்து பாட வைத்தேனே….

அனேகர் அவனைப் பாராட்டினார்கள். அதுவே அவனுக்கு கிடைத்த முதல் வெற்றி.

அவனின் பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள். ‘சார் எங்க பயனுகுள்ள இவ்வளவு நல்லாப் பாடுற திறமை இருக்கா” அவனின் அப்பா வியந்தார் ; அம்மா சந்தோஷப்பட்டாள்.

எனக்குள் யோசித்தேன். இப்படித்தான் என் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நிலையும் இருக்குமோ ? பாடம் படி படி என்று உயிரை எடுக்கிறேன். வாழ்வியலுக்கு தேவையான வழிகளை அவன் திறமைகளையும் கண்டறிந்து அதில் வளர அவர்களை நான் ஒரு நாளும் வழி நடத்தியது இல்லை.

சம்பளத்துக்காகவே எதையோ நடத்துகிறேன். மனம் குத்தியது . மன கண்களுக்கு முன்பாக தன் வகுப்பை விட்டு இதுவரை கடந்து சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிற்கிறார்கள்.

இவர்களை மாங்கு மாங்கு என்று படி என்றுதான் மிரட்டி இருக்கிறேன். ஒரு நாளாவது அவர்களின் தனித்திறமைகளை ஆராய்ந்து கண்டுபிடித்து ஊக்கப்படுத்தி இருக்கிறேனா இல்லையே.

இனியும் நான் அப்படி இருக்க விரும்பவில்லை.

தாமஸ் ஆல்வா எடிசனை ஒரு ஆசிரியர் நீ ஒன்றுக்கும் லாயக்கு இல்லை இனி பள்ளிக்கு வர வேண்டாம் என கடிதத்தில் எழுதி அவன் தாயிடம் கொடுக்க சொன்னார்.

அவர் அப்படியே கொண்டுபோய் தாயிடம் கொடுத்தார். தன் தாயிடம் கேட்டான் “என்ன எழுதிக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்”

அதற்கு அந்த தாய் சொன்னால் “நீ ரொம்ப அறிவாளி அதனால் பள்ளிக்கூடம் வர வேண்டாமாம்”

அந்த தாய் நேர்மறை அறிவுச் சிந்தனைகளை அவருக்கு ஊட்டி வளர்த்தாள். பின்வரும் நாட்களில் அந்த தாமஸ் ஆல்வா எடிசன் அறிவியலின் தந்தை என அழைக்கப்படும் அளவிற்கு கண்டுபிடிப்புகள் சமூகத்திற்கு பயனுள்ள பத்திரமாய் திகழ்ந்தார்.

இனி ராஜேஷ் போல் திறமைகள் ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபட்டு காணப்படுகிறது.

அவைகளை கண்டுபிடித்து அவர்களுக்குள் இருக்கும் அந்த திறமைகளை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவேன். இந்தப் பாடம் சொல்லித் தருவது மட்டுமல்ல அவன் வாழ்வியலுக்கு வேண்டிய நடைமுறை காரியங்களையும் நடத்துவதே ஓர் நல்லாசிரியரின் கடமை என்பதை உணர்ந்தேன்.

நல்லாசிரியர் விருது பெற்று இருந்தாலும் அதற்கான செயல்முறைகள் இதுவரை இல்லை. இனி பள்ளியில் செயல்முறை படுத்த போகிறேன் என மனதுக்குள் சுரேந்தர் தீர்மானம் செய்து கொண்டான்.

தான் வீட்டில் டிவியின் முன்பாக உட்கார்ந்து கொண்டு சுரேந்தர் சேனலை மாற்றிக் கொண்டு இருந்தான். அப்போது ஒரு டிவியின் டாப் சிங்கர் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. அதில் ராஜேஷ் தைரியமாக பாடிக் கொண்டிருந்தான்.

உலகமே ரசித்தது.

இன்னும் எத்தனையோ ராஜேஷ்கள் அடையாளம் தெரியாமல் வெளியே இருக்கிறார்கள் .

அவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணியை ஆசிரியர் சுரேந்திரன் அவர் பள்ளியிலிருந்தே தொடங்கி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *