சிறுகதை

சுருக்குப் பை- மு.வெ.சம்பத்

Makkal Kural Official

அன்று தாம்பரத்திலிருந்து இராமநாதபுரம் செல்லும் சிறப்புப் புகைவண்டியில் பயணம் செய்த மணி. எதிரில் அமர்ந்திருந்த காரைக்குடி மற்றும் பரமக்குடி செல்வபவர்கள் தாங்களாகவே தங்களை அறிமுகம் செய்து கொண்டு, அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள், அரசியல் நிலமை, நாடு செல்லும் போக்கு என்று பலவிதமான பேச்சுக்களில் மூழ்கினார்கள்.

நடு நடுவே என்ன சார் நாங்கள் சொல்லுவது சரி தானே என்று காரைக்குடி கண்ணன் மணியைப் பார்த்துக் கேட்டார். மணியும் தன் பங்குக்கு நடு நிலையான கருத்துக்களை தெரிவித்தார். கண்ணன் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

புகைவண்டி நிலையங்கள் வரும் புகைவண்டிக்கு அன்பான வரவேற்பு தந்து விடை கொடுத்தது. வண்டி நிலையத்தில் இருக்கும் போது சுறு சுறுப்பான பயணிகள், வியாபாரிகள், அங்குள்ள ஊழியர்கள் ஓடிய வண்ணமே இருப்பார்கள். என்ன வயதானாலும், எத்தனை தடவை பயணித்தாலும் புகைவண்டி, நிலையங்களைக் கடந்து செல்லும் போது இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து காட்சிகளைக் காண்பது ஆனந்தமே. மேற்கொண்டு புகை வண்டி நிலையங்களில் வியாபாரிகள் டீ, காப்பி, வடை, இட்லி என கூவி விற்பது நாம் வாங்காவிட்டாலும் அவர்கள் குரல்களை கேட்பது ஒரு ஆனந்தமே. அதில் ஒரு வசீகரத் தன்மை உள்ளதாகவே அறிகிறோம்.

கண்ணன் தனது மனைவியை ஏதாவது சாப்பிடு என்று அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்தார். அவரின் மனைவி எனக்கு பசியில்லை தொந்தரவு செய்யாதீர்கள் என்றாலும், கண்ணன் அரைத்த மாவை அரைப்பது போன்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்த புகைவண்டி நிலையத்தில் கண்ணன் சப்பாத்தி வாங்கி வந்து சாப்பிட ஆரம்பிக்கும் போதும், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும் சுற்றுப்புறத்தை மறந்து நன்றாக உள்ளது; கொஞ்சம் சாப்பிடு என்று சொன்னார். தனது மகள், மகன், மனைவி இவர்களுடனேயே கண்ணன் பேசிய வண்ணம் வந்ததால் மணிக்கும் பரமக்குடி செல்பவருக்கும் சற்று நிம்மதியானது. கண்ணன் ஓட்டைப் பானையில் நண்டு விட்டது போல அவனது பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது. கடைசியில் அவரது அழுத்தத்திற்கு பணிந்த அவர் மனைவி சாப்பிட்டதும் உறங்க ஆயத்தமானார்.

புகை வண்டி காரைக்குடி வருவதற்கு அரை மணி நேரம் முன்பாகவே பொருட்களை சரி பார்த்து விட்டு இறங்குவதற்கு தயாரானார். வண்டி காரைக்குடியை விட்டு நகர்ந்ததும் அவரது மனைவி படுத்திருந்த படுக்கையின் ஓரத்தில் ஒரு சுருக்குப் பை இருந்ததைக் கண்ட மணி அதை எடுத்து பக்கத்து பகுதி அறையில் உள்ள கண்ணன் மனைவியுடன் பேசிய அவரது தோழியிடம் அதை ஒப்படைத்து கண்ணனிடம் சேர்க்கச் சொன்னார். தூக்கக் கலக்கத்தில் இருந்த அந்த தோழி அதை வாங்கிக் கொண்டு என்ன உள்ளே இருக்கிறது என்றார். நான் பார்க்கவில்லை என்றதும், அவர் அந்த சுருக்குப் பையை இலேசாக திறக்க, ஏதோ பேப்பர்கள் மற்றும் ரூபாய் நோட்டு போன்று இருந்தது கண்டு சரி நான் சேர்த்து விடுகிறேன் என்றார்.

இதற்குப் பிறகு மணி தூங்கிப் போனார். தனது நிலையம் வந்ததும் மணி இறங்கி மற்ற வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். சுத்தமாகவே இந்த நிகழ்வை மறந்தே விட்டார் மணி.

கண்ணன் வீட்டில் அவர் மனைவி கண்ணனிடம் ஏங்க நம்மிடம் சுருக்குப் பையே கிடையாதே, ஏன் என் தோழியிடம் வந்து பெற்றுக் கொள்கிறேன் என்றீர்கள் என்றார். அதற்கு கண்ணன் அதில் என்ன தான் இருக்குமென்று பார்க்கலாம் என்றார். எதற்கு நமக்கு அடுத்தவர்கள் பை என்றார் அவர் மனைவி. முதலில் போன் செய்து அதை எங்காவது தூக்கியெறியச் சொல்லுங்கள் என்றார்.

கண்ணன் இரண்டு தடவை போன் செய்து பார்த்தேன். தொடர்பே கிடைக்கவில்லை என்றார். சரி நாளை பேசலாம். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி போல அவர் ஒருத்தர் சுருக்குப் பையை கொடுத்து அதன் நினைவிலேயே உழல வைத்து விட்டார் என்றார் கண்ணன்.

அன்று காலை கைப்பேசியில் பேசிய மணி என்ன கண்ணன் சார் சுருக்குப் பை வந்ததா என்று கேட்டதும் கண்ணன் தன்னை அறியாமல் மணியிடம் சற்று கோபமாக அந்தப் பை என்னுடையது அல்ல என்று சொல்லி விட்டேன் அல்லவா. ஒரு குழப்பத்தை உண்டு பண்ணுவிட்டீர்கள் என்றார்.

மணி என்னை மன்னித்து விடுங்கள். நான் ஏதோ நல்லது செய்யப் போய், ஏதோ ஆகி விட்டது என்றார். சரி நான் அவர்களிடம் பேசி அதில் என்ன உள்ளது என்று பார்க்கிறேன் என்று கூறி கைப்பேசித் தொடர்பைத் துண்டித்தார்.

மறுநாள் பையைக் கொடுத்தவரிடம் மணி பேசினார். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். கண்ணன் தாறுமாறாகத் திட்டுகிறார். உடனே அந்தச் சுருக்குப் பையில் என்ன உள்ளது என்று பாருங்கள் என்றார். இதற்கு இன்றோடு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்றதும் அந்தப் பையைத் திறந்து பார்த்து, ஒரு பயங்கரமான சிரிப்புடன் அதில் ஒரு பேப்பர் உள்ளது. அதில் மாயாண்டி பரமக்குடி என எழுதியுள்ளது. அடுத்து செல்லாத ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டும், ஒரு கிழிந்த ஐநூறு ரூபாய் நோட்டும் உள்ளது. அடுத்ததாக, ஒரு வாசகம் அடங்கிய ஒரு பேப்பர் உள்ளது. அதில் இதில் உள்ளது மாதிரி எழுதி பத்து பேர்களுக்கு இன்றே அனுப்பினால் நல்ல சேதி வரும் என்று எழுதியுள்ளது. இதற்காகவா இந்த ஆர்ப்பாட்டம் என்றதும் மணி சிரிப்பை அடக்க முடியாமல் நீங்களே கண்ணனிடம் கூறி விடுங்கள். ஒரு சுருக்குப் பை எப்படி இவ்வளவு நான் நம்மிடையே வலம் வந்து பாடு படுத்தியுள்ளது என்றார். அடக்க முடியாத சிரிப்பில் ஆழ்ந்த அவர்கள் இருவரும் ஒட்டு மொத்தமாக இனிமேல் நமக்கு சொந்தமில்லாததைக் கையாளக் கூடாது என்றார்கள். தொடர்பை துண்டித்த மணி எதற்கு நமக்கு இந்த வேண்டாத வேலை. ஏதாவது விபரீதம் ஆகியிருந்தால், ஐயோ நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது என்று கூறிக் கொண்டு மறுபடியும் சிரித்தார்.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *