செய்திகள்

சுய சான்றிதழ் மூலம் கட்டிட அனுமதி பெற புதிய வசதி

சென்னை, பிப்.19–

ஒற்றைச்‌ சாளர முறையில்‌ கட்டட அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தி, இணையதளம்‌ வாயிலாக அதிகபட்சம்‌ 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி கட்டடப்‌ பரப்பளவிற்குள்‌ கட்டப்படும்‌ குடியிருப்புக்‌ கட்டுமானத்திற்கு (தரைத்தளம்‌ அல்லது தரைத்தளம்‌ மற்றும்‌ முதல்‌ தளம்‌) உடனடியாகப்‌ பதிவு செய்து சுய சான்றிதழ்‌ மூலமாக பொதுமக்கள்‌ கட்டட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும்‌. மேலும்‌ அவ்வாறு உடனடி பதிவு செய்யப்படும்‌ கட்டடங்களுக்கு கட்டட அனுமதி மற்றும்‌ பணி முடிவுச்‌ சான்று பெறத்‌ தேவையில்லை என்று என்று இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

நடப்பு ஆண்டுக்கான (2024–25) பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சென்னையை உலகத்தரம்‌ வாய்ந்த மாநகரமாக மாற்றியமைத்திட, சர்வதேச கண்காட்சிகள்‌, பன்னாட்டுக்‌ கூட்டங்கள்‌ நடத்திடும்‌ வகையில்‌, உலகத்தரம்‌ வாய்ந்த கலைஞர்‌ பன்னாட்டு அரங்கம்‌ நவீன வசதிகளுடன்‌ கிழக்குக்‌ கடற்கரைச்‌ சாலையில்‌ முட்டுக்காடு பகுதியில்‌ சுமார்‌ மூன்று லட்சம்‌ சதுர அடி பரப்பளவில்‌ கட்டப்படவுள்ளது. 5000 இருக்கைகள்‌ கொண்ட மாநாட்டுக்‌ கூடம்‌, 10,000 நபர்கள்‌ பார்வையிடும்‌ வசதிகொண்ட கண்காட்சி அரங்கம்‌, கூட்ட அரங்குகள்‌, கலை அரங்கம்‌ ஆகிய வசதிகளுடன்‌ அமையவுள்ள இந்தப்‌ பன்னாட்டு அரங்கம்‌ சிங்காரச்‌ சென்னையின்‌ நவீன அடையாளங்களுள்‌ ஒன்றாகத்‌ திகழும்‌.

புதிய வடிமைப்பில்

தமிழ்நாடு இல்லம்

தலைநகர்‌ புதுடெல்லியில்‌ வைகை – தமிழ்நாடு இல்லம்‌, 257 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 3 இலட்சம்‌ சதுர அடி பரப்பளவில்‌ விருந்தினர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ போட்டித்தேர்வு மாணவர்கள்‌ தங்குவதற்கு உரிய வசதிகளுடன்‌ திராவிடக்‌ கட்டடக்கலை மரபில்‌ வடிவமைக்கப்பட்டு புதிதாகக்‌ கட்டப்படும்‌.

அண்மையில்‌, முதலமைச்சரால்‌ திறந்து வைக்கப்பட்ட கலைஞர்‌ நூற்றாண்டு ஏறுதழுவுதல்‌ அரங்கம்‌ அமைந்துள்ள வளாகத்தில்‌, தமிழர்களின்‌ தொன்மையான வரலாறு, பண்பாடு மற்றும்‌ கலைகளை ஒரே இடத்தில்‌ அரங்கேற்றம்‌ செய்யும்‌ வகையில்‌, நாட்டுப்புறப்‌ கலைகள்‌, சிற்பங்கள்‌, கைவினை மற்றும்‌ கைத்தறிப்‌ பொருட்கள்‌, தமிழ்நாட்டின்‌ மரபுசார்‌ தாவரங்களை உள்ளடக்கிய பசுமைப்‌ பரப்புகள்‌ ஆகியவை காட்சிப்படுத்தப்படும்‌. உள்நாட்டு மற்றும்‌ வெளிநாட்டு சுற்றுலாப்‌ பயணிகளைக்‌ கவரும்‌ வகையில்‌, இந்த வளாகம்‌ தமிழ்ப்‌ பண்பாட்டின்‌ முகவரியாகத்‌ திகழும்‌ வண்ணம்‌ 20 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ உருவாக்கப்படும்‌.

புராதனக்‌ கட்டடங்களை

புதுப்பிக்கும்‌ பணி

புராதனக்‌ கட்டடங்களை பழமை மாறாமல்‌ புதுப்பிக்கும்‌ பணிகளுக்கென இந்த ஆண்டு 50 கோடி ரூபாய்‌ ஒதுக்கப்பட்டு, தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ ஒரத்தநாட்டில்‌ உள்ள முத்தம்மாள்‌ சத்திரம்‌, திருவையாறில்‌ உள்ள நூறாண்டு பழமையான திருமண மண்டபம்‌, சென்னை சேப்பாக்கத்தில்‌ உள்ள இயக்குநரக அலுவலகம்‌ மற்றும்‌ ஈரோடு கொடுமுடியில்‌ உள்ள நெடுஞ்சாலைத்‌ துறையின்‌ பழமையான பயணியர்‌ விடுதி, சென்னை கிண்டி பொறியியல்‌ கல்லூரி புராதனக்‌ கட்டடக்‌ குவிமாடம்‌ ஆகியவை பழமை மாறாமல்‌ புதுப்பிக்கப்படும்‌.

புதிய கட்டட வடிவமைப்பு

கொள்கை ஆவணம்

பல்வேறு அரசு அலுவலகங்கள்‌, பள்ளி, கல்லூரிக்‌ கட்டடங்களின்‌ வடிவமைப்பில்‌ உலகளவில்‌ வளர்ந்து வரும்‌ நவீன போக்குகளையும்‌ தமிழ்நாட்டின்‌ கட்டிடக்கலை மரபுகளையும்‌ கருத்திற்கொண்டு, புதிய கட்டட வடிவமைப்புக்‌ கொள்கை ஆவணம்‌ ப்யூச்சர் ஆப் ஸ்பேஸ் விரைவில்‌ வெளியிடப்படும்‌. கட்டட வடிவமைப்பில்‌ அழகியல்‌, நவீன தொழில்நுட்பம்‌, பசுமைக்‌ கட்டுமானம்‌, பணிச்சூழலியல்‌ போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்திடத்‌ தேவையான வழிமுறைகள்‌ அடங்கிய கொள்கையாக ஒது அமைந்திடும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *