நாடும் நடப்பும்

சுய கொரோனா பரிசோதனை கருவி: 15 நிமிடத்தில் முடிவு

நாடும் நடப்பும்

ஆர்.முத்துக்குமார்

காய்ச்சல் இருக்கிறதா? என தெரிந்து கொள்ள தெர்மா மீட்டர் கருவி இருக்கிறது. நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள ரத்த பரிசோதனைக் கருவி இருக்கிறது. கர்ப்பமாகி விட்டதா? என்பதை தெரிந்து கொள்ளவும் சுய பரிசோதனை முறை இருக்கிறது அல்லவா? அந்த வரிசையில் சில நாட்களில் கொரோனா தொற்று உள்ளதா? என்பதை நமக்கு நாமே பரிசோதித்து தெரிந்து கொள்ள கருவி வர இருக்கிறது.

இந்தக் கருவியை கொண்டு 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவையும் தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய முறையில் குறைந்தது 12 மணி நேரமாவது ஆகி விடுகிறது. அந்த 12 மணி நேரத்தில் கொரோனா தொற்றின் பரவல் பலருக்கு உயிருக்கே பாதகமானதாக மாறுகிறது. மேலும் பாதிப்படைந்தவர் மற்றவருக்கு பரப்பி விடும் அபாயமும் அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் இப்படி உடனடியாக முடிவு தெரிந்து விட்டால் நிச்சியமாக பல உயிர்களை காப்பாற்றி விட முடியும் என்பதால் இந்திய நிறுவனம் இப்படி ஒரு பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளது.

புனேயைச் சேர்ந்த ‘மைலேப் டிஸ்கவரி’ நிறுவனம் வீட்டிலிருந்தபடியே கொரோனா தொற்று உள்ளதா? என்று சுய கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கான சாதனத்தை (கிட்) உருவாக்கியுள்ளது. இதனால் 2 நிமிடம் பரிசோதனை செய்து 15 நிமிடங்களில் முடிவை தெரிந்து கொள்ள முடியும். இந்த மருத்துவ சாதனத்துக்கு (ஸ்டிரிப்) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்துள்ளது.

அடுத்த வார இறுதியில் நாடு முழுவதும் உள்ள 7 லட்சம் மருந்தகங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கும். நாட்டின் 90 சதவீத பின்கோடு ஏரியா வரை தங்களது விற்பனை இருக்கும் வகையில் மருந்தகங்களுடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளதாக இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை மேற்கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை ஆர்டி–பிசிஆர் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

‘கோவிசெல்ப்’ என்ற பெயரில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பதிவிறக்கம் செய்த பிறகு பரிசோதனை கருவியை பயன்படுத்தும் முறையைத் தெளிவாக படித்துவிட்டு சோதனை செய்ய வேண்டும். பிறகு சோதனை அட்டையை ‘கோவிசெல்ப்’ என்ற செயலி மூலம் படமாக எடுத்து அனுப்ப (அப்லோட் செய்ய) வேண்டும். இவ்விதம் அனுப்பப்படும் தகவல்கள் ஐசிஎம்ஆர் கோவிட் –19 சோதனை தளத்துக்கு சென்று அங்கு பதிவாகும்.

இது மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தால் நல்லது. அல்லது சமூக விரோதிகள் போலி கிட்டுக்களை தயாரித்து அப்பாவிகளை ஏமாற்றக் கூடும்.

அதனால் பலருக்கு உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை பெற முடியாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *