சிறுகதை

சுயமருத்துவம் – ராஜா செல்லமுத்து

மீனாட்சிக்கு உடம்பு முழுவதும் கொப்புளம் கொப்புளமாய் வெடித்து கிடந்தது. வலியின் வேதனை தாளாமல் அழுது கொண்டே இருந்தாள்.

‘‘ஐயோ, அம்மா, அம்மா ஐயோ’’ என்று அவள் வாய் விட்டு அழுது கொண்டிருந்ததை உடனிருந்தவர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

“இது என்ன ? இது என்ன சுமையா? “

“நாம கொஞ்ச நேரம் மாத்தி சுமக்க அவளோட வேதனை அவளோட தான் போகும். நாம எதுவும் செய்ய முடியாது! பாவம் மீனாட்சி” என்று சுற்றியிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்களே ஒழிய ஒருவர் கூட இன்ன காரணத்திற்கு மீனாட்சிக்கு உடம்பு முடியாமல் போனது என்று யாராலும் கண்டுபிடிக்கவில்லை. மீனாட்சியின் வலி நீண்டு கொண்டே சென்றதேயொழிய நின்ற பாடில்லை.

“எத்தன நாளா இப்படி?”

“இப்பதான் ரெண்டு நாளா”

உடம்பு சுட்டு கெடந்துச்சு. சரி காச்சலாத் தான் இருக்கும்னு நினைச்சு விட்டுட்டோம். ஆனா பாருங்க அன்னைக்கு, ராத்திரியே உடம்பு முழுசும் கொப்பளம் கொப்புளமா வெடிச்சுருச்சு. இவ அழுற அழுகைய பாத்தா நமக்கே என்னமோ மாதிரி இருக்குடி தாயி என்று மீனாட்சியைச் சுற்றி உட்கார்ந்திருந்த பெண் ஒருத்தி கூறினாள்.

சாயங்காலம் தான் டாக்டர் வருவாங்க; அப்புறம்தான்… என்ன ஏதுன்னு கேக்கணும்” என்று இன்னொரு பெண்ணும் சொல்ல மீனாட்சி விடாமல் அழுது கொண்டே இருந்தாள்.

“ஒருவேளை அம்மைப் போட்டிருக்குமோ?

“இல்லையே, அப்படி ஏதும் இருக்காது. இது வேற மாதிரி இருக்கே” என்று ஒரு பெண் மீனாட்சியைத் தொட்டுப் பார்த்து கொப்புளத்திற்கு விளக்கம் சொன்னாள்.

ஏய் மீனாட்சி வேற ஏதாவது சாப்பிட்டியா ?

“இல்லை’’ என்று தலையாட்டினாள்.

“இதுக்கு முன்னாடி இப்படி ஏதாவது நடந்து இருக்கா?

இல்லையென்றே மறுபடியும் தலையாட்டினாள் மீனாட்சி

” ஏதாவது புதுசா ஒரு நோய் மாதிரி தெரியுது இல்ல”

“ஆமா ஒடம்பெல்லாம் வீங்கி கெடக்குதே என்று….

“ஆமா” என்று மீனாட்சியைச் சுற்றி உட்கார்ந்திருந்த பெண்கள் கூறிக் கொண்டிருந்தனர்.

சிலர் வேப்பிலையை அவளைச் சுற்றி போட்டிருந்தார்கள். சிலர் மஞ்சள் தூளைக் குழைத்து உடம்பெல்லாம் அப்பி கொண்டிருந்தனர் .

“மீனாட்சி வீட்டுக்காரரு எங்க?’’

என்று கேட்ட ஒரு ஆணின் கேள்விக்கு உடனே பதில் சொன்னாள் ஒரு பெண்.

ஏதோ ஒரு நாட்டு வைத்தியரப் பாக்க போயிருக்காராம் .

எதுக்கு?

உடம்புல எப்படி இந்த கொம்புளம் ஏற்பட்டுச்சுன்னு கேட்க

“ம்க்கும்” இது கூட ஒரு விதத்தில முட்டாள் தனமான விசயம் தான்

அலோபதியில இருக்கிற நல்ல விசயம் ஆயுர்வேதத்தில இருக்கிறதில்ல.

என்றவரின் பேரிச்சுக்கு உடனே பதில் சொன்னான் இன்னொருவன்.

‘‘எல்லாத்திலயும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யுது. அதுக்காக ஒன்ற மட்டுமே தூக்கி வச்சு கொண்டாடுறது தப்பு என்று பேசிக் கொண்டு இருந்தனர் ஆட்கள்.

மீனாட்சி வலியின் கொடுமை தாளாமல் அழுது புலம்பிக் கொண்டே இருந்தாள்.

அவளை ஒரு ஈடு பொருளாக வைத்து பேசிக் கொண்டிருந்தார்களேயொழிய அவளின் வலி பற்றி பேசவே இல்லை. ஒரு வழியாக ஒரு மருத்துவரை அணுகினர்.

மீனாட்சியைப் பரிசோதனை செய்த மருத்துவர்,

“ஏம்மா நைட்டு என்ன சாப்பிட்டீங்க?”

“ஒன்னுமில்லீங்க, வெறும் சாப்பாடு தான்.

“கூட ஏதாவது சாப்பிட்டீங்களா ?

“இல்லை” என்று தலையாட்டினாள் . அவளின் உடலில் பூத்துக் கிடந்த கொப்புளங்களை ஆராய்ச்சி செய்த மருத்துவர் குழம்பிப்போனார். இது என்ன வினோதமான நோயா இருக்கு. டாக்டரே என்னதென்று தெரியாமல் இடிந்துபோய் உட்கார்ந்தார்.

நீண்ட யோசனைக்குப் பின்னால் பெரிய பெருமூச்சோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். இது ஏதோ ஒரு அலர்ஜியா இருக்கணும்; இல்ல ஸ்கின் சம்பந்தமான ஒரு நோயா இருக்கனும். உடம்பு சம்பந்தமா ஏதாவது ஒன்ன செஞ்சிருந்தா மட்டும் தான் உங்களுக்கு இப்படி ஆயிருக்கணும். இல்லன்னா இப்படி நடக்க வாய்ப்பில்ல என்று டாக்டர் சொல்ல மீனாட்சியின் கணவன் பட்டென பதில் சொன்னான்

டாக்டர், நீங்க சொல்றதுல ஒரு உண்மையிருக்கு. எம்பொண்டாட்டி அவ உடம்ப பொண்ணு மாதிரி பார்த்துக்கிருவா எப்பவுமே ஏதாவது ஒன்ன செஞ்சுட்டே இருப்பா. இந்தக் கொப்பளம் வரதுக்கு மொத நாள் வாட்ஸ் ஆப்பில வந்த ஒரு நியூஸ் பாத்திட்டு அதுல இருக்கிற மாதிரியே செஞ்சு பாத்தா. அதனால கூட இப்படி ஆயிருக்கலாமா? என்று மீனாட்சியின் கணவர் சொன்னபோது டாக்டருக்குச் சுரீரென்றது.

எஸ் அது தான். அது தான் இந்த நோய்க்கு காரணம் என்று டாக்டர் பட்டென சுயமருத்துவம் செய்த மீனாட்சி செய்த வேலையை செய்த வேலையைப் சட்டெனப் பிடித்துக் கொண்டார்.

யம்மா இவரு சொல்றது உண்மையா? என்று டாக்டர் மீனாட்சியை கேட்ட போது ….

அவள் ஆமாம் என்று பலமாக தலையாட்டினாள்.

இந்த பொம்பளைங்களே இப்படித்தான். என்னா ஏதுன்னு விசாரிக்காம நல்லது கெட்டதுன்னு பாக்காம வாட்ஸ் அப், நெட்டில வாரத பார்த்து இதப் பூசுனா செகப்பாயிருவீங்க; இத தடவுனா உங்களுக்கு அழகு வந்துவிரும்னு சொன்னதும் கண் மூடித்தனமா ஏதாவது ஒன்ன செய்றது; இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு. கஷ்டம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? சும்மா எதையோ எழுதிபோட்டவன் போட்டுட்டு போயிட்டான். இப்ப மாட்டிக்கிட்டது யாரு? இவனுக எல்லாம் நம்மள வச்சு சோதனை பண்ணி பாப்பாங்க. நாம தான் முழிச்சுக் கிரனும். இந்த மாதிரி வர்ற நியூஸ் சரியான்னு தெரியாம நாம செஞ்சமுன்னா இப்படித்தான் அல்லல் பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று சொன்ன டாக்டர் மீனாட்சிக்கும் மருத்துவத்தை சொல்லச் சொல்ல தவறு செய்யப் போனவர்களுக்கு புத்தியில் சட்டென உரைத்தது.

இந்த மாதிரி செய்திகள பாத்து படிச்சுட்டு விட்டுருங்க.

நடைமுறைப்படுத்தனும்னு நினைக்காதீங்க. அப்படி செஞ்சீங்கன்னா அது கடைசியில் தவறாத்தான் முடியும் என்று சொல்ல …

அது மீனாட்சியின் புத்தியில் ஆணியடித்தது போல் பதிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *