சினிமா செய்திகள்

‘சுயநல’ அரசியலைக் கிழிக்கும் புதுமுகங்கள் விஜித், ஐயப்பன்: ‘கடுகு’ காரத்தில் வசனங்கள்!

‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்னும் பழமொழியை நினைவூட்டுகிறார் அறிமுக இயக்குனர் ஐயப்பன். (பார்வைக்கு பசு, பாய்ந்தால் புலி).

‘முயன்றால் முடியாதது எதுவுமில்லை’ என்ற அனுபவ மொழியை புதுப்பித்திருக்கிறார் அறிமுக நாயகன் விஜித் சரவணன். (ஐயோ, அப்பாவி – எளிமைத் தோற்றம்)

ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சியில் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார் இணைத் தயாரிப்பாளரும் வளர்ந்து வரும் நடிகருமான சிவ சேனாபதி.

அறிமுகமாகும் படத்தில் இவர்கள் மூவரும் நினைத்திருந்தால் காதல்… இல்லையா… காமெடி… இல்லையா ஆக்க்ஷன் படம் எடுத்திருக்கலாம். ஆனால் அரசியல் போகும் போக்கைப் பர்த்து இன்றைய நாட்டு நடப்பைப் பார்த்து,

மக்களுக்கு குறிப்பாக கட்சி தொண்டனுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத் துடிப்பில் அரசியல் நெடி படத்தை எடுத்து அதையும் ‘க்யூப்’பிலேயே நின்று விடாமல் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்களே, அந்த விடா முயற்சிக்கும், துணிச்சலுக்கும் முதலில் பாராட்டுக்கள். (நேரமும் காலமும் கூடி வந்திருக்கிறதே, இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும்).

‘என்னுயிர்த் தோழன்’ என்று பாரதிராஜா எடுத்த ஒரு படம் (1990), நினைவிருக்கிறதா… முன்னாள் அமைச்சர் கே.ராஜாராமின் உறவுக்காரப் பையன் பாபு நாயகனாக நடித்தது. (‘மனசார வாழ்த்துங்கள் படத்தில் ஸ்டண்ட் காட்சி – விபத்தில் சிக்கியவர் இன்னும் பூரண குணமடையாமல் இருப்பது நெஞ்சை உருக்கும் வேதனை)

அதே படத்தின் சாயலில், சாயல் தான், ஆனால் பயணத்திருக்கும் மார்க்கம் வேறு.

காசு கொடுத்து அரங்குக்குள் உட்காரும் ஒவ்வொரு ரசிகனையும் (சாமான்யன்) ‘உள்ளதைச் சொல்லி இருக்காங்கடா, உண்மையை ஒடைச்சிருக்காங்கடா…’! என்று உணர வைத்து பக்கத்து சீட்டுக்காரனிடம் பகிர்ந்து கொள்ள வைத்திருக்கிருக்கிறார்களே அது வெற்றியா இல்லையா? (இதைத் தானே மூவர் கூட்டணி எதிர்பார்த்திருந்தது?!)

இன்னார்… இன்னார்… என்று யாரையும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டாமலே, கதை நகர்த்தப்படும் விதத்தில், சொல்லப்படும் வசனத்தாலேயே அது இன்னார்… இன்னார்… என்று புரிய வைத்திருக்கிறாரே, இயக்குனர் ஐயப்பன், அது தான் அவரின் சாமர்த்தியம்.

ஒரு கட்சியில் சேர்ந்து அந்தத் தலைவர் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து, வாழ்க்கையை இழந்த தொண்டன், அதே கட்சித் தலைவர் மூலம் தனக்கு பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும், அதற்கான இழப்பீட்டைக் கேட்பதும் தான் ‘கட்சிக்காரன்’ கதை.

விஜித் – நாயகன், விசுவாசத் தொண்டன். ஸ்வேதா பாரதி மனைவி (குடும்பப் பாங்கு).

சிவசேனாதிபதி அரசியல் கட்சித் தலைவர். அப்புக்குட்டி (தேசீய விருது பெற்றவர்: அழகர் சாமி குதிரையின் நாயகன்) கட்சித் தலைவரின் உதவியாளர்.

இவர்களோடு ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் என அதிகம் பரிச்சயப்படாத முகங்கள்.

மதன் குமார், ரோஷன் ஜோசப்,சி.எம். மகேந்திரா இசை. பின்னணி இசை, ஓக்கே!

வீடு மனைவி மக்கள் என்று பாராமல் கட்சி … கட்சி … என்று காலம் முழுக்க உழைத்து விட்டு அரசியல்வாதியின் நிஜமுகம் தெரியும்போது சலிப்படைந்து அரசியலில் இருந்து விலகி விடுவது பலப்பல தொண்டர்களின் சோகக்கதை நிஜம், நிழலானது, இங்கே.

கட்சித் தொண்டன் சரவணன், தனது அபிமானமிக்க தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைக்கிறான். போஸ்டர் ஒட்டுவது, கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது, கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடுட்டு கடைசியில் தன் லட்சியத்தில் வெல்வதாகக் கதை முடிகிறது.

கவுன்சிலர் கனவு சிதைந்து விட்டதே என்று எண்ணி ஏமாற்றப்பட்டவன் எடுக்கும் முடிவு என்ன? ‘சுயநல’ அரசியல் தலைவனை எதிர்கொள்கிறான் எப்படி? என்பது, இடைவேளகை்குப் பின் நகரும் கதையில் சூடுபிடிக்கும்.

கதாபாத்திரத்துடன் ஒட்டும் புதுமுகம் விஜித் சரவணன்: அப்பாவி முகம், வெள்ளந்தி குணம், விசுவாசத் தொண்டன் நிஜத்தில் எப்படியோ, அப்படியே நிழலில் விஜித்! செயற்கை முலாம் பூச்சு இல்லாத யதார்த்தம்.

ஸ்வேதா பாரதி களையான முகம். குறைசொல்ல முடியாத நடிப்பு. ஒளிரும் எதிர்காலம்.

சிவ சேனாதிபதி நடித்தாகவே தெரியவில்லையே?

விஜித் நண்பன் ஏ.ஆர்.தெனாலி மறக்க முடியாத மனிதர், பேச்சு, பேச்சு, பேச்சு, பேச வைக்கிறார். (எல்லோருமே படம் முழுக்க பேசிக் கொண்டே வருவது, ஓவர் டோஸ்)

தொண்டர்கள் மீதான அலட்சியத்தையும், மக்கள் விரோதப் போக்கையும், ஊழலையும் வசனங்களின் மூலம் தோலுரிக்கிறார் ஐயப்பன்.

‘கட்சிக்காரன்’: அழுத்தமான கதை;

நாட்டு நடப்பு அரசியல்

நிஜம், நிழலாகிறது திரையில்;

தோலுரிக்கிறார்கள் விஜித், ஐயப்பன்.


வீ. ராம்ஜி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *