சிறுகதை

சுயநலம் – ராஜா செல்லமுத்து

தங்கம் எப்போதும் தன் சுய முன்னேற்றத்திற்காக எதையும் செய்யக் கூடிய பெண்.

அது அத்தனையும் தங்கமாக இருக்கட்டும்; காலில் இருக்கும் வெள்ளிக் கொலுசாக இருக்கட்டும்; கடையில் வாங்கும் பொருட்களாகட்டும். வீட்டில் வைக்கும் பொருட்களாக இருக்கட்டும் எது வேண்டுமானாலும் தன் வீடு, தன் படுக்கை தன் குடும்பம் தன் சொத்து தன் சுகம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே இருப்பாள் தங்கம்.

அதனால் அவளின் நடவடிக்கை பிடிக்காத உறவினர்கள் தங்கத்தைப் பற்றி தவறாகப் பேசி – தங்கம் ஒரு சுயநல காரி என்று ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொள்வது உண்டு.

ஆனால் உண்மையில் அதுதான் செய்வாள் தங்கம். அவளுடைய சுயநலத்திற்காக எதையும் செய்யக் கூடிய பெண். அவள் வயிறு நிறைய உண்டு கொழுத்தாலும் அடுத்தவர்கள் உணவின்றி தவித்தாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாத உறவுக்காரி. அதனால் தான் அவளின் சுயநலம் கூட சுற்றுச் சூழல் உள்ளேயே சுற்றி கிடந்தது.

எத்தனை உறவுகள் இருந்தாலும் தங்கத்தின் உறவுகள் மட்டும் அவளை சரியாகப் புரிந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் தங்கம் எந்த உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போனாலும் அவள் தனியாக தெரிவாள் . கழுத்து நிறைய நகை அணிந்து கொள்வது பட்டுப் புடவை கட்டிக் கொள்வது ஆடம்பரமான காரில் வந்து இறங்குவது படாேபடமாக பேசுவது என்று அத்தனையும் செய்வாள்.

ஒரு காலத்தில் குடிக்க கஞ்சியும் குடியிருக்க வீடும் இல்லாதவர்கள் தான் தற்போது கடவுள் கொடுத்த கொடையால் கருணையால் ஏதோ வயிறு மட்டும் ஒரு வேளை கிடைத்தது.

ஆனால் அதை உயர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு அதைத் தன் தோளுக்கு மேலேயும் தலைக்கு மேலேயும் தூக்கி சுமந்து கொண்டு பெருமை தம்பட்டம் அடித்துக் கொண்டு பித்துக் கொண்டு கிடப்பாள் தங்கம்.

அதனால் அவள் எங்கு சென்றாலும் அவளைப் பார்த்து ஒரு கூட்டம் பயந்து ஓடும்.

ஏனென்றால் அவள் தன் சுய பெருமையை சுயதம்பட்டம் அடிப்பவள். தான் இருக்கும் இடத்தில் தன் தற்பெருமையைப் பதிய வைத்துவிடுவாள்.

என்கிட்ட 200 பவுன் நகை இருக்கு. கார் இருக்கு. வீடு இருக்கு. கையில பணம் இருக்கு. நான் யார்கிட்ட போகணும்? என்று பெருமை பீற்றிக் கொள்வதில் கில்லாடி.

அதனால் அவள் ஒரு தெருவில் ஆரம்பத்தில் வருகிறாள் என்றால் தெருவின் மூலையில் இருப்பவர்கள் நடுங்கி ஓடி விடுவார்கள்.

அப்படி ஒரு தற்பெருமை பிடித்தவர் தங்கம் .

ஆனால் அவளுக்கும் சில குறைகள் உண்டு, நிறையப் பெருமைகளும் உண்டு. தன் தேவைக்காக தன் வசதிக்காக தன்னுடைய செலவிற்காக தன்னுடைய நகைகளையோ தன்னுடைய பொருட்களையோ அடமானம் வைக்காமல் அடுத்தவர் வீட்டுப் பொருட்களை அடகு வைத்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு செலவு செய்யும் செயல் செய்பவள்.

அவள் கழுத்து நிறைய நகை போட்டு இருந்தாலும் அடுத்த ஒருவரின் நகை வாங்கி அடகு வைத்து அதில் பணம் பெற்றுக் கொண்டு தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வாள்.

நகையைக் கொடுத்தவர்கள் உதவி கேட்டாலும் பதில் சொல்லாமல் பணத்திமிரில் பதில் சொல்வாள். இதனால் சில பெண்கள் அவளிடம் கொடுத்த நகைகளை வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவள் கழுத்து நிறைய நகை போட்டு கால் கொலுசு போட்டு பட்டுப் புடவைக் கட்டி வீதி வழியே சென்றால் அவளைத் தவறாகப் பேசும் பெண்களும் உண்டு.

‘நம்மகிட்ட இருக்கிற அரைப்பவுன், ஒரு பவுன் தங்கத்த வாங்கி அடகு வச்சுட்டு அவ மட்டும் கழுத்திலும் ஒரு கால்லயும் போட்டுட்டு இருக்கா பாரு. அடுத்தவங்க வீட்டுப் பொருள் மேலே அப்படி என்ன ஒரு ஆசை? இது தப்பு’ என்று சொல்வார்கள்.

இது அவள் காதில் விழுந்தாலும் அதைச் சட்டை செய்ய மட்டாள் தங்கம். ஏனென்றால் அவள் சுயநலத்தின் உச்சிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

ஒரு நாள் தெரியும் போது தான் தங்கத்தின் தகுதி அவளுக்குப் புரிய வரும்.

இன்று கூட வீதியில் தன் கழுத்தில் நகையைப் போட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் தங்கம். ஆனால் தங்கத்திற்கு நகை அடகு கொடுத்தவள் அவள் கழுத்தில் இருந்த நகையைப் பார்த்து எச்சில் முழுங்கினாள்.

அதில் அவளின் கண்ணீரும் மறைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *