சிறுகதை

சுயநலம் – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சுரேஷ் பலசரக்குக் கடையில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது .பாலு மற்ற வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டே இருந்தான்.

குறுக்கே எதுவும் பேசவில்லை. அவனுக்கு முன்னால் இருந்த 5, 6 பெண்கள், ஆண்கள் தங்கள் பொருட்களை வாங்கும் வரை அவன் வாய் திறக்கவே இல்லை. அனுமார் வால் போல் நீண்ட பெயர் பட்டியலை பாலுக்கு முன்னால் இருந்தவர்கள் வாசித்துக் கொண்டே இருக்க,சோப்பு முதல் சீப்பு வரை அத்தியாவசியப் பொருள்களையும் சமையல் சாமான்களையும் பெயர் சொல்லச் சொல்ல எடுத்து போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

இது அத்தனையும் பார்த்துக் கொண்டு குறுக்கே பேசாமல் அவர்கள் வியாபாரம் முடியும் வரையில் நின்று கொண்டே இருந்தான் பாலு .

ஒரு வழியாக அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவர்களுக்கு சரக்கை போட்டு அனுப்பிய பிறகு தான் வாய் திறந்தான் பாலு.

ரொம்ப நேரம் நின்னுட்டீங்க வருத்தப்படுறோம் .இப்போ உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க என்று கடைக்காரன் பாலுவை பார்த்து சொன்னபோது

சன்னமாகச் சிரித்த பாலு,

சரி வியாபாரம் நடக்குது. குறுக்க பேசக்கூடாது .எனக்கு முன்னால வந்திருக்கவங்க பொருள் வாங்குனதுக்கு அப்புறம் பேசணும்; அதுதான் நாகரிகம். அதனாலதான் நான் அமைதியா இருந்தேன். இப்ப எனக்கு இரண்டு லக்ஸ் சாேப், ரெண்டு பவர் சோப், பிளேடு, அரிசி, எண்ணெய் என்று வேண்டிய பொருட்களை சொல்லிக் கொண்டிருந்தான் பாலு.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கேட்கும் பொருட்களை எடுத்து எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள் கடைக்காரர்கள்.

பாலுவுக்குப் பின்னால் வந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பாலுவுக்கு பொருட்களை போட்டுக் கொண்டிருக்கும் போது இடைமறித்து

எனக்கு சோம்பு தாங்க சீரகம் தாங்க பல்பொடி கொடுங்க என்று குறுக்கே பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதை முதலில் பொருட்படுத்தாத பாலு அமைதியாக இருந்தான். கடைக்காரர்கள் பாலு கேட்ககேட்க பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் மீண்டும் பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களுக்கான பொருட்களைக் கேட்க சட்டென்று கோபம் வந்து திரும்பிய பாலு.

‘‘ஏங்க ஒரு ஆளுக்கு பொருள்கள கொடுத்துட்டு இருக்காங்க .பாதி முக்கால்வாசி கொடுத்துட்டாங்க. அவங்களுக்கான பொருளை கொடுத்து முடிச்சு, அவங்களுக்கு பில் போட்டு அனுப்புனதுக்கப்புறம் நீங்க பேச வேண்டியதுதானே? இப்படி இருந்தா என்ன அர்த்தம்? எனக்கு முன்னாடி இருந்தவங்க பொருட்களை வாங்கிட்டு போனதுக்கு அப்புறம் தான் நான் பேசினேன் .அந்த நாகரீகம் எனக்கு இருந்தது. ஏன் உங்களுக்கு அப்படி இருக்க மாட்டேங்குது? யாரு எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை. நான் நல்லா இருக்கணும். எனக்கான விஷயம் எனக்கு வந்து சேரனும்; அப்படித்தானே? எல்லாம் சுயநலம் ; கொஞ்சம் பொறுங்க . எனக்கு பொருள்களை கொடுத்து பில்லு போட்டதுக்கு அப்புறமா நீங்க ஒவ்வொருத்தரா வாங்குங்க’’

என்று இயல்பை விட கொஞ்சம் சத்தமாக பேசினான் பாலு .

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த வாடிக்கையாளர்கள் வாய் பொத்தி நின்றார்கள்.

கடைக்குள் இருந்த ஒரு ஊழியர் சிரித்துக்கொண்டே சொன்னான்

சார் கரெக்டா சொன்னீங்க. இங்க எல்லாமே இப்படி தான் சார். பாதி பொருள் போட்டு இருப்போம். திடீர்னு வந்தவங்க எனக்கு அது குடுங்க; இது குடுங்கன்னு கேப்பாங்க சிரிப்பாங்க. எனக்கு வேலை இருக்கு. சீக்கிரம் போகணும்னு சொல்லுவாங்க. அப்ப முன்னாடி நிக்கிறவங்களுக்கு எல்லாம் வேலை இல்லாம தான் இருக்காங்களா. இல்ல அப்படி வேலை இருக்குன்னு தெரிஞ்ச ஆளுக கொஞ்சம் சீக்கிரமே வந்து பொருள்களை வாங்கிட்டு போகலாமே? இது என்ன நாகரீகம்னு தெரியல சார்? நீங்க போட்ட போடுல அவங்க ரெண்டு பேரும் அமைதியா நிக்கிறாங்க பாருங்க. இதுதான் சார் வேணும். ஒவ்வொரு மனுஷனும் ஒரு வேலை செஞ்சுகிட்டு இருக்கும்போது அவங்கள தொந்தரவு பண்ணக்கூடாது. ஒரு விஷயம் நடந்துகிட்டு இருக்கும்போது குறுக்க பேசக் கூடாது; அப்படிங்கிற நாகரிகம் தெரிஞ்சாலே இங்க பல பிரச்சினைகள் முடிவு கிடைக்கும் சார் . இங்க அப்படி இல்ல. எல்லாம் சுயநலம் . அவங்களுக்கு தான் எல்லாமே முதல்ல கிடைக்கணும். மத்தவங்க சும்மா இருக்கணுமின்னு நினைக்கிறாங்க. நீங்க வச்ச சூடு இவங்களுக்கு என்னைக்கும் ஆறாவது சார்

என்ற போது முந்தி கேட்ட சில வாடிக்கையாளர்கள் அமைதியாக நின்றார்கள்.

பாலு தனக்கான பொருளை வாங்கிக் கொண்டு திரும்பும் போது பொருட்களை முந்திக் கேட்ட ஆட்களை பார்த்தான்.

பொறுமை மிக அவசியம். நமக்கு முன்னாடி இருக்கிறவங்க வழிவிட்டதுக்கு அப்புறம் தான் நீங்க போகணும். அடுத்தவன் முதுகு மேல ஏறிப் போய் உங்க விஷயத்தை சாதிக்க கூடாது. நான் சொன்னத தப்பா நினைச்சுக்காதீங்க . இது இந்த கடைக்கு மட்டும் இல்ல. இத உங்க வாழ்க்கையிலயும் கடைபிடிங்க. உயர்ந்த இடத்துக்கு நீங்க வருவீங்க. நன்றி என்று சொல்லிவிட்டு பாலு அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த வாடிக்கையாளர்கள் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *