சிறுகதை

சும்மா | ராஜா செல்லமுத்து

தனசேகர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தான் குமரன். அவன் தனசேகருக்கு தூரத்து உறவு. தனசேகரிடம் சொல்லாமலே அவன் வீட்டிற்கு வந்தான் .

தனசேகரின் மனைவி லதா குமரன் வந்ததும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

வாங்க எப்ப வந்தீங்க? என்று கேட்கும் பாணியே நாக்கிலும் நெஞ்சிலும் ஈரம் இல்லாமல் இருந்தது.

அத்த இப்பத்தான் வந்தேன். எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? குழந்தைக எல்லாம் எப்படி இருக்காங்களா? என்று நலம் விசாரித்தான் குமரன் .

எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க. ஒன்னும் குறைச்சல் இல்லை என்று சொன்னான் குமரன்.

தனசேகர் அவன் பேச்சிலும் சுரம் இல்லாமல் இருந்தது. எப்படியும் குமரன் நம் வீட்டில் ஒரு மாத காலங்கள் தங்கி விடுவான் என்று தனசேகர் லதாவும் கண் ஜாடையிலேயே பேசிக்கொண்டார்கள்.

இது தெரியாத குமரன் தன் பெட்டி படுக்கைகளை எல்லாம் வீட்டுக்குள்ளே வைத்துவிட்டு குளித்து முடித்து சாப்பிட கிளம்பினான்.

அத்த என்ன சாப்பாடு வச்சிருக்கீங்க.. ?பசிக்குது போடுங்க என்று ரொம்பவே தைரியமாக கேட்டுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் குமரன்.

இங்கேயே ரெண்டு மூணு குழந்தைங்க இருக்காங்க. இதுல இவன் வேற வந்து இருக்கிறான் எல்லாம் நீங்க கொடுக்கிற இளக்காரம் , இல்லன்னா உங்க சொந்தக்காரன் எப்படி வீட்டுக்கு வருவான் என்று மனைவி சொன்னாள்.

நான் என்ன அவன வான்னு வெத்தலை பாக்கு வெச்சு அழைத்தேன். அவன் வந்து ட்டான்..நான் என்ன பண்ண முடியும்? என்று தனசேகர் சொன்னான்.

என்னோட சொந்தம் மட்டும் வந்தா நீங்க சண்டை போடுறீங்க. உங்க சொந்தக்காரங்க வந்தா நீங்க எதுவும் பேசுறதில்ல . எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டவா, நான் இருக்கேன் என்று லதா பேசினாள்.

ஏன் ? உங்க வீட்டு சொந்தக்காரங்க வந்தா நீ ஆக்கி போடுறது இல்லையா? உங்க வீட்டு ஆளுங்க வந்தா மட்டும், நீ நல்லா பாக்குற. ஆனா எங்க வீட்டு ஆளுக வந்தா நீ பாக்குறது இல்ல என்று தனசேகர் சொல்ல இருவருக்குள்ளும் சண்டை மூண்டது.

ஒருவர் மாற்றி ஒருவர் பேசப்பேச சண்டை முற்றியது . தான் வந்த நேரம் சரி இல்லை போல அதுதான் கணவன்-மனைவி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து வருத்தப்பட்டான் குமரன்.

மாமா ஏன் இப்படி சண்டை போடுறீங்க? நீங்க போடுற சத்தம் வீட்டுக்கு வெளியே கேக்குது. கொஞ்சம் அமைதியா பேசுங்க என்று சொன்னான் குமரன்.

லதா கேட்பதாக இல்லை. ரொம்பவே சத்தமாகப் பேசினாள்.

அத்த ஏன் இப்படி கத்துறீங்க? சண்டை போடாதீங்க? அக்கம்பக்கம் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க என்று இருவரையும் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தான் குமரன்.

அவர்கள் இருவரும் சண்டையை விடுவதாக தெரியவில்லை.

முன்னால் இருந்ததைவிட இப்பொழுது அவர்கள் சத்தம் ரொம்பவே அதிகமானது. நான் வந்த நேரம் சரியில்லை போல: நான் வீட்டுக்கு கிளம்பறேன் என்று தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் குமரன்.

தனசேகர் , லதா இதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.

குமரன் வெளியே போனது தெரிந்ததும் லதாவிடம் வந்த தனசேகர்.

தப்பா நினைச்சுக்காதே? உன் கிட்ட சண்டை போடுவது மாதிரி நான் சும்மாதான் சத்தம் போட்டேன். கோவிச்சுக்காதே என்று தனசேகர் சொன்னான்.

நீங்களும் என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க. நானும் உங்க கூட சண்டை போடுறது மாதிரி, சும்மா தான் சத்தம் போட்டேன். இப்படி நாம ரெண்டு பேரும் சண்டை போடுறது தெரிஞ்சு அதனாலதான் அந்த குமரன், நம்ம வீட்டை விட்டு ஓடிட்டான். இல்லன்னா ஒரு மாசத்துக்கு நம்ம வீட்டுல டெண்டு போட்டிருப்பான். நம்ம போட்ட சண்டை சும்மாதான் என்று இருவரும் சிரித்தபோது பெட்டியுடன் வெளியே போன குமரன் ,

நான் வீட்டுக்கு போகல. நானும் சும்மாதான் வெளியே போனேன் என்று சொல்ல

தனசேகரும் லதாகவும் தங்கள் கண்கள் வெளியே விழுந்து விடும் அளவிற்கு விழித்து நின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *