செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, திருத்தப்பட்ட ‘நீட்’ தரவரிசை வெளியீடு

Makkal Kural Official

720-க்கு 720 மார்க் எடுத்து 17 மாணவர்கள் முதலிடம்

* முழு மதிப்பெண்கள் எடுத்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜனீஷ் ஒருவர்

* முதல் 100 பேர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு இடம்

சென்னை, ஜூலை 27-–

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, திருத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழக மாணவர்கள் 17 பேர் 720-க்கு 720 முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு தேசிய அளவில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவில் குளறுபடி ஆகியவை இருந்தது. பலருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனவே இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து, குறிப்பிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.

மேலும் டெல்லி ஐ.ஐ.டி. குழு, இயற்பியல் வினாவுக்கு எந்த பதில் சரியானது என்று தெரிவித்ததன் அடிப்படையிலும், ஏற்கனவே கருணை மதிப்பெண் பெற்று ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையிலும் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இறுதி மதிப்பெண்ணுடன் புதிய தகுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், தேசிய தேர்வு முகமை நேற்று திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலை வெளியிட்டது. தேர்வை எழுதிய தேர்வர்கள் அனைவரும் அந்த மதிப்பெண்ணை https://neet.ntaonline.in/frontend/web/revised-scorecard/index என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 பேரில், 89 ஆயிரத்து 198 பேர் தகுதி பெற்றுள்ளனர். கடந்த 4-ம் தேதி வெளியான முடிவில், அது 89 ஆயிரத்து 426 ஆக இருந்தது. 228 பேர் தகுதிப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல், மராட்டிய மாநிலத்தில் 164 பேர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், விமர்சனத்துக்குள்ளான முழு மதிப்பெண் பட்டியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதன்படி, தகுதி மதிப்பெண் பட்டியலில் முதல் 100 இடங்களில் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியாகியிருந்த முடிவில், 67 பேர் முழு மதிப்பெண் (720-க்கு 720 மதிப்பெண்) பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது 17 பேர் முழு மதிப்பெண் எடுத்து முதலிடத்தை பெற்றுள்ளனர் என்று மாறியிருக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த பி.ராஜனீஷ் 12-வது இடத்தில் உள்ளார்.

கடந்த பட்டியலில் முதல் 100 பேரில் முதல் இடத்தில் இருந்த வேத் சுனில்குமார் ஷிண்டே 25-வது இடத்துக்கும், 2-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த சையது ஆரிப் யூசுப் 26-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார். 3-வது இடத்தில் இருந்த மிரிதுல் மான்யா ஆனந்த், தற்போது முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

முதல் 100 மாணவர்களில்…

இதுபோல், கடந்த மாதம் 4-ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள், கருணை மதிப்பெண் மாற்றம், இயற்பியல் வினாவுக்கு டெல்லி ஐ ஐ டி வழங்கிய சரியான பதிலால் மாறிய மதிப்பெண் ஆகியவற்றால் தற்போது வெளியாகியுள்ள புதுப்பட்டியலில் முன்னும், பின்னுமாக மாணவ-மாணவிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் முதல் 100 பேர் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:- பி.ராஜனீஷ் (12-வது இடம்), சையது ஆரீப்வின் யூசுப் (26-வது இடம்), சைலஜா (38-வது இடம்), ஆதித்யா குமார் பண்டா (41-வது இடம்), ஸ்ரீராம் (42-வது இடம்), சையது அமீத் (51-வது இடம்), ஜெயந்தி பூர்வஜா (66-வது இடம்), ரோகித் (72-வது இடம்), சபரீசன் (74-வது இடம்), ரோஷினி சுப்பிரமணியன் (100-வது இடம்).

கடந்த முறை வெளியான பட்டியலில் 8 பேர் தான் இடம் பெற்றிருந்தனர். தற்போது முதல் 100 பேர் பட்டியலுக்குள் மேலும் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், கடந்த தேர்வு முடிவில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேரும் முழு மதிப்பெண் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் புதிய மதிப்பெண் பட்டியலில் ராஜனீஷ் என்ற மாணவர் மட்டுமே முழு மதிப்பெண்ணை எடுத்திருக்கிறார்.

தற்போது தகுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *