டெல்லி, மே 27–
உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ள உச்சநீதிமன்ற கொலீஜியம், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவாஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் முதல் கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், உயர் நீதிமன்றத்திற்கு 5 புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதேபோன்று உயர் நீதிமன்றங்களுக்கு 4 தலைமை நீதிபதிகள் உட்பட 22 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு புதிய நீதிபதி
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம். எம்.ஸ்ரீவாஸ்தவா சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடம் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 25 உயர் நீதிமன்றங்களில் 1,122 நீதிபதிகள் பதவிகள் உள்ளன. இதில் 354 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.