சென்னை, ஜூலை 6–
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை எதிரொலியாக ‘நீட்’ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக (லீக்) குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த மாதம் ‘நீட்’ தேர்வு முடிவு வெளியானது. பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தர வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளனர்.சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை நாளை மறுநாள் (8ந் தேதி) உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘நீட்’ இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வின் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதை விமர்சித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர்களின் கைகளில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.