புதுடெல்லி, அக்.11–
சுப்ரீம் கோர்ட் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி லலித் பரிந்துரை செய்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பணியாற்றி வருகிறார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 65 வயது வரை பதவி வகிக்கலாம். தற்போது, தலைமை நீதிபதியாக பதவி வகித்து யு.யு.லலித் அடுத்த மாதம் 8-ந்தேதி பணி நிறைவு செய்கிறார்.
இதனிடையே அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருந்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான கடிதத்தை இன்று காலை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு யு.யு. லலிதா அனுப்பினார்.
ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு சிபாரிசு செய்வது வழக்கம். அந்த அடிப்படையில், யு.யு.லலித்திற்கு அடுத்து மிக மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அவர் நவம்பர் 9ந்தேதி, நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு நவம்பர் 9ந் தேதிவரை டி.ஒய்.சந்திரசூட் அப்பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.