புதுடெல்லி, அக் 25
சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.
இதைத்தொடர்ந்து மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவை சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்து உள்ளார். இந்த தகவலை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று வெளியிட்டார்.
அதன்படி நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நவம்பர் 11-ந்தேதி பதவியேற்கிறார். அவர் அடுத்த ஆண்டு (2025) மே 13-ந்தேதி வரை இந்த பதவியில் இருப்பார்.
டெல்லி ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சஞ்சீவ் கன்னா, 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியானார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேர்தல் பத்திர திட்டம் ரத்து உள்ளிட்ட முக்கியமான தீர்ப்பு வழங்கிய அமர்வுகளில் இவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.