செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக விண்வெளி பயணம்

வாஷிங்டன், ஜூன்.6-

இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ். 58 வயதான சுனிதா ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் 3-வது முறையாக நேற்று விண்வெளிக்குச் சென்றார். பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’-ன் ‘ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பறந்தார். அவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் சென்றார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போயிங் நிறுவனத்தின் ‘ஸ்டார்லைனர்’ விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று (புதன்கிழமை) இரவு 8.22 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

‘அட்லஸ் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்திய நேரப்படி இன்று (ஜூன் 6) இரவு 9.45 மணி அளவில் அடையும் என நாசா தெரிவித்துள்ளது. சுமார் ஒரு வார காலம் அவர்கள் இவரும் இந்த விண்கலனின் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

இந்த புதிய விண்கலத்தில் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை சுனிதா படைத்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த தீபக், சுலோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கப்பல் படை விமானியான இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல்முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டில் 2-ம் முறையாக விண்ணை தொட்டார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். 7 முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *