செய்திகள்

சுனாமியிலிருந்து 1000 கிலோ வாட் மின்சாரம்: ஜப்பான் புதிய சாதனை

டோக்கியோ, பிப். 01–

சுனாமியிலிருந்து 1000 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் முறையை செயல்படுத்தி, ஜப்பான் புதிய சாதனை படைத்துள்ளது.

சுனாமி எனும் ஆழிப் பேரலைகள் மிகவும் ஆபத்தானவை. அது உருவாகிய இடத்திலிருந்து 1,000 கி.மீ. வரை உள்ள பகுதிகளில் கூட அழிவை ஏற்படுத்த வல்லவை. இத்தகைய மோசமான சுனாமி, பத்தாண்டுகளுக்கு இருமுறை வருகின்றன. ஆபத்து குறைந்த சுனாமிகள் ஓராண்டிற்கு இருமுறை ஏற்படுகின்றன. உலகில் ஏற்படும் சுனாமிகளுள் 20 சதவீதம் ஜப்பானை ஒட்டியே ஏற்படுகின்றன.

இதனால், தங்கள் நாட்டைக் காக்க பல்வேறு அறிவியல் முறைகளை ஜப்பானியர்கள் பின்பற்றி வருகின்றனர். ஜப்பானின் முக்கியமான துறைமுகங்களில், சுனாமியின் பாதிப்பைக் குறைக்கவல்ல தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன.

துறைமுகங்களில் சுவர்கள்

சுனாமி ஏற்படும்போது மேல் உயர்ந்து அலைகளைத் தடுக்கும் இந்தச் சுவர்கள், சுனாமி நீங்கியதும் உடனே கீழிறங்க வேண்டும். கீழிறக்க மின்சாரம் வேண்டும். ஆனால், சுனாமி பாதித்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும். இத்தகைய சூழலைச் சமாளிக்க, டோக்கியோ தொழில்நுட்பக் கழகம் (Self-powered movable seawall system-SMS) என்ற ஒரு யுக்தியைக் கையாண்டுள்ளது. அதன்படி வழக்கமாக சுனாமியைத் தடுக்கும் சுவர்களுக்கு அருகே ஒரு அடி உயர சிறிய சுவர் ஒன்றைப் பொருத்தினர்.

இதில் ‘டர்பைன்கள்’ இணைக்கப்பட்டன. சுனாமி அலைகள் இதில் மோதியவுடன் ‘டர்பைன்’களின் இறக்கைகள் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தடுப்புச் சுவர்களை இயக்கப் பயன்படும். சராசரியாக இந்த ‘டர்பைன்’களில் இருந்து 1,000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *