சிறுகதை

சுத்தம் சுகம் தரும் – எம்.பாலகிருஷ்ணன்

அன்று காலை பத்து மணிக்கு,

அந்த ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரே கூட்டம். அதுவும் பெண்கள் கூட்டம். அங்கு குடியிருக்கும் பத்து பதினைந்து பெண்கள் கூடி பஞ்சாயத்து போர்டு பிரசிடென்டை பார்க்க வந்திருந்தனர்.

வந்திருத்த அத்தனை பெண்களின் முகங்கள் இறுக்கமாகவும் கோபமாகவும் காணப்பட்டன. என்ன தான் பிரச்சினை? அந்த ஊர் பஞ்சாயத்து போர்டில் வேலை பார்க்கும் மேஸ்திரி முனியாண்டி மீது புகார் செய்ய வந்திருக்கிறார்களாம்.

மேஸ்திரி மீது பஞ்சாயத்தா? அவர் என்ன தவறு செய்தார்? அவர் மீது பெண்கள் ஏன் புகார் செய்ய வந்திருக்கிறார்கள்? என்ன தான் என்று பார்ப்போமே!

ஊர் பிரசிடென்ட் அலுவலகத்தில் வருவதற்கும் புகார் அளிக்கவந்த பெண்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மேஸ்திரி முனியாண்டியும் வந்து சேர்ந்தார். அவருடைய சைக்கிளை அலுவலக ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தில் நின்றுகொண்டார்.

ஒரு பெண் தன்முகத்தை சேலையால் துடைத்துக்கொண்டு, அய்யா, பிரசிடென்ட் அய்யா! நம்ம ஊர் பஞ்சாயத்துல வேலை பார்க்குற மேஸ்திரி தினமும் தெருவுக்கு வந்து எங்களை தொந்தரவு செய்யறாரு. இதைக் கேட்ட பஞ்சாயத்து பிரசிடென்ட் அதிர்ச்சியடைந்தார்.

என்ன? மேஸ்திரி தொந்தரவு செய்கிறாரா? அப்படி என்ன தொந்தரவு எனக் கேட்கலானார்.

இன்னொரு பெண் அய்யா, வீடுகள்ல குப்பை வண்டி வரும் போது குப்பைகள் தினமும் பிரிச்சிக் கொடுக்கச் சொல்றாரு. இல்லையின்னா அபராதம் போடுவேன்னு மிரட்டுறாருங்கய்யா!

தேவையில்லாம குப்பைகளை பிரிச்சுக் கொடுக்கச் சொல்றாரு, இது எங்க வேலையா?, ஏன் குப்பை வாங்க வர்றவங்க பிரிச்சிப் போட வேண்டியது தானே? பல வேலையில நாங்க இருப்போம், எங்களப் போயி குப்பையை பிரிக்கச் சொன்னா எப்படி?” காட்டமாக பேசினார் ஒரு பெண்.

இன்னொரு வயதான அம்மா, அய்யா மாடுகள வளக்குறவங்க. வெளியே மாட கட்டி பால் கறக்கக் கூடாதாம், அப்படி பால் கறந்தா அதுக்கும் அபராதம் போடுவேன்னு சொல்றாரு.

குப்பைத் தொட்டியில குப்பையைப் போடாமல் தப்பி தவறி கீழே போட்டா அதுக்கும் அபராதம் போடுவேன்னு மிரட்டுறாரு, ரோட்டுல தண்ணிய ஊத்தினாலும் சத்தம் போடுறாரு. வீட்ல தண்ணிய சுத்தமா வக்க சொல்றாரு. அப்படியில்லையின்னா கடுமையா கோபப்படுறாரு. நம்ம வீட்ல தண்ணிய சுத்தமா வக்கச் சொல்றதுக்கு இவரு யாரு? சின்னப்பிள்ளைக வெளியே கக்கூஸ் போனா கத்துறாரு.

இப்படி ஒவ்வொரு விசயத்திலயும் எங்களைப் பாடாய் படுத்துறாரு. மேஸ்திரி வேலைக்கு வந்தோமா, குப்பையைக் காலி பண்ணி தெருவ சுத்தப்படுத்தி-னோமானு இல்லாம, தினமும் எங்ககிட்டயே மோதுறாருங்கய்யா, நீங்க தான் இந்த மேஸ்திரி மேல நடவடிக்கை எடுக்கனுங்கய்யா”.

ஒட்டுமொத்த பெண்களும் மேஸ்திரி முனியாண்டிக்கு எதிராக குரல் எழுப்பினர். இதையெல்லாம் கேட்ட பஞ்சாயத்து போாடு பிரசிடென்ட், மேஸ்திரியை பார்த்து, என்னய்யா மேஸ்திரி? எல்லாரும் உன்ன பத்தி ஏகப்பட்ட புகார் சொல்றாங்க, இதுக்கு என்ன சொல்ல போறே? எனக் கேட்க

கூட்டத்தினுள் இருந்த மேஸ்திரி, பிரசிடென்ட் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, அய்யா, இவ்வளவு நேரம் இவங்க பேசுனாங்க, நான் பேசலாமுங்கலா அய்யா …,

பேசுப்பா… என்றார்.

சரிங்கய்யா நான் பேசுறேன். கொஞ்சநேரம் அவங்கள அமைதியா இருக்கச் சொல்லுங்க அய்யா. நான் இந்த மேஸ்திரி வேலைக்கு வந்து இருபது வருஷங்களுக்கு மேலாகுதுங்கய்யா. நானும் எல்லா ஊர்லயும் வேலை பார்த்து வந்திட்டேன். இப்ப விஷயத்துக்கு வர்றேன்.

முன்னாடியெல்லாம் குப்பையைப் பிரிச்சி போடச் சொல்ல மாட்டாங்க. குப்பையை வாங்கி குப்பையைத் தொட்டியில போடுவோம். இப்ப மாறி போச்சு. திடக்கழிவு மேலாண்மை திட்டம், தூய்மை இந்தியா திட்டம் வந்ததுனால சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கச் சொல்றாங்க. அய்யாவுக்கே இது தெரிஞ்ச விஷயம்.

எந்தப்பொருளும் வீணாக்கக்கூடாதுன்னு நம்ம நிர்வாகம் முடிவெடுத்து நம்ம வீட்டில சேருகிற குப்பைகளும் வீணா போகக்கூடாதுன்னு குப்பையை பிரிச்சிப் போடச் சொல்றாங்க. இந்தக் குப்பையை பயனுள்ளதா ஆக்க மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு பிரிச்சு, காய்கறி, பழங்கள், இலைகள், மீதமான உணவுப் பொருட்கள் தனியா கொடுத்தாங்கன்னா அதை நம்ம விவசாய நிலங்களுக்கு உரமா தயார் பண்ணி, அதை மக்களுக்கே கொடுக்கச் சொல்றாங்க, அது மக்கும் குப்பைங்கய்யா. அப்புறம், மக்காத குப்பை இரும்பு சாமான்கள், விறகு, பிளாஸ்டிக் பொருட்கள், மின்சார பொருட்கள், பீங்கான் இப்படி வர்ற பொருளெல்லாம் மறுசுழற்சிக்கு பயன்படுத்தி, மறுபடியும் மக்களுக்கே பயன்படுத்துவதால் மக்காத குப்பைங்க நல்ல காரியங்களுக்காகத் தான் குப்பையை பிரிச்சுக் கொடுக்கச் சொல்றாங்க. இத சிரமம் பார்க்காம நம்ம மக்களைப் பிரிச்சு கொடுக்கச் சொன்னேங்க. நல்ல செயலுக்கு மக்கள எதிர்பார்க்குறாங்க நம்ம அரசாங்கம்.

இன்னொரு விசயங்கய்யா, இப்ப மழை சீசன்கிறதால வரும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்கு நான் கொஞ்சம் கடுமையா நடந்துட்டேன். நம்ம வீட்டு தண்ணில நமக்கே தெரியாம டெங்குப் புழுக்கள் உருவாகி, அப்புறம் அது டெங்கு கொசுவாய் மாறி நம்மல கடிச்சா, நம்ம உயிருக்கே உலை வச்சிடும். அதைத் தடுக்கத் தண்ணிய சுத்தமா வைங்க; தண்ணி தொட்டிய மூடி வைங்க; தேங்காய் சிரட்டை, டயர், உரல், பூ தொட்டி இவைகளில் தண்ணிய தேங்க விடாதீங்கன்னு சொன்னேன். இதனால நம்ம ஜனங்க என்னை தப்பா நினைச்சிட்டாங்கய்யா.

அதுபோல தான் நம்ம ஜனங்க குப்பையை தொட்டியில போடாம கீழே போடுறதும் கழிவு தண்ணியை சாலையில கீழே ஊத்துறதும் கண்ட கண்ட இடங்களில் மாடுகள கட்டி, சாணியை அப்படியே போட்டுட்டு போறதும் அதுல ஜனங்க வழுக்கி விழுறதும் இருக்குறதுனால நான் கடுமையா கண்டிப்பா நடந்துட்டேன். வீட்டை சுத்தி தண்ணியா நிக்கிறதுனால அதுல கொசுக்கள் உற்பத்தியாகி அது நம்ம ஜனங்கள கடிச்சா மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்ற காய்ச்சல் வந்தா சிரமப்படுவாங்கன்னு நினைச்சி அதைத் தடுக்கறதுக்கு கண்டிப்புடன் நடந்துட்டேன்.

ஆக மொத்தம் நம்ம தெரு சுகாதாரமா இருக்கனும்; நம்ம ஜனங்க ஆரோக்கியமாக இருக்கமுன்னு நினைச்சிதான் கொஞ்சம் கண்டிப்பா நடந்துட்டேன். ஆனா இவங்களுக்கு தப்பா தோனுடிச்சி; நம்ம ஜனங்க ஒத்துழைப்பு கொடுத்தாங்கன்னா இன்னும் ஊரை சுத்தமாக ஆக்கலாம். சுத்தம் தான் நமக்கு சொத்து. சொத்தில்லாம கூட இருந்திடலாம். ஆனா சுத்தமில்லாம வாழ முடியாது. சுகாதாரமா இருந்தா நோய் நொடியில்லாம இருக்கலாம். வீட்டை எப்படி சுத்தமா வச்சிருக்கோமா, வீதியையும் ஊரையும் சுத்தமா வச்சிக்கிறது. நம்ம கடமை. இந்த விசயத்துல எல்லோரும் ஒன்னு சேரனும். நான் தப்பா பேசினா என்னை மன்னிச்சுடுங்கம்மா என்று மேஸ்திரி முனியாண்டி உருக்கமாக ஊர்க்கார பெண்களிடம் கோரினார்.

புகார் செய்ய வந்த அத்தனை பெண்களும் அய்யா, ராசா, நீ தாய்யா எங்களை மன்னிக்கனும்; நாங்க கிராமத்து படிக்காத பொம்பளைங்க; எங்களுக்கு நாட்டு நிலவரம் தெரியாம போச்சு; உன்னப் போயி புகார் சொல்ல வந்துட்டோம்” என்றனர் கவலையுடன்.

எங்கோ இருந்து வந்து தெருவ சுத்தப்படுத்தப் பாக்குறே, ஆனா, நாங்க இங்கேயே பிறந்து வளர்ந்தவங்க; நாங்களும் உன்னோட ஒத்துழைப்பா இருப்போம்” என்று அந்த ஊர் பெண்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர்.

சுத்தமாக வைப்போம்; சுகாதாரமாக வாழ்வோம் என்று முழக்கமிட்டுவிட்டு ஊர் பஞ்சாயத்து போர்டு பிரசிடன்டிடமிருந்து விடைபெற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *