போஸ்டர் செய்தி

சுதந்திர தின விழாவையொட்டி கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்து

சென்னை, ஆக.16-

சுதந்திர தின விழாவையொட்டி கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்து விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை சுதந்திர தின விழா மற்றும் தேனீர் விருந்து விழா நடைபெற்றது. கவர்னர் பன்வாரிலால் புரோகித், சுதந்திர தின உரையாற்றினார்.

ஐகோர்ட் தலைமை நீதிபதி வி.கே.தஹிலா ரமானி, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், தியாகிகள் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

பரதநாட்டியம், காஷ்மீர் நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதனை அனைவரும் ரசித்து பார்த்தனர். முதல் அமைச்சராக அண்ணா இருந்த போது அவர் பேசிய சுதந்திர தின உரை மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர போராட்டம் குறித்து பேசிய உரை ஆகியவை அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கவர்னர் விருது வழங்கி பாராட்டினார். இந்த உரையை அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர்.

முன்னதாக கவர்னர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோஜா தோட்டத்தில் கவர்னர் உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நட்டனர்.

கவர்னர் மாளிகை தேனீர் விருந்துக்கு ஐகோர்ட் நீதிபதிகளுக்கு தனியாக இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொள்ள ஐகோர்ட் நீதிபதிகள் அனைவருக்கும் கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்திருந்த போதிலும் தலைமை நீதிபதியை தவிர்த்து ஐகோர்ட் நீதிபதிகள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. முன்வரிசையில் மட்டும் ஒரு சில ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் அமர்ந்து இருந்தனர்.

கடந்த 12–ந் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு மரபுப்படி இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளின் இருக்கைகளுக்கு பின்னால் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் குறை கூறப்பட்டது.

இதன்காரணமாகவே கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த சுதந்திர தின விழா மற்றும் தேனீர் விருந்து விழாவில் ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்கவில்லை என்று விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசிக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *