செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, ஆக. 14–

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்காக உரையாற்ற இருக்கிறார்.

கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார்.

சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதாவது, காஷ்மீர் விவகாரத்தின் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், கேளிக்கை பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை 100-க்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான சோதனைகளுக்கு பிறகே, வாகனங்கள் நகருக்குள் வரமுடியும் என்ற நிலை உள்ளது.

அதேபோல, சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளும், அவர்களது உடைமைகளும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்த பிறகே ரெயிலில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். சாதாரண உடையிலும் போலீசார் பயணிகளோடு பயணிகளாக நின்று ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளிலும் குதிரைகளில் ரோந்து சென்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் நேரடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *