சிறுகதை

சுதந்திரம் வீண்போகாது – எம்.பாலகிருஷ்ணன்

மாலையில் அந்த ஊராட்சி நடுநிலைப்பள்ளி முடிந்து மாணவ மாணவியர் வெளியே வந்தனர். வந்தவர்கள் சிலர் வழக்கம்போல் பள்ளி எதிரில் உள்ள சிறு கடைகளை நோக்கி வந்து அவரவர்கள் விரும்பியதை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் ஸ்டேசனரி கடைக்கும் மற்ற கடைகளுக்கும் பொருட்கள் வாங்கச் சென்று கொண்டிருந்தனர். அந்த பள்ளி எதிரில் சாலையோரத்தில் இரண்டு வியாபாரிகள் கடைகள் போட்டிருந்தனர். இருவர் வண்ண வண்ண படங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

ஒருவர் சினிமா நடிகர்கள் படங்களை வைத்தும் இன்னொரு பெரியவர் தேச தலைவர்கள் படங்களையும் விற்பனை செய்தும் கொண்டிருந்தனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கதாநாயகர்கள் படங்களை வாங்கிய வண்ணம் இருந்தனர். ஆனால் பெரியவர்கள் விற்ற தேசத் தலைவர்கள் படங்களை வாங்க எவரும் முன்வரவில்லை. அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தேசியத் தலைவர்கள் படங்களை பிள்ளைகள் வாங்க மாட்டுகிறார்களே என்று ஆதங்கப்பட்டார். அவர் கோபப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

அந்தப் பெரியவர் பெயர் காந்தி, அவருக்கு கிட்டத்தட்ட எழுபத்தைந்து வயதிற்கும் மேல் இருக்கும். அவர் ஒரு சீசன் வியாபாரம் செய்பவர்.காய்கறி வியாபாரம் உப்பு வியாபாரம் பழங்களையும் விற்பனை செய்பவர். அதோடு தான் பள்ளி எதிரில் தேசியத் தலைவர்கள் வண்ணப் படங்களையும் விற்பனை செய்பவர். அதில் தேசிய தலைவர்கள் நாட்டுக்கு பாடுபட்ட தலைவர்கள் படங்களை மட்டும் விற்பனை செய்யும் அவர் அவரின் பெயருக்கேற்றார் போல் தேசியப் பற்று கொண்டவர்

அதுவும் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அண்ணல் மகாத்மா காந்தியடிகள் மேல் அதீத பற்றுடையவர். அவரின் எளிமை அவரின் கொள்கைகள் தத்துவங்கள் பால் ஈர்க்கப்பட்டு மிகவும் மரியாதை கொண்டவர். அப்படிப்பட்டவர் விற்கும் தேசத்தலைவர் படங்கள் விற்பனையாகாமல் இருப்பது வேதனையாக இருந்தது. அவருக்கு இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தேச தலைவர்கள் படத்தை வாங்காமல் சினிமா நடிகர்களின் படங்களை வாங்குகிறார்களே? அவ்வளவுதான் அவர்களுக்கு நாட்டுப் பற்றா? இதற்கு என்ன காரணம்? ரத்ததைச் சிந்தி உயிரைப்பணையம் வைத்து வாங்கிக் கொடுத்த சுதந்திரப் போராட்டத் தலைவர்களை மறந்து விட்டார்களே என்று அவர்கள் மேல் கோபபட்டார்.

மாணவர்கள் அவரின் படங்கள் வாங்கவில்லை என்ற காரணத்துக்காக அவர் வருத்தப்படவில்லை. நாட்டுப்பற்று அவர்களுக்கு இல்லையே என்ற வருத்தம் தான் அவருக்கு இருந்தது. அந்தப் பெரியவர் பலதரப்பட்ட வியாபாரம் செய்பவர் என்பதால் இதைப் பற்றி வேதனைப்படவில்லை; வியாபாரம் நடக்கவில்லை ; காய்கறி வியாபாரம் பார்ப்பதால் வியாபாரத்தை பற்றி எள்ளளவு கூட அவர் நினைக்கவில்லை. ஆனால் பெரியவர் காந்தி பக்கத்தில் வண்ணப் படங்களை விற்பனை செய்பவன் ஒருவன் சினிமா ஹீரோ படங்கள் மற்றும் சாமி படங்கள் பூக்கள் நதிகள் போன்ற இயற்கை படங்களை வியாபாரம் செய்பவன். தேசியத் தலைவர் படங்கள் மட்டும் விற்பனை செய்ய மாட்டான். அவை அவ்வளவாக விற்பனை ஆகாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.

மறுநாள் மாலையில்

பள்ளி முடிந்து வெளிய வந்த மாணவ மாணவியர்கள் வழக்கம் போல் பெரியவர் காந்தி விற்கும் தேசியத் தலைவர்கள் படங்களை வாங்காமல் பக்கத்தில் விற்பனை செய்பவரிடம் திரைப்பட காதாநாயகர்கள் படங்களை ஆர்வத்துடன் வாங்கி கொண்டிருந்தனர். கூட்டம் அவனுடைய கடையில் தான் கூடியிருந்தது. வெறித்து பார்த்த பெரியவர் காந்தியைப் பார்த்து அவன் நக்கலாக சிரித்தான்.

கூட்டம் கலைந்தது. உடனே பெரியவர் காந்தி ஏப்பா நீயாவது படிக்கிற பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லக்கூடாதா? நீ என்னை போல் தலைவர்கள் படத்தை விற்காமல் சினிமா படங்களை விக்கிறதுனால தானே கூட்டம் உன்னோட கடைக்கு வருது? என்று கேட்டதற்கு அவன்,

அண்ணே! நம்ம பொழைப்புக்காக வியாபரம் செய்ய வந்திருக்கோம். நீங்களும் என்னை மாதிரி நடிகர்கள் படங்கள் வாங்கிப் போடுங்க. வியாபாரமும் நடக்கும் நம்மளும் நாலு காசு பார்க்கலாம் இப்படி தலைவர்கள் படங்கள் மட்டும் வச்சா ஓடாது; காலத்துக்கு தகுந்த மாதிரி நாம்மளும் மாறிவிடணும் என்று சாதாரணமாக சொல்லவும்

பெரியவர் காந்திக்கு சுள் என்று கோபம் வந்தது.

‘‘ஏம்பா காசுக்காக நாம எதை வேணும்னாலும் விற்கலாமா? நம்ம நாட்டுக்காக உழைத்தவங்க படத்தை வச்சு வித்தா என்ன தப்பு இருக்கு? ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கித் தந்தவங்களை மறக்கலாமா? படிக்கிற சிறுசுகளுக்கு நம்ம தான் எடுத்து சொல்லி புரிய வைக்கணும். அதுதான் நாம தேசத் தலைவருக்கு செய்யக்கூடிய தொண்டு. இன்னைக்கு பிள்ளைகள் தேச தலைவர்கள் படத்தை வாங்கவில்லை என்றால் தலைவர்கள் உழைத்த உழைப்பு வீணாப் போகுமா? அவங்க நமக்கு வாங்கி தந்த சுதந்திரம் இல்லை என்று போகுமா? அதுக்காக நான் நன்றிக் கடனாக நாம்மளும் அவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்..

அவங்க சுதந்திரம் வாங்கித் தந்ததுனால தான் நாம இங்கே பள்ளிக்கூட எதிரில் வியாபாரம் பண்ணுறோம். இல்லையென்றால் நாம இப்படி வியாபாரம் பண்ண முடியுமா? எனக்கு இந்த வியாபாரம் இல்லைன்னா இன்னொரு வியாபாரம் இருக்கு. நமக்காக பாடுபட்ட வர்களை எந்நாளும் மறக்க கூடாது. அப்பப்ப நாமும் நினைச்சு பாக்கணும். தேசத்தலைவர்கள் நினைவு நாள் சுதந்திர நாள் வர்றப்ப நாம சந்தோசமா கொண்டாடணும்; அதோட அவங்களைப்போல சமூக சேவை பண்ணனும்; மரக்கன்றுகள் நடணும் ; சின்ன உதவிகள் செய்யணும்; அதுதான் நாம செய்கிற மரியாதை என்று உருக்கமாக பேசியதும் பின்புறத்தில் இருந்து கைத்தட்டல் சத்தம் பலமாக கேட்க திரும்பி பார்த்தார் பெரியவர் காந்தி. அங்கே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.

அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த பெரியவரை பார்த்து

ஐயா பெரியவரே இவ்வளவு நேரம் நீங்க பேசிய பேச்சு முழுசும் கேட்டேன் என்றபடி அவர் அருகில் வந்தார் தலைமை ஆசிரியர். அவர் அருகில் வந்ததும் பெரியவரும் சட்டென்று எழுந்து நின்றார். தலைமையாசிரியர் அவருடைய கரங்களைப் பிடித்து கை குலுக்கினார்

ஐயா நாட்டுக்காக உழைத்த தேச தலைவர்கள் பற்றி நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பிடித்திருந்தது. இவ்வளவு வயசிலையும் நீங்க தன்னம்பிக்கையோடு உழைக்கிறதும் தேச தலைவர்கள் பற்றி அவர்களை உயர்வா பேசினதும் அவங்கள மறக்காம இருக்கிறதும் ரொம்ப வியப்பா இருக்குது. அதுவும் இந்த சிறு வியாபாரம் செஞ்சுக்கிட்டு நாட்டுப்பற்றோடு இருக்கிறது பெரிய விசயம்.

சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அவங்கள நாம மறக்கக்கூடாது. அவங்க நினைவா சமூக சேவை செய்யணும் என்று சொன்னிங்களே ! யாருக்கு உங்க மனசு வரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்க கிட்ட உயர்ந்த மனசு இருக்கு. இதுக்கு என்னோட பாராட்டுக்கள்; வியாபாரம் நடக்கலைன்னாலும் கூட பெருசா நினைக்காம தேசத்தைப்பற்றி நாம தான் சொல்லிக் கொடுக்கனும் என்று சொன்னீர்களே. அங்கதாங்க நீங்க உயர்ந்து நிக்கிறீங்க என்று பெரியவர் காந்தியை பாராட்டி தங்களுடைய பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

பள்ளியின் உள்ளே சென்றதும் ஆசிரியர்கள் அத்தனை பேர்களை வரவழைத்து அவரை அறிமுகப்படுத்தி மனதார பாராட்டி கௌரவப்படுத்தினார். பெரியவருக்கு சந்தோசம் தாளாமல் தன்னையே மறந்தார். தலைமை ஆசிரியர் மாணவர்களையும் வரவழைத்தார். அவர்கள் முன்பு தேசத்தின் மீது தேச தலைவர்கள் மீதும் பற்று வைத்துள்ள இந்தப் பெரியவர் காந்திக்கு மரியாதை செய்வோம்; வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்; சொல்வோம். சாதாரண வியாபாரம் செய்கிற இந்தப் பெரியவருக்கு நாட்டுப்பற்று இருக்கும்போது படித்த நமக்கு நம்ம மாணவர்களுக்கும் ஏன் நாட்டுப்பற்று இருக்கக் கூடாது. நம்ம வர்ற சுதந்திர தினத்தன்று இவரை கௌரவப்படுத்தும் விதமாக நமது பள்ளியில் தேசியக் கொடியை இவரை வைத்து ஏற்ற சொல்வோம். அதுதான் இந்த பெரியவருக்கு நாம் செய்யும் பெருமை. எல்லா மாணவர்களையும் இவருடைய கொள்கையை பின்பற்ற சொல்வோம் என்று தலைமையாசிரியர் கூறியதும் எல்லோரும் ஆமோதித்து கைதட்டினார்கள் .

மறுநாள் பெரியவர் காந்தி விற்ற தேசத் தலைவர்கள் படங்களை வாங்க மாணவ மாணவிகள் முண்டி அடித்துக்கொண்டு வந்து வாங்கிச் சென்றனர். பெரியவர் காந்திக்கு அளவில்லாத மகிழ்ச்சி எற்பட்டது. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டார்.

தலைவர்கள் வாங்கி கொடுத்த சுதந்திரம் வீண்போக வில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *