அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை, டிச. 23-–
கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் 314 கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபையில் 2021-–2022-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது முதல் கட்டமாக 10 முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில், சென்னை வடபழனி முருகன் கோவில், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்பட 10 கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டம் பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, 2022–-2023-ம் ஆண்டுக்கான சட்டசபை மானிய கோரிக்கையில், ‘‘ஏற்கனவே 10 கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து இவ்வாண்டு மேலும் 5 கோவில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டம் கடந்த நவம்பர் 1-ந்தேதி அன்று சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி ஆணைமலை மாசாணியம்மன் கோவில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில்களில் தொடங்கி வைக்கப்பட்டு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் 15 கோவில்களில் சாதாரண நாட்களில் சுமார் 75 ஆயிரம் பக்தர்களுக்கும், சிறப்பு நாட்களில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் 314 கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.