சிறுகதை

சுகாதாரம் | ராஜா செல்லமுத்து

Spread the love

பேருந்துக்காக் காத்திருக்கும் அத்தனை பேருக்கும் எரிச்சலாகவே இருந்தது. மூக்கைப்பிடித்துக் கொண்டு நின்றிருந்தவர்களில் அனைவரும் பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பையைச் சபித்துக் கொண்டிருந்தனர்.

‘‘என்ன இது இவ்வளவு ஆளுக நின்னுட்டு இருக்கோம். இத்தன பஸ்கள் வந்து போகுது. கொஞ்சங் கூட நாகரீகமில்லாம இங்க குப்பைய கொட்டி வச்சிருக்கானுகளே..’’ என்று ஒருவர் சொல்ல’’

‘‘அது கூட பரவாயில்லீங்க.. இதுக்கு பக்கத்திலயே டிபன் கடை வச்சு நடத்துறான் பாருங்க. அவன் எவ்வளவு பெரிய ஆளா இருப்பானுக.

அதவிடுங்க.. இந்த வீச்சத்தக் கூட பொருட்படுத்தாம ‘‘லபக்கு.. லபக்கு..’’ன்னு அள்ளி தின்னுட்டு இருக்கானுக பாருங்க. அவனுக எவ்வளவு நல்லவனுகளா இருப்பானுக..’’ என்று மூக்கைப்பிடித்துக்கொண்டே சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.

‘‘வயித்துல இருக்கிற குடலப்பிடுங்கிட்டு வந்து வெளிய போட்டுரும்போல. இவ்வளவு நாத்தமெடுக்குதே இது தெரிஞ்சு தான் செய்றானுகளா இல்ல தெரியாம செய்றானுகளா..?

‘‘குப்பையக் கொட்டுறவன் கொட்டிட்டு அங்கிட்டு போயிறானுக. நம்ம மாதிரி ஆளுக தான் இங்க நின்னு பஸ்ஏறப்போறோம் . கூறுகெட்ட ஆளுகளா இருப்பானுக போல. நடுவீதி முன்னாடிகுப்பைய போட்டா நாத்தமெடுக்குமுன்னு தெரியுமா..? தெரியாதா..?’’ என்று ஒருவர் சொல்ல

‘‘இது வேணும்னே செய்ற வேலைங்க! மக்கள முட்டானாக்குற விசயம்! இப்படி நாத்தம் பிடிக்க வச்சமுன்னா அவனவன் திட்டுவானுகன்னு ஒரு நப்பாசை. ஒரு குரூரத்தனம். கெட்ட எண்ணம். கேவலமான புத்தி. இந்த மாதிரி சேடிஸ்டுகளும் இங்க இருக்கத்தான் செய்றானுக..’’ என்று ஒருவர் மூக்கைப்பிடித்துப் பேச அந்தப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நிற்கும் பேருந்துகள் கோஞ்சம் தள்ளியே நின்றன. இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் கூட ஹெல்மெட்டுக்கு மேலே வீச்சமெடுக்க அதற்குள் கைவிட்டு மூக்கைப்பிடித்துக்கொண்டு போயினர்.

என்னங்க எல்லாரும் இப்பிடி பேசிட்டு இருக்கீங்க!

‘‘ம்.. பேசுறதா! இந்த ஏரியாவுல ஆயிரத்தெட்டு கட்சிக்காரனுக இருக்கானுக. ஒருத்தனுக்காவது ‘‘சுர்’’ன்னு உறைக்குதான்னு பாரு. இவ்வளவு கெட்டது செய்றமே இது பொதுமக்களுக்கு ரொம்ப இடைஞ்சல்னு யோசிப்பானுகளா மாட்டானுகளா..?

‘‘யோசிப்பான்,சிந்திப்பான் அவனுகளுக்கு எல்லாமே தெரியும்ங்க. மனுசங்கள கதற வச்சுப்பாக்குற ஒரு அர்பப்பத்தனமான விசயம் தான் இது..’’ என்று சிலர் பேசிக்கொண்டிருக்கும் போது அந்தப்பிரதான சாலையில் விர்..விர்.. என விரைந்து கொண்டிருந்தன வாகனங்கள்.

அருகிலிருந்த டிபன் கடையில் படுஜோராக நடந்துகொண்டிருந்தது வியாபாரம்.

‘‘அங்க பாருங்க.. இந்த வீச்சம் நாத்தம் எதுவுமே இல்லாம அவனுக பேசாம எப்பிடி சாப்பிட்டுட்டு இருக்கானுகன்னு. இந்த நாத்தமும் அவங்களுக்கு ஒரு சைடிஸ் மாதிரி போல..’’ என்று பேசிக்கொண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி குடு குடுவென ஓடிப்போய் பேருந்தில் ஏறினர். அந்தப்பகுதி மழுவதும் குப்பையின் நாத்தம் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்தது. வந்து நின்றவர்கள் அங்கிருந்து கிளம்ப மீண்டும் அவங்கே ஆட்கள் வந்து சேர்ந்தார்கள் அப்படி நின்றவர்களில் ஒருவருக்குக் கூட முகத்தில் ஈயாடவில்லை மாறாக நாத்தம் நடமாடியது குவிந்து கிடக்கும் குப்பை மேட்டில் நின்று குரைத்துக் கொண்டிருந்தன நிறைய நாய்கள். மீண்டும் மீண்டும் வீச்சம் வந்து கொண்டிருந்ததேயொழிய கொஞ்சஞ்கூடக் குறையவே இல்லை

‘‘ஐயோ அம்மா.. என்ன இந்த வீச்சம்! வந்து நிற்பவர்களின் பேச்சு வீச்சத்தை விலாசித்தள்ளியது.

அங்கே வந்த ஒரு பெரியவர் ‘‘என்ன எல்லாரும் ஒரு மாதிரி மூக்கைப்பிடிச்சிட்டு என்னென்னவோ பேசிட்டு இருக்கீங்க..’’ என்றவரை ஒரு மாதிரியாகப் பார்த்த ஒருவர் உங்களுக்கு

‘‘எந்த வாசனையும் அடிக்கலையா..?’’ என்றவரிடம்

‘‘நாத்தம் தானே..ஆமா அதான் ம்..ம் இந்த குப்பையேல்லாம் குப்பை வண்டிக்காரன் வீட்டுல இருந்து கொண்டு வரலியே எல்லாம் எல்லாம் உங்களுடையது தான் உங்களுடைய குப்பை தான் இப்பிடி நாத்தமெடுத்திட்டு இருக்கு. அதவிட்டுட்டு உங்களோட நாத்தத்த நீங்களே சபிச்சா எப்பிடி.. அனுபவச்சுதான் ஆகணும்..’’ என்று அந்தப்பெரியவர் சொல்ல

‘‘அதுக்காக வீட்டுக்குள்ளயே எல்லாத்தையும் வச்சிருக்க முடியுமா..? இல்ல வீட்டுல போட்டுட்டு இந்த வீச்சத்த புடிச்சிட்டே இருக்க முடியுமா..? அத.. அத வைக்கவேண்டிய எடத்தில வைக்கணும் ; போட வேண்டிய எடத்தில போடணும்; அதவிட்டுட்டு வீட்டுக்குள்ளயே போடணுமா என்ன..?’’

ஒவ்வொரு வீட்டுலயும் குப்பைய வாங்கிட்டு வந்து ஆளுக நிக்கிற இந்த இடத்தில கொட்டிவச்சு உசுரப் புடுங்கணுமா என்ன?

தூரப்போயி கொட்ட மாட்டாங்க . ஊருக்குள்ளயே கொட்டிவச்சா என்ன அர்த்தம்! இப்பிடித்தான் மணக்கும்; வீசும்; நாத்தமெடுக்கும்’’ என்று சொல்ல

‘‘பட..பட..வெனக் கொட்டிக்கொண்டிருந்தனர். குப்பை விழும் போதே ஒரு விதமான வாசனையோடு விழுந்தது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவர்

‘‘ஏங்க.. இந்த குப்பைய இங்க கொட்டிட்டு இருக்கீங்க. கொஞ்சம் தூரமா போய் கொட்டலாமே..’’ என்று ஒருவர் சொல்ல

‘‘நாங்க கொட்ட தயாராதான் இருக்கோம் சார்.. ஆனா! இந்த ஏரியாவுல இருக்கிற பெரிய மனுசன் தான். இங்க கொட்டச் சொன்னாரு..’’ என்று குப்பை வண்டிக்காரன் சொல்ல

‘‘ஓ.. அப்பிடிப் போகுதோ..? பிரச்சினை..?’’ என்று அங்கிருப்பவர்கள் சொல்ல அதற்கான அர்த்தத்தை அங்கிருப்பவர்கள் புரியாமல் இல்லை.

சுத்தமற்ற எந்த இடமும் சுகாதாரமற்றவை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *