நியூயார்க், ஜூலை 3–
உலகம் முழுவதும் சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டிற்கு 60 கோடி மக்கள் நோய்வாய்ப்படுவதாகவும், அதில் 4,20,000 பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் ஆபத்து குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப்படுவதைத் தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள்.
உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதே உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்பதுதான் இந்த ஆண்டிற்கான கருப்பொருள். ஐ.நா. சபையும் பிற அமைப்புகளும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் கடந்த 5 ஆண்டுகளாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
60 கோடி பேர் பாதிப்பு
உலகில் பத்துப் பேரில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதாவது ஆண்டுதோறும் 60 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 40 சதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 4,20,000 பேர் இதனால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்துள்ளது. கிருமிகள், ரசாயனங்கள் கலந்த மோசமான உணவை உண்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். இவை புற்றுநோயைக்கூட உண்டாக்கும்.
ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பாக உட்கொள்ளப்படும் உணவுகளால் சமூகம் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரச் செலவுகள் குறைவாகவும் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவினால் ஏற்படும் அபாயங்களை கண்டறியவும், அவற்றை நிர்வகிக்கவும், நடவடிக்கை எடுப்பதும் உலக உணவுப் பாதுகாப்பு நாள் நோக்கமாக உள்ளது.