சிறுகதை

சுகர் இருக்கா? – ராஜா செல்லமுத்து

சித்ராவிற்கு கடையிலிருந்து வந்ததிலிருந்து சிரிப்பு தாளாமல் இருந்தது. சிரித்துக் கொண்டே இருந்தாள் கூடவே வீட்டிலிருந்தவர்களும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

கணவன் ரத்தினசாமி சொல்லிப் பார்த்தும் அவரால் உட சிரிப்பை அடக்க முடியவில்லை.

ரத்னசாமியும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். சித்ராவின் மகள் விஜியும் சிரித்துக் கொண்டிருந்தாள். பேரன், பேத்திகள் வீட்டிற்கு வந்தவர்கள் என்று எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அப்போது தான் வீட்டிற்கு வந்த உறவினரான வனஜாவுக்கு இவர்கள் ஏன் இப்படிச் சிரித்துக்காெண்டிருக்கிறார்கள் என்று பற்றித் தெரியாமல் இருந்தது.

ஏன் இப்படி சிரிச்சுகிட்டு இருக்கீங்க? என்ன காரணம்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன் என்று வனஜா கேட்டாள்.

அதை ஏன் கேக்குறீங்க? இன்னைக்கு ஒரு பெரிய கூத்து நடந்து போச்சு என்றார் ரத்தினசாமி

சொல்லாதீங்க என்று கணவனின் கையைப் பிடித்து இழுத்த சித்ரா சிரித்துக்கொண்டே

நான்தான் சொல்லுவேன் என்று கணவனை பேச விடாமல் மறித்தாள்.

சரி யாராவது சொல்லுங்க; என்னன்னு கேட்கலாம் என்று வனஜா சொல்ல

இன்னிக்கு காலையில நானும் வீட்டுக்காரரும் கடையில இருந்தோம் .வியாபாரம் நல்லபடியா நடந்துட்டு இருந்துச்சு. காலையிலிருந்து சாயங்கால வரைக்கும் ஒக்கார நேரம் இல்லாம ஓடி ஆடி வேலை பார்த்துட்டு இருந்தோம் .

அப்போ சாயங்காலமா ஒருத்தர் கடைக்கு வந்தார். எல்லா பொருள்களையும் வாங்கினார். வாங்கிட்டு பில்லும் போட்டுட்டு எடுத்துட்டு போய்ட்டாரு. பொருள்களை எல்லாம் எடுத்துட்டு போனவரு திடீர்னு திரும்பி வந்தவரு. சுகர் இருக்கான்னு கேட்டாரு.

வேர்க்க விறுவிறுக்க வேலை பார்த்துட்டு இருந்த எனக்கு படீர்னு கோவம் வந்துருச்சு. யாருக்கு சுகர் இருக்கான்னு கேக்குறீங்க. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். சும்மா வேர்க்குது .வேலை செஞ்சதுனால அத நினைச்சுகிட்டு நீங்க சுகர் இருக்கான்னு கேட்கிறது ரொம்ப தப்பு. நான் நல்லா உடம்ப கண்ட்ரோலா வச்சிருக்கேன். காலையில் வாக்கிங் போறேன். கட்டுப்பாடா சாப்பிடறேன். எனுக்கெல்லாம் சுகரும் இல்ல. ஒன்னும் இல்ல என்று பொருள் வாங்க வந்தவரை வாய் நிற்காமல் வார்த்தைகளை அளந்திட்டேன்.

சுகர் இருக்கான்னு கேட்டவரு வாய பிளந்தவரு வாய மூடாம அப்படியே நின்னாரு. அவராேட செய்கை பார்த்த என் வீட்டுக்காரரு.

ஏய் அவரு சுகர் இருக்கான்னு கேட்டது சர்க்கரை இருக்கான்னு கேட்கிறாரு. அது தெரியாம நீ சுகர் இருக்கான்னா , ஒனக்கு ஏதோ உடம்புல சுகர் இருக்கான்னு அவர் கேட்டதா நீ தப்பா புரிஞ்சுகிட்ட அப்படித்தானே என்று என் கணவர் கேட்டபோது,

ஆமாங்க… நான் சுகர் இருக்கான்னு கேட்டது, வீட்டுக்கு காபி, டீ போடுறதுக்கு தான் கேட்டேன்.

ஆனா உங்க வீட்டுக்காரம்மா இவ்வளவு அளந்துட்டாங்களே சுகருக்குள்ள இவ்வளவு பிரச்சனை இருக்கா ? இது தெரியாம போச்சே. இனிமே கடைக்கு போனா சர்க்கரை இருக்கான்னு கேட்கிறேன். அது கூட தப்புங்க. சுகர், சர்க்கரை ரெண்டுமே வியாதிக்கான பேர்தான். சுகரு எப்படி கேட்கிறது பேப்பர்ல எழுதி கொடுத்திட வேண்டியதுதான். இல்லன்னா முன்னாடியே இனிப்பு இருக்கா ? அப்படின்னு கேட்டுற வேண்டியதுதாங்க என்று வந்தவர் சொன்னார்.

கடையில் நானும் வீட்டுக்காரும் சிரிச்சிட்டுருந்தோம் .கடைக்கு வந்தவங்களும் சேந்து சிரிக்க எங்களுக்குள் ஒரு பெரிய சிரிப்பு பட்டிமன்றமே நடந்தது .

அத நினைச்சு இப்ப வீட்டுலயும் வந்து சிரிச்சிட்டு இருக்கம் என்று வனஜாவிடம் சித்ரா சொன்ன போது

சித்ராவும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வனஜாவிற்கு சித்ராவின் மகள் விஜி காபி கொண்டு வந்து கொடுத்தாள் குடித்துப் பார்த்த சித்ரா

சுகர் இருக்கா? என்று கேட்டாள்.

அதைக் கேட்டதும் வீட்டில் இருந்த அனைவரும் குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *